×

நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை விளக்க பயிற்சி

ஓசூர், ஜன.13: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டாரத்தில் வேளாண்மை துறையின் மூலம், மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ், அட்டூர் கிராமத்தில் நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பற்றி, விவசாயிகளுக்கு உள்மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி நடத்தப்பட்டது. பயிற்சியில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில், துணை வேளாண்மை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்), கிருஷ்ணகிரி சீனிவாசன், நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள், சொட்டுநீர் பாசனத்தின் முக்கியத்துவம், சிறுதானிய சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் உழவன் செயலி முக்கியத்துவம், செயல்பாடுகள் பற்றி விவசாயிகளுக்கு விரிவாக விளக்கமளித்தார்.

வேளாண்மை உதவி இயக்குநர், புவனேஸ்வரி இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம், உயிர் உரங்கள், நுண்ணூட்ட சத்துகள் குறைபாட்டால் உண்டாகும் நோய்கள் மற்றும் நிவர்த்தி செய்யும் முறைகள் பற்றியும், ஊட்ட மேற்றிய தொழு உரம் தயாரிப்பு மற்றும் பயன்கள் பற்றியும், கோடை உழவு செய்வதின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். அதியமான் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்சசி நிலையம், அத்திமுகம் வேளாண்மை தொழில்நுட்ப வல்லுநர் ராசுகுமார், நிலக்கடலையில் உற்பத்தி திறன் மேம்படுத்தும் தொழில்நுட்ப முறைகள், ஊடுபயிர் சாகுபடி செய்வதின் நன்மைகள், நிலக்கடலையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்படுத்தும் மேலாண்மை முறைகள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.

துணை வேளாண்மை அலுவலர், ஓசூர் முருகேசன் விதை நேர்த்தி செய்வதின் முக்கியத்துவம் பற்றியும், ஜிப்சம் அடி உரம் இடுவதின் பயன்கள் பற்றியும், உயிர் உரங்களின் நன்மைகள் பற்றியும், வேளாண்மைத்துறையின் மானியத்திட்டங்கள் பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். உதவி வேளாண்மை அலுவலர் (விற்பனை மற்றும் வணிகத்துறை), ஓசூர் சத்தியமூர்த்தி, உதவி வேளாண்மை அலுவலர், ஓசூர் சின்னசாமி, அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகுணா ஆகியோர் கலந்து கொண்டு தங்களது துறை சார்ந்த விவரங்களை கூறினர். மேலும் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு, சிறுதானிய தொழில்நுட்ப கையேடும், நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி துண்டு பிரசுரங்கள், விவசாயிகளுக்கு மானியத்தில் தார்பாலின், சிறுதானிய தொழில்நுட்ப கையேடு, உயிர் உரங்கள் வழங்கப்பட்டன. பயிற்சிக்கான ஏற்பாடுகளை, உதவி தொழில்நுட்ப மேலாளர் சண்முகம் செய்திருந்தார்.

The post நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை விளக்க பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Hosur ,Attur ,Krishnagiri District, ,Department of Agriculture ,Dinakaran ,
× RELATED வெயிலுக்கு தானாக எரிந்த பைக்குகள்