×

சென்னை அம்பத்தூரில் 10 ஏக்கர் பரப்பளவில் தரவு மையம் திறப்பு: 3 நிறுவனங்கள் இணைந்து அமைத்தன

சென்னை: சென்னை அம்பத்தூரில் 10 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட தரவு மையம் நேற்று திறக்கப்பட்டது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த வாரம் நடந்தது. இதில் காணொலி மூலம் பேசிய ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, ஜியோ நிறுவனம் தமிழ்நாட்டில் 35,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் புரூக் பீல்டு, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டிஜிட்டல் ரியாலிட்டி நிறுவனங்கள் இணைந்து ஒப்பந்தம் செய்து டிஜிட்டல் கனெக்‌ஷன் என்ற பெயரில் புதிய தரவு மையத்தை அமைத்துள்ளன. சென்னை அம்பத்தூரில் 10 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள எம்ஏஏ10 என்ற இந்த மையத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. தரவு மையத்தின் முதல் கட்டம் 20 மெகாவாட் ஐடி லோடு கொண்டதாக இருக்கும். வாடிக்கையாளர்கள் பல்வேறு பணிச்சுமை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இது துவக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப தேவைகளுக்கு ஏற்ப இது அமைந்துள்ளது. தொழில்நுட்ப துறை சார்ந்த பல்வேறு வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் எம்ஏஏ 10 என்ற இந்த மையம் கட்டமைக்கப்பட்டது. புதிய தொழில்நுட்பங்களை கைக்கொள்ள இது அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘‘தரவு மையங்களுக்கான இடமாக சென்னை வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் ஜியோ, டிஜிட்டல் ரியாலிட்டி மற்றும் புரூக்பீல்ட் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு பாராட்டத்தக்கதாகும், ’’ என்றார். நிகழ்ச்சியில் டிஜிட்டல் கனெக்ஷன் தலைமை நிர்வாக அதிகாரி சி.பி.வேலாயுதன் கூறுகையில், ‘‘சென்னையை இந்தியாவின் சிறந்த தரவு மைய மையமாக மாற்றுவதற்கான மாநில அரசின் விருப்பங்களை கருத்தில் கொண்டு இது சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

The post சென்னை அம்பத்தூரில் 10 ஏக்கர் பரப்பளவில் தரவு மையம் திறப்பு: 3 நிறுவனங்கள் இணைந்து அமைத்தன appeared first on Dinakaran.

Tags : Ambattur, Chennai ,CHENNAI ,Global Investors Conference ,Trade Center ,Nandampakam, Chennai ,Reliance Group ,Mukesh ,Dinakaran ,
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...