×

பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையிலிருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர் பயணம்: சிறப்பு பேருந்துகள், ரயில்களில் அலைமோதிய கூட்டம்

சென்னை: பொங்கல் பண்டிகைக்கான விடுமுறை இன்று முதல் தொடங்குவதால் ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இதனால், பொங்கல் சிறப்பு பேருந்துகள் நேற்று முதல் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து இன்று 1,901 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. முதல் நாளில் 1.50 லட்சம் பேர் சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். அதைத் தவிர கார்களிலும், வாகனங்களிலும் ஏராளமானவர்கள் சென்றதால் சுங்கச்சாவடிகளில் வாகன நெருக்கடி இருந்தது. முன்னதாக இறுதிக்கட்டமாக பொங்கல் பொருட்கள் மற்றும் ஜவுளி விற்பனை நேற்று களைகட்டியது.

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கிராமங்களை பொறுத்தவரை தொடர்ந்து 3 நாட்கள் பொங்கல் விழா களைகட்டி இருக்கும். தை முதல் நாளில் தைப்பொங்கல், மறுநாள் மாட்டுப்பொங்கல், அதை தொடர்ந்து காணும் பொங்கல் என்று கொண்டாட்டங்கள் நிறைந்து காணப்படும். பொங்கல் பண்டிகை என்றாலே தித்திக்கும் கரும்பு, சர்க்கரை பொங்கல் தான் நினைவுக்கு வரும். புதுப்பானையில் மஞ்சள் கொத்து கட்டி, பச்சரிசி, வெல்லம் பால் ஊற்றி பொங்கல் வைக்கப்பட்டு, உயிர்கள் வாழ ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகபொங்கலை படையலிட்டு வழிபடுவது வழக்கம்.

இந்த பொருட்களின் விற்பனை கடந்த சில நாட்களாக களைகட்டி இருந்தது. மேலும் பொங்கல் பண்டிகைக்கு புத்தாடை விற்பனை மும்முரமாக நடந்தது. பொங்கல் விடுமுறை இன்று முதல் தொடங்குவதால், கடைசிகட்டமாக பொங்கல் பொருட்கள் மற்றும் ஜவுளி பொருட்கள் விற்பனை நேற்று களைகட்டியது.  சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை, சேலம், ஈரோடு போன்ற நகரங்களில் தங்கி பணியாற்றுவோர், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாட விரும்புவர்.

அந்தவகையில் பொதுமக்கள் வசதிக்காக போக்குவரத்து துறை ஆண்டுதோறும், சிறப்புப் பேருந்துகளை இயக்குவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 19,484 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 4,706 சிறப்பு பேருந்துகளும், திருச்சி, கோவை உள்ளிட்ட பிற ஊர்களில் இருந்து 8,478 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியுள்ளது.

சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் நேற்று 901 சிறப்பு பேருந்துகளும், பிற பகுதிகளில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 1,986 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது. சென்னையில் இருந்து கோயம்பேடு, கே.கே.நகர், தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி, கிளாம்பாக்கம் ஆகிய 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த இடங்களுக்கு செல்ல மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இணைப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது.

கடந்த டிச.30ம் தேதி சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை (45) வழியாக திருச்சி, தஞ்சை, கரூர், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும், ஜன.12ம் தேதிக்கு முன்பு திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்கள், கோயம்பேடுக்கு பதில் கிளாம்பாக்கத்தில் இருந்து உரிய நேரத்தில் பயணம் செய்ய அறிவுறத்தப்பட்டது.

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு நடத்துனர்கள் மற்றும் ஒட்டுநர்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக முன்பதிவு செய்த பயணிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேருந்து புறப்படும் இடம் குறித்து அவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு பயணிகள் வருவதற்கு சிறிது நேரம் தாமதமானாலும் காத்திருந்து அவர்களை ஏற்றி செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன் படி பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அரை மணி நேரம் வரை காத்திருந்து பயணிகள் பேருந்துகளில் ஏற்றி செல்லப்பட்டனர்.

பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலம் செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்தும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகரில் இருந்தும் இயக்கப்பட்டது. திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சை செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்தும், ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பைப்பாஸ் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்பட்டது.

இவற்றை தவிர இதர ஊர்களுக்கு செல்லும் விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், கோவை, நெல்லை போக்குவரத்து கழகங்களை சேர்ந்த பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டது. இந்த 6 இடங்களில் பேருந்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் காவல் துறையினர், போக்குவரத்து கழக பணியாளர்கள் ஈடுபட்டனர். மேலும் சொந்தமாக கார்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருப்போரூர் – செங்கல்பட்டு அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

பேருந்துகளை போல ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 1.10 லட்சம் பேர் சிறப்பு பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர். சராசரியாக நேற்று ஒரே நாளில் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சொந்த ஊர்களுக்கு பேருந்துகள் முலம் பயணம் மேற்கொண்டுள்ளனர். பயணிகளின் கூட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் கூட்டத்திற்கு ஏற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று சென்னையில் இருந்து 4,000 பேருந்துகளும், பிற முக்கிய இடங்களில் இருந்து 3,131 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது.

மேலும் பொங்கல் முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,830 சிறப்புப் பேருந்துகளும், பிற ஊர்களுக்கு 6,459 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல, ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. முன்பதிவு செய்த பயணிகள் தவிர, முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணிகள் முன்டியடித்து ரயில்களில் ஏறினர். பலர் மூட்டை முடிச்சுகளுடன் சென்றதால், மிகவும் சிரமமப்பட்டு ரயில்களில் ஏறினர். பலருக்கு இடம் கிடைக்காமல், மீண்டும் பேருந்து நிலையங்கள் வந்து சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

* 1.25 லட்சம் பேர் முன்பதிவு
பொங்கலை முன்னிட்டு இதுவரை 1.25 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது 82,000 பேர் முன்பதிவு செய்த நிலையில் இந்தாண்டு சென்னையில் இருந்து செல்வதற்கு 85,755 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

* புகார் அளிக்க எண்கள் அறிவிப்பு
பேருந்துகள் இயக்கம் குறித்த தகவலை பெறவும், புகார் அளிக்கவும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 9445014450, 9445014436 ஆகிய அலைபேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம். தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக 1800 425 6151,044 – 24749002, 26280445, 26281611 என்ற இலவச எண்ணில் புகார் அளிக்கலாம்.

* ஆம்னி கட்டணம் அதிரடி உயர்வு
வழக்கம்போல ஆம்னி பேருந்துகளின் கட்டண இந்த பொங்கல் பண்டிகைக்கும் உயர்த்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லைக்கு செல்லும் பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக ரூ.500 முதல் ரூ.800 வரை கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.

The post பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையிலிருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர் பயணம்: சிறப்பு பேருந்துகள், ரயில்களில் அலைமோதிய கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pongal festival ,Pongal ,
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா