×

தைப்பொங்கல் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 12,176 காளைகள், 4,514 காளையர் பதிவு

மதுரை: தைப்பொங்கலையொட்டி அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 12,176 காளைகள், 4,514 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற அமைச்சர் பி.மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:

மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக 12,176 காளைகளும், 4,514 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர். இதில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 6,099 காளைகளும், பாலமேட்டில் 3,677 காளைகள் மற்றும் அவனியாபுரத்தில் 2,400 காளைகள் பங்கேற்பதற்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதுபோல அலங்காநல்லூரில் 1,784 வீரர்கள், பாலமேட்டில் 1,412 வீரர்கள், அவனியாபுரத்தில் 1,318 வீரர்கள் முன்பதிவு செய்து உள்ளனர். ஆன்லைனில் பதிவு செய்தவர்களின் விபரங்களை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது. ஆதார் கார்டை மாற்றி பங்கேற்பதை தடுப்பதற்காக இந்த ஆய்வு நடைபெற்று முடிந்துள்ளது.

ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பெயர்கள், வரிசைப்படி எங்கெங்கு ஜல்லிக்கட்டு நடக்குமோ அந்தந்த இடங்களில் அறிவிக்கப்படும். மருத்துவக்குழுவினர் மருத்துவ உதவிகளை செய்ய தயார் நிலையில் உள்ளனர். கால்நடைத்துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஜல்லிக்கட்டில் சிறந்த காளைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பாக கார் பரிசாக கொடுக்கப்படும். சிறந்த வீரர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் கொடுக்கப்படும்.

அன்புமணி ராமதாஸ் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தால் அதனை சிறந்த வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு அவர் பெயரிலேயே வழங்குவதற்கு தயார்.தொடர் ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் புதிய பிரமாண்ட ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்த வைத்த தினத்தில் இருந்து தொடர்ந்து 5 நாட்களுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறும்.

ஒவ்வொரு நாள் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கும் அதிகப்படியாக 1,000 காளைகள் அவிழ்த்து விட முடியும். மீதம் பதிவு செய்யப்பட்டுள்ள காளைகளும் அந்த புதிய ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தில் அவிழ்த்து விடப்பட்டு விடும். வெளிநாட்டினர், வெளிமாநிலத்தினர், பொதுமக்கள் எளிதாக பார்க்கும்படியான வசதிகள் கொண்டதாக புதிய ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

The post தைப்பொங்கல் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 12,176 காளைகள், 4,514 காளையர் பதிவு appeared first on Dinakaran.

Tags : Taipongal Jallikat ,MADURAI ,JALLIKATTU ,TAIPONGALAIOTTI ,AVANIAPURAM ,PALAMEDU ,ALANGANALLUR ,Jallikatu ,Madurai Collector's Office ,P. Murthy ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை