×

வாலாஜாபாத் அருகே செயற்கை அலங்கார பூ தொழிற்சாலையில் தீ விபத்து: பலகோடி பொருட்கள் எரிந்து நாசம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அருகே நேற்று நள்ளிரவு ஒரு தனியார் செயற்கை ரசாயன பூ அலங்கார தொழிற்சாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பலகோடி மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமாகின. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். வாலாஜாபாத்தில் இருந்து தாம்பரம் செல்லும் சாலையை ஒட்டியுள்ள தத்தாநல்லூர் கிராமத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில், ஒரு தொழிற்சாலையில் செயற்கை ரசாயன முறை பூக்கள், பூச்செண்டு மற்றும் உள்அலங்காரப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் வடமாநிலத் தொழிலாளர்கள் என 150க்கும் மேற்பட்டோர் பகல் நேரங்களில் மட்டுமே வேலைபார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை வழக்கம் போல் வேலை முடிந்து தொழிற்சாலையைப் பூட்டிவிட்டு அனைத்து தொழிலாளர்களும் வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவு பூட்டியிருந்த செயற்கை பூ தொழிற்சாலையில் திடீரென கரும்புகையுடன் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. இதை கண்டதும் கிராம மக்கள் காஞ்சிபுரம் தீயணைப்பு படையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

எனினும், தொழிற்சாலை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் ஒரகடம், பெரும்புதூர் மற்றும் பெருந்தொழிற்சாலைகளில் இருந்து 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சுமார் 3 மணி நேரத்துக்குமேல் போராடி இன்று காலை 6 மணியளவில் தொழிற்சாலையில் பரவியிருந்த தீயை முற்றிலும் அணைத்தனர். இவ்விபத்தில், தொழிற்சாலைக்குள் உற்பத்தி செய்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள், மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் என மொத்தம் பலகோடி மதிப்புள்ள பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமாகிவிட்டன.

மேலும், தீயின் வெப்பம் தாங்காமல் அதன் இரும்பு மேற்கூரைகள் கீழிறங்கிவிட்டன. அதன் பக்கவாட்டு சுவர்களில் எந்நேரத்திலும் இடிந்து விழக்கூடிய சூழலில் ஏராளமான விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து தகவலறிந்ததும் காஞ்சிபுரம் காவல் டிஎஸ்பி ஜூலியஸ் சீசர், வாலாஜாபாத் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். இதுகுறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

The post வாலாஜாபாத் அருகே செயற்கை அலங்கார பூ தொழிற்சாலையில் தீ விபத்து: பலகோடி பொருட்கள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Walajabad ,Wallajabad ,Tambaram… ,Dinakaran ,
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...