×

உடுமலை சுற்றுவட்டார கிராமங்களில் பொங்கல் பண்டிகைக்காக வெல்லம் உற்பத்தி தீவிரம்

உடுமலை : பொங்கல் பண்டிகை நெருங்கியதால், உடுமலை சுற்றுவட்டார பகுதியில் வெல்லம் தயாரிப்பு தீவிரமடைந்துள்ளது.கடந்த பத்து நாட்களில் சுமார் 500 டன் உற்பத்தி செய்யப்பட்டு மார்க்கெட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.தமிழர் திருநாளாம் தைத்திங்கள் முதல்நாளான பொங்கல் பண்டிகை விவசாயிகளுக்கான பண்டிகை. 4 நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையின் முக்கிய அம்சமே சர்க்கரை பொங்கல் வைத்து உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் வழங்குவது.

அது மட்டுமின்றி மாட்டுப்பொங்கல் பண்டிகையின் போது கால்நடைகளுக்கு சர்க்கரை பொங்கலை ஊட்டுவதும், உழவுக்கு உறுதுணையாக இருக்கும் சூரிய பகவானுக்கும் சர்க்கரை பொங்கல் படைக்கப்படுகிறது. வீடுகளில் மட்டுமின்றி கோயில்கள்,சமத்துவ பொங்கல் நடைபெறும் பள்ளி,கல்லூரிகள்,சமுதாய நலக்கூடங்கள் போன்றவற்றிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சர்க்கரை பொங்கலிடும் நிகழ்ச்சி களை கட்டி விட்டதால் வெல்லம் உற்பத்தி மற்றும் விற்பனை களை கட்டி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் அமராவதி பாசனப் பகுதிகளில் உடுமலை,மடத்துக்குளம் தாலுகாக்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் கரும்பு பயிரிடப்பட்டு வருகிறது.கரும்பு விவசாயிகளில் பலர் அமராவதி சர்க்கரை ஆலைக்கு தங்களது கரும்புகளை ஒப்பந்த அடிப்படையில் வழங்கி வருகின்றனர்.ஒரு சிலர் தாங்களாகவே கரும்பினை அறுவடை செய்து பாகு காய்ச்சி அவற்றை உருண்டை வெல்லமாகவும்,அச்சு வெல்லமாகவும், நாட்டுசர்க்கரையாகவும் மாற்றி சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.குறிப்பாக, பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்க பல பிரசாதக்கடை உரிமையாளர்கள் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெல்லம் கொள்முதல் செய்கின்றனர்.இதுதவிர கேரள மாநிலம் சபரிமலை, குருவாயூர் கிருஷ்ணன் கோயில் போன்றவற்றில் வழங்கப்படும் பிரசாதத்திற்கும் உடுமலையில் இருந்தே வெல்லம் கொள்முதல் செய்யப்படுகிறது.

தற்போது தமிழகத்தில் பருவமழை நன்றாக பெய்ததன் காரணமாக கரும்புக்கு தேவையான தண்ணீர் கிடைத்து நல்ல மகசூல் கிடைத்துள்ளது. ஆனால் விவசாயிகள் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. அமராவதி சர்க்கரை ஆலையை புனரமைத்து கூடுதலாக கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது தமிழகத்தில் வெல்ல விற்பனை களை கட்டும்.

இதையடுத்து, தற்போது உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் வெல்லம் தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது.இதுகுறித்து, கரும்பு விவசாயிகள் மற்றும் வெல்லம் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: அரசு சார்பில் தமிழக மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வெல்லம் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.ஆனால் சில ஆண்டுகளாக வெல்லம் வழங்கப்படவில்லை.அரசே கொள்முதல் செய்து, ரேசன் கடைகளில் வழங்க வேண்டும்.இதன் மூலம் கரும்பு பயிரிட்ட விவசாயிகள், வெல்லம் காய்ச்சும் தொழிலாளர்கள் வாழ்க்கை மேம்பட வாய்ப்புள்ளது.மேலும் வியாபாரிகள் முன்கூட்டியே விலை நிர்ணயம் செய்வது தவிர்க்கப்பட்டு, விளைபொருட்களுக்கு ஏற்ற விலை கிடைக்க வாய்ப்புள்ளது.

அடுத்த ஆண்டிலாவது ரேஷன் கடைகளில் வெல்லம் வழங்குவதால் ஏழை, எளிய மக்களும் மகிழ்ச்சியுடன் பொங்கலை கொண்டாட வாய்ப்பு கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.சாமராயபட்டியை சேர்ந்த வெல்லம் உற்பத்தியாளர் கிருஷ்ணசாமி கூறுகையில், “30 கிலோ கொண்ட அச்சுவெல்லம் சிப்பம் முன்பு ரூ.1200 முதல் ரூ.1250 வரை விற்பனையானது. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 30 கிலோ சிப்பம் ரூ.1400 முதல் ரூ.1450 வரை விற்கப்படுகிறது.

உருண்டை வெல்லம் 30 கிலோ சிப்பம் ரூ.1500 வரை விற்பனையாகி வருகிறது. நாட்டு சர்க்கரை கிலோ ரூ.55 வரை விற்பனையாகிறது. பொங்கல் முடிந்ததும் இவற்றின் விலை மீண்டும் பழையபடி இறங்கி விடும். பொள்ளாச்சி மற்றும் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி ஆகிய பகுதிகளில் வாரந்தோறும் இருமுறை வெல்லத்திற்கான மார்க்கெட் நடைபெறுகிறது. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்ல விற்பனை சூடு பிடித்துள்ளது. உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களில் 400 முதல் 500 டன் வெல்லம் உற்பத்தி நடைபெற்றுள்ளது.

கடந்த 15 வருடமாக ஒரே விலைதான் உள்ளது. உர விலை, ஆட்கள் கூலி அதிகரித்துவிட்டது. முன்பு ஒரு டன் கரும்பு கட்ட கூலி ரூ.130தான். தற்போது ஆயிரம் ரூபாயாக உயர்ந்துவிட்டது.மொத்த கரும்பு பயிரிடுவதில் 20 சதவீதம்தான் வெல்லம் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. விவசாயிகளுக்கும் பெரிய அளவில் லாபமில்லை.ஒரு ஏக்கருக்கு 30 டன் கரும்பு கிடைக்கும். டன் ரூ.1500 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனையாகும். ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் கிடைக்கும். ஆனால் செலவு அதிகம்.அரசு உரிய விலை நிர்ணயித்து, வெல்லத்தை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post உடுமலை சுற்றுவட்டார கிராமங்களில் பொங்கல் பண்டிகைக்காக வெல்லம் உற்பத்தி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Pongal festival ,Udumalai ,Dinakaran ,
× RELATED பொங்கல் விழாவில் முளைப்பாரி ஊர்வலம்