×

கடலுக்கு நடுவே நாட்டின் மிக நீளமான அடல் சேது பாலம்..பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்!!

மும்பை : நாட்டின் மிக நீளமான பாலமான ‘அடல் சேது’ பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் செல்லும் பிரதமர் மோடி, அங்கு 27-வது தேசிய இளைஞர் விழாவைத் தொடங்கி வைக்கிறார். பிற்பகல் 3.30 மணியளவில், மும்பையில், அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி – நவ சேவா அடல் பாலத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்து அதில் பயணம் செய்கிறார்.

அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி – நவ சேவா அடல் பாலம்

‘அடல் பிஹாரி வாஜ்பாய் சேவாரி – நவ சேவா அடல் பாலம்’ என பெயரிடப்பட்டுள்ள மும்பை டிரான்ஸ்ஹார்பர் இணைப்புப் பாலத்திற்கு (துறைமுகங்களை இணைக்கும் பாலம்) கடந்த 2016 டிசம்பரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.மொத்தம் ரூ.17,840 கோடி செலவில் அடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. இது சுமார் 21.8 கி.மீ நீளமுள்ள 6 வழிப் பாலமாகும், இது கடலில் சுமார் 16.5 கி.மீ நீளமும், நிலத்தில் சுமார் 5.5 கி.மீ நீளமும் கொண்டது. இது இந்தியாவின் மிக நீளமான பாலம் மற்றும் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம் ஆகும்.

இது மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு விரைவான இணைப்பை வழங்கும். மேலும் மும்பையில் இருந்து புனே, கோவா மற்றும் தென்னிந்தியாவிற்கான பயண நேரத்தையும் குறைக்கும். இது மும்பை துறைமுகம் மற்றும் ஜவஹர்லால் நேரு துறைமுகம் இடையேயான இணைப்பை மேம்படுத்தும்.

நவி மும்பையில் பொது நிகழ்ச்சி

நவி மும்பையில் ரூ.12,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் முடிவடைந்தத் திட்டங்களை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.கிழக்கு ஃப்ரீவேயின் ஆரஞ்சு கேட் முதல் மரைன் டிரைவ் வரை சுரங்கப் பாதைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். 9.2 கி.மீ சுரங்கப்பாதை ரூ 8700 கோடி செலவில் கட்டப்படும். இது ஆரஞ்சு கேட் மற்றும் மரைன் டிரைவ் இடையேயான பயண நேரத்தைக் குறைக்கும்.

சூர்ய பிராந்திய மொத்த குடிநீர் திட்டத்தின் முதல் கட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். ரூ.1975 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம் மகாராஷ்டிராவின் பால்கர் மற்றும் தானே மாவட்டத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யும். இதனால் சுமார் 14 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.இந்த நிகழ்ச்சியின் போது, சுமார் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.

The post கடலுக்கு நடுவே நாட்டின் மிக நீளமான அடல் சேது பாலம்..பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்!! appeared first on Dinakaran.

Tags : Atal Setu Bridge ,Modi ,Mumbai ,Narendra Modi ,Atal Setu ,Maharashtra ,Nashik ,27th National Youth Festival ,
× RELATED மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்;...