×

பாஜ கூட்டணியில் இருக்கும்போது ஆதரவு ; வெளியே வந்த பிறகு எதிர்ப்பு: எடப்பாடியின் ‘சிஏஏ உருட்டுகள்’: சிறுபான்மையினரை பாதுகாத்தது அதிமுகவா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

மதுரை: தாங்கள் வாக்களிக்காவிட்டால் சட்டம் நிறைவேறாது என்ற நிலையிலும், முஸ்லிம்களுக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) ஆட்சியில் இருந்தபோது வாக்களித்து வரவேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் பாராளுமன்ற தேர்தலை குறிவைத்து தற்போது சிறுபான்மையினரை பாதுகாப்பதாக பேசி நடித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. எஸ்டிபிஐ கட்சியின் ‘வெல்லட்டும் மதச்சார்பின்மை மாநாடு’ மதுரையில் ஜன. 7ம் தேதி நடந்தது.

இதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசும்போது, ‘‘இம்மாநாட்டில் சிஏஏ பற்றி பேசினார்கள். அப்போது போராட்டம் நடந்தது. சிறுபான்மை மக்கள் போராட்டம் நடத்தினர். நாங்கள் முழு பாதுகாப்பு கொடுத்தோம், எப்போது, யார் கேட்டாலும் போராட்டம் நடத்த அனுமதித்தோம்’’ என்று முஸ்லிம்கள் நிரம்பி வழிந்த மாநாட்டு அரங்கிலேயே முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வகையில் திடீர் பல்டி அடித்து பேசினார். இவரது இந்த அந்தர்பல்டி பேச்சு, சமூக வலைத்தளங்களில் தற்போது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 2020, பிப். 18ல் சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக முஸ்லிம்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அவர்கள் மீது தடியடி நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எஸ்டிபிஐ கட்சி உட்பட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.போராட்டக்காரர்களுக்கு எதிராக அன்றைய அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் அரசு செயல்பட்ட நிலையில், ‘‘நாங்கள் முழு பாதுகாப்பு கொடுத்து, கேட்கும்போதெல்லாம் போராட்டம் நடத்த அனுமதி கொடுத்தோம்’’ என்று தற்போது எஸ்டிபிஐ கட்சி மாநாட்டில் பேசியிருப்பது அத்தனை தரப்பினரையும் ஆத்திரத்திற்கு ஆளாக்கியுள்ளது.

குறிப்பாக, எடப்பாடியின் இந்த முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் பேச்சைக் கேட்டு முஸ்லிம் சமூகத்தினரே கொந்தளிப்பில் உள்ளார்கள். அதிமுக ஆட்சியில் இருந்தபோது சிஏஏ சட்டத்தை தீவிரமாக ஆதரித்த எடப்பாடி பழனிசாமி, ‘‘இந்த சட்டத்தால் சிறுபான்மையினர் பாதித்துள்ளனரா? யார் பாதித்தது? சொல்லுங்கள்? பதில் சொல்கிறேன்’’ என்று பேரவையில் அப்போது ஆவேசமாகப் பேசி கேள்வி எழுப்பினார். ஆனால், எஸ்டிபிஐ மதுரை மாநாட்டில் அப்படியே நிறம் மாறி, ‘‘நாட்டு மக்களுக்காக சூழ்நிலை கருதி பாஜவினருடன் கூட்டணி வைத்தோம்’’

எனத் தெரிவித்த அவர், ‘‘நான்கரை ஆண்டு காலம் ஆட்சியை நடத்துவதற்கு மிகவும் துன்பப்பட்டேன், கட்சியை விட்டுச் சென்ற நபரை அதிமுகவில் வைத்துக் கொண்டு நான் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அரசைக் காப்பாற்ற சகித்துக் கொண்டிருந்தோம். நான் எதிர்த்து ஓட்டு போட்டிருந்தால் ஆட்சி இருந்திருக்காது என்றார் அந்த நபர். அவர் அதிமுகவுக்கு எதிராக வாக்கு அளித்தபோதும் எங்கள் ஆட்சி இருந்தது…நான் தவிழ்ந்து தவிழ்ந்துதான் உயர் பதவிக்கு வந்தேன்’’ என எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் குறித்து பேசி பல்டி அடித்தார்.

மாநாட்டில் சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் கட்சி அதிமுக எனப் பேசியுள்ள எடப்பாடி பழனிசாமி, சிறுபான்மையினருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பாஜ சட்டம் இயற்றியபோது, அதிமுகவின் ஒரே எம்பியான ரவீந்திரநாத் இச்சட்டத்தை ஆதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலங்களவையில் இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) 125 எம்பிகள் ஆதரித்தனர். 105 எம்பிகள் எதிர்த்தனர். மாநிலங்களவையின் அதிமுகவின் 11 பேர் இந்த சட்டத்தை எதிர்த்து வாக்களித்திருந்தாலே, ஆதரவு பட்டியலில் 116 பேர்தான் வந்திருப்பர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான மசோதா ஒருபோதும் நிறைவேறி இருக்காது. அதிமுக எம்பிக்கள் 11 பேர் அளித்த ஆதரவு மட்டுமே, இந்த மசோதா நிறைவேற முக்கியக் காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். பாஜவுடன் கூட்டணியில் இருந்தபோது பல்வேறு ஊழல் வழக்குகளுக்கு பயந்து ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, ஒன்றிய பாஜ அரசு கொண்டு வரும் மக்களுக்கு எதிரான சட்டங்களை ஆதரவு அளித்த வந்தது அதிமுக. இந்த வகையில் சிஏஏ மசோதாவுக்கு ஆதரவளித்து, சிறுபான்மையினருக்கு துரோகம் செய்தார் எடப்பாடி.

பாஜவுடன் கூட்டணி இருந்ததால் கடும் எதிர்ப்புகளை சந்தித்து, எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்தாலும், சிறுபான்மையினர் வாக்குகளை இழந்ததாலும் அதிமுக மூத்த நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கினர். இதனால், பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. இதையடுத்து, அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி அறிவித்தார். குறிப்பாக, சிறுபான்மையினர் வாக்குகளை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

இதற்காக இஸ்லாமியர்கள் மாநாடு, கிறிஸ்தவர்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். வரும் பாராளுமன்ற தேர்தல் மனதில் வைத்துக் கொண்டு, எஸ்டிபிஐ மாநாட்டில் இஸ்லாமியர்களை பாதுகாத்தது அதிமுகதான் என்ற ரீதியில் பொய்யை சரளமாக அடித்து தள்ளி உள்ளார். முதல்வராக இருந்தவர்கள் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்தில் சிஏஏ சட்டம் குறித்து என்ன செய்தோம் என்று கூட தெரியாமலா இப்படி பேசுவார் என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக, எடப்பாடியின் ‘சிஏஏ உருட்டல்கள்’ என முன்பு பேசிய வீடியோக்களையும், இப்போது பேசிய வீடியோக்களையும் சமூகவலைதளத்தில் பதிவிட்டு கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதன் மூலம் எடப்பாடியின் சிறுபான்மையினரின் பாதுகாவலன் என்ற சாயம் வெளுத்துவிட்டதாக அரசியல் கட்சி தலைவர்கள், விமர்சர்களும் தெரிவித்து வருகின்றனர்.

* அதிமுக ஆதரவால் நிறைவேற்றப்பட்ட சிஏஏ மசோதா
மக்களவையில் பாஜவுக்கு பெரும்பானமை இருந்ததால் சிஏஏ மசோதா எளிதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் அதிமுக ஆதரவு இல்லாமல் மசோதா நிறைவேற்ற முடியாத நிலை இருந்தது. தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் ஆட்சியை காப்பாற்றுவதற்காக அதிமுக அன்று சிஏஏ மசோதாவுக்கு ஆதரவு அளித்ததால் மசோதா நிறைவேறியது.

The post பாஜ கூட்டணியில் இருக்கும்போது ஆதரவு ; வெளியே வந்த பிறகு எதிர்ப்பு: எடப்பாடியின் ‘சிஏஏ உருட்டுகள்’: சிறுபான்மையினரை பாதுகாத்தது அதிமுகவா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் appeared first on Dinakaran.

Tags : BJP alliance ,Edappadi ,AIADMK ,Madurai ,General ,Edappadi Palaniswami ,CAA ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்