×

இரவு நேரத்தில் சாலையை கடந்த சிறுத்தை வீடியோவால் பரபரப்பு பேரணாம்பட்டு அருகே

பேரணாம்பட்டு, ஜன.12: பேரணாம்பட்டு அருகே வனப்பகுதியில் இருந்து கிராமத்தை நோக்கி சாலையை கடந்து சென்ற சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அதேநேரத்தில் இதுபற்றி உறுதியான தகவல் இல்லை. இருந்தாலும், மக்கள் அதனால் அச்சப்பட வேண்டாம் என்று மாவட்ட வன அலுவலர் கலாநிதி தெரிவித்துள்ளார். பேரணாம்பட்டு அருகே வனப்பகுதியில் இருந்து கிராமப்பகுதியை நோக்கி இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று சாலையை கடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலாக பரவியது. பேரணாம்பட்டு, குடியாத்தம் வனப்பகுதிகள் ஆந்திர மாநிலம் கவுண்டன்யா வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன.

இங்கு யானைகள், சிறுத்தைகள், குள்ளநரி, காட்டுப்பன்றிகள், மான்கள் போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம். குறிப்பாக பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா, பாஸ்மர்பெண்டா, சாரங்கல், பத்தலப்பல்லி, கோட்டையூர், எருக்கம்பட்டு, குண்டலபல்லி போன்ற கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இந்த கிராமங்களில் அடிக்கடி வனவிலங்குகள் தண்ணீர் தேடி அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து விளைநிலங்களை நாசம் செய்து வருகின்றன. இந்நிலையில், பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கிராமத்திற்கு செல்லும் சாலையில் சிறுத்தை ஒன்று நேற்று முன்தினம் இரவு சாவகாசமாக சாலையை கடந்து சென்றதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மொபைல் போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர். தற்போது இந்த வீடியோ குடியாத்தம், பேரணாம்பட்டு வட்டாரங்களில் வைரலாக பரவி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரத்தில், சமூக வலைதளத்தில் பரவிய வீடியோ பதிவை வைத்து வனத்துறையினர் பேரணாம்பட்டு வனப்பகுதியை ஒட்டியுள்ள எருக்கம்பட்டு, கோட்டையூர் கிராமங்களுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் கலாநிதியை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘இதுவரை அதுபற்றி ஏதும் தகவல் இல்லை. அதேநேரத்தில் அந்த பகுதி கவுண்டன்யா வனத்தை ஒட்டிய பகுதி என்பதால் அவ்வபோது விலங்குகள் தமிழக எல்லைக்குள் வரும். இதுபற்றி விசாரிக்கிறேன். மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்’ என்றார்.

The post இரவு நேரத்தில் சாலையை கடந்த சிறுத்தை வீடியோவால் பரபரப்பு பேரணாம்பட்டு அருகே appeared first on Dinakaran.

Tags : Peranampatu ,District Forest Officer ,Kalanithi ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...