×

10 ஆண்டுகால ஒன்றிய பாஜ அரசின் அநியாய ஆட்சி ஜனநாயகம், அரசியலமைப்பை கடுமையாக பாதித்துள்ளது: அகில இந்திய காங். நிர்வாகிகள் குற்றச்சாட்டு

சென்னை: கடந்த 10 ஆண்டு கால ஒன்றிய பாஜ அரசின் அநியாய ஆட்சி, ஜனநாயகத்தையும், இந்திய அரசியலமைப்பையும் கடுமையாக பாதித்துள்ளது என்று அகில இந்திய காங்கிரஸ் ஊடக பொறுப்பாளர் சரமாரியாக குற்றம்சாட்டினார். அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், செய்தி தொடர்பாளருமான மது கவுட் யாக்ஷி, அகில இந்திய காங்கிரஸ் தகவல் தொடர்பு ஊடக தமிழக பொறுப்பாளர் பாவ்யா நரசிம்மமூர்த்தி ஆகியோர் நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவன் வந்தனர். அங்கு நடந்த நிகழ்ச்சியில், இந்திய ஒற்றுமை நீதிப்பயணம் குறித்த சிறப்பு நூலை வெளியிட்டனர்.

தொடர்ந்து, அவர்கள் அளித்த பேட்டி: கடந்த 10 ஆண்டு கால அநீதியான, அநியாயமான ஒன்றிய பாஜ ஆட்சி, நமது மக்களையும் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் கடுமையாகப் பாதித்துள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு தலைதூக்கியுள்ள வேலையில்லா திண்டாட்டம் இளைஞர்களின் கனவுகளையும் எதிர்காலத்தையும் தகர்த்துள்ளது. ஒரு சில கோடீசுவரர்கள் இந்த ஆட்சியைக் கைப்பாவையாக்கி ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அனைத்து தன்னாட்சி நிறுவனங்களின் கழுத்தும் நெரிக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கவிழ்ப்பதற்கும் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுவது வழக்கமாகிவிட்டது. எதிர்க்கட்சி எம்பிக்களை ஒட்டுமொத்தமாக சஸ்பெண்ட் செய்துவிட்டு சட்டம் இயற்றப்படுகிறது. 2012ல் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 1 கோடியாக இருந்தது. 2022ல் 3 மடங்காக அதிகரித்து 4 கோடியாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சிஎன்ஜி, மாவு, பருப்பு, அரிசி, சமையல் எண்ணெய், பால் என அனைத்துப் பொருட்களின் விலையும் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளன. அத்தியாவசியப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.

50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குடும்பங்களின் சேமிப்பு குறைந்துள்ளது. பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிகளை பாஜ விடுதலை செய்கிறது. பிரிஜ் பூசன் ஷரன் சிங், செங்கார் உள்ளிட்ட பாலியல் குற்றஞ்சாட்டப்பட்டவர்களையும் குற்றவாளிகளையும் பாஜ பாதுகாக்கிறது. இந்திய தேர்தல் ஆணையத்தில் பற்கள் பிடுங்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகளை ஒடுக்க பாஜ மற்றும் பிரதமர் மோடி மேற்கொள்ளும் அத்துமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. பாஜ அரசின் அநீதியான ஆட்சிக்கு நீதி கேட்டு ராகுல் காந்தியின் நடைபயணம் மணிப்பூரில் இருந்து ஜனவரி 14ம் தேதி தொடங்குகிறது. இந்த பயணம் 6,713 கி.மீ சென்று மார்ச் 20ம் தேதி மும்பையில் நிறைவு பெறுகிறது. இதன் மூலம் 110 மாவட்டங்களையும் 15 மாநிலங்களையும் நடைப்பயணம் கடக்கிறது.

The post 10 ஆண்டுகால ஒன்றிய பாஜ அரசின் அநியாய ஆட்சி ஜனநாயகம், அரசியலமைப்பை கடுமையாக பாதித்துள்ளது: அகில இந்திய காங். நிர்வாகிகள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Union BJP government ,All India Congress ,CHENNAI ,Spokesperson ,Madhu ,Dinakaran ,
× RELATED தேர்தல் பத்திரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்