×

மாணவர்களுக்கு கஞ்சா சாக்லெட் விற்பனை: கடைக்காரர் கைது

திருமலை: பள்ளி மாணவர்களுக்கு ரூ.20க்கு கஞ்சா சாக்லெட் விற்பனை செய்த பான்மசாலா கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம், கோதூரில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்களில் பலர் மதிய உணுவு இடைவேளைக்கு பிறகு போதையில் இருப்பதாக ஆசிரியர்களுக்கு தெரிய வந்தது. இதுதொடர்பாக மாணவர்களிடம் ஆசிரியர்கள் விசாரித்தனர். அப்போது பள்ளிக்கு அருகில் பான் மசாலா கடையில் இலவசமாக வழங்கப்படும் போதை சாக்லெட் சாப்பிட்டு மாணவர்கள் போதையானது தெரியவந்தது.

இதுகுறித்து ஆசிரியர்கள் ஷம்ஷாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் நேற்று அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது கடையில் கஞ்சா கலந்த போதை சாக்லெட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சுமார் 9 கிலோ எடை கொண்ட போதை சாக்லெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், கடைக்காரரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், ஒடிசாவில் இருந்து வரும் கும்பல் போதை சாக்லெட்டுகளை சப்ளை செய்வதும், கோதூர் கிராமத்தில் உள்ள பல மளிகை கடைகளில் விற்பனை செய்வதும் தெரியவந்தது.

மேலும் பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் வகையில், முதலில் கடைக்காரர் இலவசமாக சாக்லெட் கொடுத்துள்ளார். அதில் சுவை அதிகளவு இருந்ததாலும், போதை ஏறியதாலும் மாணவர்கள் மீண்டும் சாக்லெட் கேட்டபோது ரூ.20க்கு விற்பனை செய்துள்ளார். தொடர்ந்து எந்தெந்த பகுதிகளில் போதை சாக்லெட் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்து வரும் போலீசார், இதன் பின்னணியில் உள்ளவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post மாணவர்களுக்கு கஞ்சா சாக்லெட் விற்பனை: கடைக்காரர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Govt High School ,Kotur, Rangareddy District, Telangana ,
× RELATED மணப்பாறை அருகே வாக்களித்த பெற்றோர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற மாணவர்கள்