×

மார்கழி அமாவாசையையொட்டி திண்டுக்கல் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு: மல்லிகை கிலோ ரூ.2000க்கு விற்பனை

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகேயுள்ள சின்னாளப்பட்டி, ஏ.வெள்ளோடு, அம்பாத்துரை, கன்னிவாடி, தருமத்துப்பட்டி, குட்டத்து ஆவாரம்பட்டி, வீரக்கல் கூத்தாம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பூக்கள் சாகுபடியில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு சாகுபடி செய்யப்படும் பூக்கள் திண்டுக்கல் அறிஞர் அண்ணா பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகின்றன. இந்த மார்க்கெட்டில் இருந்து தஞ்சை, சென்னை, ஈரோடு, சேலம், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் இங்கிருந்து பூக்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. அதனைத் தொடர்ந்து பனிப்பொழிவும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அண்ணா பூ மார்க்கெட்டிற்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளது. இதையொட்டி இங்கு மல்லிகை, கனகாம்பரம், முல்லைப்பூ உள்ளிட்ட பூக்கள் அதிக விலைக்கு விற்பனையானது.

ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2,000க்கும், கனகாம்பரம் ரூ.1,000க்கும், முல்லைப்பூ ரூ.1,000க்கும், ஜாதிப்பூ ரூ.650க்கும், ரோஜாப்பூ ரூ.160க்கும், செண்டுமல்லி ரூ.40க்கும், செவ்வந்தி ரூ.50க்கும், சம்பங்கி ரூ.130க்கும், கோழிக்கொண்டை ரூ.80க்கும், அரளி பூ ரூ.150க்கும், மரிக்கொழுந்து ரூ.90க்கும், காக்கரட்டான் ரூ.900க்கும், விரிச்சிப்பூ ரூ.130க்கும், பட்டன் ரோஸ் ரூ.200 முதல் 230 வரையிலும், தாமரைப்பூ ஒன்று ரூ.20க்கும் விற்பனையானது.
இந்நிலையில் இன்று அனுமன் ஜெயந்தி மற்றும் அமாவாசை தினம் என்பதால் பூ மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனால் பூக்கள் விலை உயர்வால் பெரும்பாலானோர் குறைந்த அளவிலேயே பூக்களை வாங்கி சென்றனர்.

The post மார்கழி அமாவாசையையொட்டி திண்டுக்கல் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு: மல்லிகை கிலோ ரூ.2000க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Margazhi ,Chinnalapatti ,A.Vellodu ,Ampathurai ,Kanniwadi ,Dharumathupatti ,Kuttattu Avarampatti ,Veerakkal Koothampatti ,Anna Poo ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்லில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்