×

மசாலாக்களின் மறுபக்கம்… மிளகு

நன்றி குங்குமம் டாக்டர்

உணவியல் நிபுணர் வண்டார்குழலி

தென்னிந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட மிளகு மசாலாக்களின் ராஜா (king of spices) என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது. உணவு, மருத்துவம், வணிகம் என்று பல்நோக்கில் நன்மையளிக்கும்; மிளகினை ஐரோப்பியர்கள் கருப்புத் தங்கம் என்றழைத்தனர். Piper nigreum என்ற தாவரப்பெயர் கொண்ட மிளகு, Piperaceae குடும்பத்தைச் சார்ந்தது. கருமிளகு, வெண்மிளகு, சிவப்புமிளகு, பச்சைமிளகு என்று அதைப் பக்குவப்படுத்தும் முறைகள் மூலம் வகைப்படுத்தப்படுகிறது.

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, மிளகு பயன்பாட்டில் இருந்து வருகிறது. Spice Route எனப்படும் மசாலாப்பாதையின் மிக முக்கியப் பொருளாகக் கருதப்பட்ட மிளகினால் பல கடல்வழிப் பயணங்கள் அக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டன என்பதுடன், ஐரோப்பாவில் நாணயமாகவும் பயன்படுத்தப்பட்டது என்பது ஆச்சரியமான உண்மை. மிளகின் தேவையும், அதற்கான போட்டியும் அதிகரித்தது. இதனால், மிளகைக் காக்கும் பொருட்டு, பெரிய பாம்புகளால் பாதுகாக்கப்படும் உயரமான மரங்களில் இருந்தும், ராட்சத பறவைகளின் கூடுகளிலிலிருந்தும் அறுவடை செய்யப்படுவதாகக் கட்டுக்கதைகள் கூறப்பட்டன.

உயரமான மரங்களைப் பற்றிப் படர்ந்து ஏறும் மிளகுக் கொடி, சுமார் 4 முதல் 9 மீட்டர் உயரம் வரையில் வளரக்கூடியது. மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடன் அறுவடை செய்யப்படும் மிளகானது, சுடுநீரில் மூழ்க வைக்கப்பட்டு, சிறிது புளித்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, 12% மட்டுமே ஈரப்பதம் இருக்கும் அளவிற்கு 14 நாட்களுக்கு உலர்த்தப்படுகிறது.

மிளகில் உள்ள நுண்பொருட்கள்

உணவுகள் வழியாக உடலுக்குள் சென்று பல மருத்துவ நன்மைகளைக் கொடுக்கும் வேதிப்பொருட்களான ஆல்கலாய்டுகள், பிளேவனாய்டுகள், பீனால்கள், ஸ்டீராய்டுகள், டெர்பென்கள் போன்றவை மிளகில் உள்ளன. இவற்றுள் Piperirine, pipene, piperamide மற்றும் piperamimine உள்ளிட்ட நான்கு முக்கிய வேதிப்பொருட்கள், மிளகுக்கான தனித்த காரச் சுவையையும் நெடியுடன் கூடிய மணத்தையும் கொடுக்கின்றன. இவை தவிர, கால்சியம், சோடியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாதுக்களும் நிறைவாக உள்ளன.

மிளகின் நன்மைகள்

ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை, இருமல் சளியை குணப்படுத்துதல், காயம் ஏற்பட்ட இடத்தில் வீக்கத்தைக் கட்டுப் படுத்துதல், உணவு ஒவ்வாமை அல்லது உணவு வழியாக ஏற்படும் தொற்று மற்றும் நோயைக் குணப்படுத்துதல், சுக்கு, திப்பிலியுடன் சேர்த்துச் சாப்பிட நோய் எதிர்ப்புத் திறனை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது மிளகு. சிறந்த நச்சு முறிப்பானாகப் பயன்படும் மிளகு, உணவால் ஏற்படும் நச்சுத்தன்மை மற்றும் விஷக்கடிகளுக்கு முதல் உதவியாகப் பயன்படுத்தப்படுவதால், “பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்ற அடைமொழியையும் பெற்றிருக்கிறது.

எவ்வளவு மிளகு சாப்பிட வேண்டும்?

ஒரு நாளைக்கு இவ்வளவு அளவில்தான் மிளகு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எந்த உணவு அமைப்பும் நிர்ணயித்துக் கூறவில்லை என்றாலும், மிளகை வைத்து செய்யப்பட்ட பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் கூறுவது என்னவோ, ஒரு நாளைக்கு ஒரு கிராம் மிளகு பாதுகாப்பானது என்பதுதான்.

மிளகு அதிகம் சாப்பிட்டால் என்னவாகும்?

மிளகு அதிகம் சாப்பிடுவதால் வயிறு, குடல் பகுதிகளில் எரிச்சல் ஏற்படுவதுடன், உள்ளிருக்கும் மெல்லிய சளிப்படலத்தைப் பாதித்து, புண் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. Antihistamines மருந்துகள்; மற்றும் கல்லீரலின் பணியைத் தூண்டும் மருந்துகள் எடுத்துக்கொண்டவர்கள் மிளகு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மிளகு ஒவ்வாமை ஏற்படும் நிலையில், தோல் சிவந்து, தடிப்பான திட்டுக்கள் ஏற்படும்.

கர்ப்பிணிப் பெண்கள் அதிக மிளகு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதிக மிளகு, கருக்கலைப்பிற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திவிடலாம் என்றும் கூறப்படுகிறது. இவை மட்டுமல்லாமல், எலிகளை உட்படுத்தி நடத்திய ஆய்வில், அதிக மிளகு சாப்பிடுவதால், அதிலிருக்கும் piperin என்ற வேதிப்பொருள் விந்தணுக்களின் செயல்திறனை பாதிப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மிளகைச் சுட்டு, அதன் புகையை மூக்கு வழியாக உள்ளிழுப்பதால், சளியால் ஏற்படும் மூக்கடைப்பு, தொண்டை கரகரப்பு, இருமல் குணமாகும் என்று கூறப்படுகிறது. இருந்தாலும், தொடர்ச்சியாக அதிகப்புகையை உள்ளிழுக்கக் கூடாது. காரணம், இவ்வாறு தொடர்ச்சியாக செய்யும்போது மிளகின் புகை நுரையீரலுக்குள் சென்றுவிட்டால், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்தாகிவிடும்.

முன்பெல்லாம், கறிமசாலா அரைக்கும்போதும், ரசம் அல்லது அசைவம் செய்யும்போது, சிறிதளவு மிளகினை உபயோகப்படுத்தினார்கள். அது பாதுகாப்பாகவே இருந்தது. ஆனால் தற்போது, துரித உணவுகள், அசைவ உணவுகள், நூடுல்ஸ், 65 மசாலா என்று தினமும் அதிகளவில் மிளகை உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். இதனால் உடலுக்கு பாதிப்புதான் ஏற்படுமே தவிர, மிளகில் இருக்கும் நன்மை கிடைக்காது. காரணம், அதிக மிளகுத்தூள் உணவில் சேரும்போது, உணவிலிருக்கும் பிற தாதுக்களை உடலுக்குக் கிடைக்காமல் செய்துவிடுகிறது.

The post மசாலாக்களின் மறுபக்கம்… மிளகு appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Dr. ,Dietician ,Vandarkuzali ,South India ,Europeans ,
× RELATED போட்டோ ஏஜிங்… இது வெயிலால் வரும் முதுமை!