×

மழைநீர் சேமிப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதால் மைக்கேல்பட்டிணம் குளம் நிரம்பியது-கிராமமக்கள் அசத்தல்

சாயல்குடி : முதுகுளத்தூர் அருகே  மைக்கேல்பட்டிணம் கிராமத்தில் மழைநீர் சேமிப்பு திட்டத்தை மக்கள் சிறப்பாக செயல்படுத்தியதால் குளத்தில் தண்ணீர் நிரம்பியது.  2001ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 429 கிராம பஞ்சாயத்துகளில் அனைத்து அரசு கட்டிடங்கள், ஊரணிகளில் கட்டாயமாக மழைநீர் சேமிப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. விருப்பத்தின் பேரில் வணிக வளாகங்கள், வீடுகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது.  இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருந்தது.   நாளடைவில்  மழைநீர் சேமிப்பு திட்டங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதால், குழாய்கள், தொட்டிகள் சேதமடைந்து போனது. மழைத்தண்ணீரை சேமிக்க வழியில்லாமல் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் முதுகுளத்தூர் ஒன்றியம், மைக்கேல்பட்டிணம் கிராமத்தில் கடந்த 2001-02ம் ஆண்டுகளில் வீடுகள், ஊரணியில் மழைநீர் சேமிப்பு திட்டம் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. பெரும்பாலான வீடுகளில் சேதமடையாமல் முறையாக பராமரித்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக நல்ல மழை பெய்து வருவதால், பழைய மழைநீர் சேமிப்பு உள்கட்டமைப்புகள் வழியாக குளத்திற்கு தண்ணீர் சென்று பெருகி கிடக்கிறது.  குளம் பெருகியதால் மைக்கேல்பட்டிணம் மட்டுமின்றி அருகிலுள்ள ஐந்திற்கும் மேற்பட்ட கிராமமக்கள் பயனடைவர். ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்து உவர்ப்பு தண்ணீர் நல்ல தண்ணீராக மாறிவிடும். இப்பகுதியில் கோடையில் செய்யப்படும் பருத்தி விவசாயத்திற்கும் கைகொடுக்கும் என கிராமமக்கள் கூறுகின்றனர். எனவே மைக்கேல்பட்டிணம் போல் தண்ணீர் வளத்தை பெருக்க, மாவட்டம் முழுவதும் செயல்பாடின்றி கிடக்கும் மழைநீர் சேமிப்பு திட்டத்தை கறாராக செயல்படுத்த கலெக்டர்  சங்கர்லால் குமாவத் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்….

The post மழைநீர் சேமிப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதால் மைக்கேல்பட்டிணம் குளம் நிரம்பியது-கிராமமக்கள் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Michaelpattinam ,Chayalgudi ,Mudugulathur ,Michaelpattinam pond ,Dinakaran ,
× RELATED டிடிவி.தினகரனுக்கு எதிரான வழக்கு ரத்து