×

ஆற்றல் தருவார் அஞ்சனையின் மைந்தன்

அனுமன் ஜெயந்தி 11-01-2024

நம்முடைய சமய மரபில் பல தெய்வ உருவங்கள், பல்வேறு திருநாமங்களோடு வழிபடப்படுகின்றன. சிவன், மகாவிஷ்ணு, பராசக்தி, முருகன், விநாயகர் என்று எத்தனை வடிவங்கள்? எத்தனை பெயர்கள்? சங்க காலத்திலேயே நிலங்களை ஐவகையாகப் பிரித்து ஒவ்வொரு நிலத்துக்கும் ஒரு பிரதானமான தெய்வத்தைச் சொல்லி வைத்தார்கள். எத்தனை தெய்வங்கள் இருந்தாலும், அதில், இரண்டு தெய்வங்களுக்கு ஊரெங்கும் கோயில்கள். இன்னும் சொல்லப் போனால், ஒவ்வொரு தெருவிலும் கோயில்கள் என்று சொல்லலாம். ஒன்று விநாயகர், மற்றொன்று ஆஞ்சநேயர்.

ஆஞ்சநேயர் கோயில் இல்லாத ஒரு ஊர், ஒரு சிறு கிராமம்கூட இருக்காது. தென்னகத்தில் மட்டும் இல்லாமல், இந்தியா முழுவதுமே ஆஞ்சநேயருக்கு ஏராளமான கோயில்கள் உண்டு. ஆஞ்சநேயரின் ஜெயந்தி உற்சவத்தை (11.1.2024 வியாழக்கிழமை) முன்னிட்டு அவருடைய சிறப்புகளை விரிவாக இந்த தொகுப்பில் காண்போம்.

அனுமன் வரலாறு

திரேதாயுகத்தில் சுமேரு என்ற மலைப்பிரதேசத்தில் வானரர்களுக்குத் தலைவன் ஒருவன் அரசாண்டு வந்தான். அவனுக்கு வெகு காலம் குழந்தை இல்லாமல் இருந்தது. சிவபெருமானின் பேரருளால் ஒரு மகள் பிறந்தாள். அவளுக்கு அஞ்சனாதேவி என்று பெயர் வைத்தான். தக்க பருவத்தில் கேசரி என்ற வானர வீரனுக்கு மணம் முடித்து வைத்தான். அஞ்சனா தேவிக்கு வெகுகாலம் குழந்தைச்செல்வம் இல்லை. அவள் திருமலைக்குச் சென்று ஆகாய கங்கையில் நீராடி ஐம்புலன்களையும் அடக்கி திருமாலை நோக்கி நீண்ட தவம் இருந்தாள்.

அந்த தவத்தின் விளைவாக வாயு பகவான் தனது அம்சத்துடன் சுவை மிகுந்த கனி ஒன்றை தினமும் அளித்து வந்தான். தெய்வாம்சம் பொருந்திய அந்த பிரசாத பலத்தினால் வாயுவின் அம்சத்தோடு அஞ்சனை மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆண் மகவைப் பெற் றெடுத்தாள். அஞ்சனையின் குமரன் என்ற பொருளோடு ஆஞ்சநேயர் என்று திருநாமம் இட்டனர். திருமலையின் ஏழு மலைகளில் ஒன்று அஞ்சனாத்ரி.

அனுமன் ஜெயந்தி சித்திரையிலா? மார்கழியிலா?

தென்னகத்தில் அனுமன் ஜெயந்தி மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தில்தான் கொண்டாடப்படுகிறது. ஆனால், ஆந்திர மாநிலத்தில் அனுமன் ஜெயந்தி, சித்திரை மாதம் பௌர்ணமியில் கொண்டாடப்படுகிறது. இதற்கு ஆதாரம் சமர்த்த ராமதாசரின் கீர்த்தனை சுலோகம். ஒரு சித்ரா பௌர்ணமி அன்று அனுமனின் பெற்றோர்கள் அதாவது அஞ்சனா தேவியும் அவள் கணவரும் ஒரு மலைச்சிகரத்தில் உரையாடிக்கொண்டிருந்தபோது கோடி சூரிய பிரகாசத்துடன் வாயு பகவான் தோன்றி, அஞ்சனையின் தவத்தின் காரணமாக, பிரம்ம தேவரின் ஆணைப்படி, வாயுவின் அம்சமாக, அஞ்சனையின் வயிற்றில் ஒரு ஆண் குழந்தை பிறக்கும் என்று வரமளித்தார்.

அன்றைய தினம் அஞ்சனை கருவுற்றாள். அவள் கருவுற்ற தினம் சித்திரை பௌர்ணமி என்பதால் அதனை ஆஞ்சநேயர் ஜெயந்தியாக அங்கு கொண்டாடுகிறார்கள். நம்முடைய சமய மரபில் கர்ப்பஉற்சவம், ஜனன உற்சவம் என்று இரண்டு வகையாக ஜெயந்தி உற்சவத்தைக் கொண்டாடு வார்கள். அந்த அடிப்படையில் அனுமனின் கர்ப்ப உற்சவம்சித்திரை மாதம் பௌர்ணமி. அனுமனின் அவதார உற்சவம் மார்கழி அமாவாசை.

அனுமன் பெயர்கள்

அனுமனுக்கு பல நாமங்கள் உண்டு. அஞ்சனையின் வயிற்றில் பிறந்ததால் ஆஞ்சநேயன். தாடை ஒடுங்கிப் போனதால் அனுமான். மாருதம் எனும் காற்றின் மைந்தனுக்குப் பிறந்ததால் மாருதி. சஞ்சீவி மலையைத் தூக்கி வந்ததால் சஞ்சீவிராயன். மருந்து மலையை சுமந்து வந்ததால் கந்தவாஹன். ராமாயணத்தில் ஐந்தாவது காண்டமாக சுந்தரகாண்டத்தின் கதா நாயகனாக விளங்குவதால் சுந்தரன். எல்லா காலத்திலும் விளங்குவதால் சிரஞ்ஜீவி. பெருமாளுக்கு வாகனமாக விளங்குவதால் திருவடி.

அனுமனை எங்கே காணலாம்?

அனுமனை எங்கே காணலாம்? எப்படி இருப்பார்? அவரை வரவழைப்பதற்கு ஏதேனும் எளிய வழி இருக்கிறதா? என்றெல்லாம் கேள்வி கேட்டு, அதற்கு பெரியவர்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள். அனுமனைக் காண்பதும் வரவழைப்பதும் மிக எளிதான காரியம்தான். அவரை வரவழைக்க வேண்டும் என்று சொன்னால், ராமநாமத்தை ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டும். ராமாயணத்தை பாராயணம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

ஒன்பது நாட்கள் ராமாயணப் பாராயணத்தை முறையாகச் செய்வதை “நவாஹம்’’ என்பார்கள். ராமாயணத்தைச் சொல்லும் பொழுது அதனைக் கேட்பதற்கு ஆஞ்சநேயர் வருவார் என்பதற்காக அவருக்கு ஒரு மணைப் பலகை போட்டு, விளக்கு ஏற்றி வைத்து, உபசாரங்களைச் செய்து வைப்பார்கள். அவர் எந்த உருவில், எப்படி வந்து கேட்பார் என்பதை சொல்லவே முடியாது. ஆனால், கூட்டத்தோடு கூட்டமாக அவர் வந்து அமர்ந்து கேட்பார். இதனைக் கீழ்க்காணும் சுலோகம் மிக அழகாகச் சொல்கிறது.

“யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர கிருத மஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூரண லோசனம்
மாருதிம் நமது ராக்ஷஸாந்தகம்’’

முதல் அறிமுகம்

அனுமன் பற்றிய செய்திகள் புராண இதிகாசங்களில் கொட்டிக்கிடக்கின்றன. செவிவழியாக வருகின்ற கர்ணபரம்பரைக் செய்திகளும் நிறைய உண்டு. ஆனால், அனுமனின் புகழ் பிரதானமாக வெளிப்படுவது வால்மீகி பகவான் இயற்றிய ராமாயணத்தில்தான். புத்தியிலும் உடலிலும் பலசாலியான அனுமான், குருவான சூரியனிடம் பாடம் கற்றதனால், சூரியனின் புதல்வரான சுக்ரீவனுக்கு மதிமந்திரி ஆனார்.

வாலிக்கும் சுக்ரீவனுக்கும் பகை ஏற்பட்டு சுக்கிரீவன் நாட்டை விட்டு விரட்டப்பட்ட போது. அனைத்துச் செல்வங்களும் இழந்த சுக்ரீவனுக்குப் பக்கத் துணையாக இருக்க வேண்டும் என்று தாமும் புறப்பட்டார். தன்னை நம்பிய சுக்ரீவனுக்கு இழந்த நாட்டை கிடைக்கச் செய்தார். நம்பியவர்களைக் கடைசிவரை காப்பாற்றுபவர் அனுமான் என்பது ராமாயணத்தில் இருந்து தெரிகிறது. ஏழு காண்டங்களில் கிஷ்கிந்தா காண்டத்தில்தான் அனுமன் ராம லட்சுமணர்களுக்கு அறிமுகமாகிறார். ராமாயண கதா பாத்திரங்களுள் உயிரானவர் அனுமான்.

சுக்ரீவனைக் காப்பாற்றிய அனுமன்

அனுமனின் சந்திப்பு ராமாயணத்தில் நிகழ்வது கிஷ்கிந்தா காண்டம் பம்பைப் படலத்தில். சுக்கிரீவனின் அண்ணனான வாலிக்கும் சுக்கிரீவனுக்கும் பகை. வாலியால் விரட்டப்பட்ட சுக்கிரீவன், ஒரு சாபத்தினால் வாலி வரமுடியாத ஒரு இடத்தில் குறிப்பிட்ட தோழர்களோடு மறைந்து வாழ்கிறான். அப்பொழுது வில்லும் கையுமாக சீதையைத் தேடிக் கொண்டு வந்த ராம லட்சுமணர்களைப் பார்த்தவுடன் சுக்ரீவன் பயப்படுகிறான். நம்மை அழிப்பதற்காகத்தான் இவர்கள் வில்லும் கையுமாக வந்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு ஆளுக்கு ஒரு பக்கம் சிதறி ஓடுகின்றார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தி ஆறுதல் சொல்லி அவர்கள் உயிரை அனுமன் காப்பாற்றுகின்றார்.

அச்சத்தை நீக்கிய சிவாம்சம்

பாற்கடலைக் கடைந்தபோது உண்டான கொடிய விஷத்தைக் கண்டு தேவர்கள் அஞ்சத் தொடங்கியபோது அவர்கள் அச்சம் நீங்கும்படி அந்த நஞ்சை உண்ட சிவபெருமானைப் போல அனுமன் சுக்ரீவன் மற்றும் வானரர்களின் அச்சத்தை நீக்கினார், என்று கூறும் பாடலில், சிவனுடைய அம்சமாக அனுமன் அவதரித்தார் என்கின்ற செய்தியை கம்பன் சுட்டிக் காட்டுகின்றார்.

அவ் இடத்து, அவர் மறுகி, அஞ்சி, நெஞ்சு அழி அமைதி,
வெவ் விடத்தினை மறுகு தேவர், தானவர்,
வெருவல்
தவ்விட, “தனி அருளு தாழ் சடைக்
கடவுள் என”,
‘இவ் இடத்து இனிது இருமின்; அஞ்சல்’
என்று இடை உதவி,

என்று சிவபெருமானுடைய அம்சம், அனுமன் என்று அறிமுகப்படுத்துகிறார்.

அனுமனின் சுய அறிமுகம்

ஒருவரைச் சந்திக்க சொல்லுகின்ற பொழுது, நம்மைப்பற்றி நாமே அறிமுகம் (self Introduction) செய்து கொள்ளும் நிகழ்ச்சி இப்பொழுது அனேகமாக எல்லா இடங்களிலும் நடைபெறுகிறது. ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் முறையை வைத்தே அவருடைய தகுதியை நேர்முகத் தேர்வுகளில் நிர்ணயம் செய்துவிடுவார்கள். சமய உலகில் பெரியவர்களையும் விருந்தினர்களையும் சந்திக்கின்ற பொழுது தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளுதல் என்பதை அபிவாதயே சொல்லுதல் என்று சொல்வார்கள். இதற்கு எடுத்துக்காட்டு அனுமன்செய்து கொண்ட அறிமுகம்.

முதன்முதலாக அனுமன் ஒரு அந்தணர் வேடம் புனைந்து ராம லட்சுமணர் முன்னால் சென்று ‘‘உங்கள் வரவு நல்வரவாகட்டும்’’ என்று சொன்னவுடன், ராமன் அனுமனைப் பார்த்து ‘‘நீ யார்?’’ என்று கேட்கிறான். எப்படிப் பெரியவர்களிடம் அறிமுகம் செய்துகொள்ள வேண்டும் என்கின்ற சிந்தனை உள்ள இளைஞர்களுக்கு இந்தப் பாடல் மிகச் சிறந்த உதாரணம்.

மஞ்சு எனத் திரண்ட கோல மேனிய! மகளிர்க்கு எல்லாம்
நஞ்சு எனத் தகைய ஆகி, நளிர் இரும் பனிக்குத் தேம்பாக்
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண! யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் அனுமன் என்பேன்;

எதற்காக என்னை அனுப்பி வைத்தார்?

இந்தப் பாடல் நாலு வரி. ஆனால், மூன்று வரியில் ராமரின் அழகு, ஆற்றல், தோற்றம் பற்றி கூறுகிறார். இது ஒரு உளவியல். எதிரில் உள்ள பெரியவர்களின் பெருமையைச் சொல்லும் போதே அவர்கள் நீங்கள் அடுத்து பேசுவதை உள்வாங்கிக் கொள்வது என்ற ஒரு அமைப்பு வந்துவிடுகிறது. உங்கள் பேச்சு குறித்து அவருடைய ஆர்வம் அதிகப்படும். உங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொள்ளும் பொழுது அது பசுமரத்தாணி போல பதியும். முதல் பாடலில் ஒரே வரியில் காற்றின் வேந்தற்கு அஞ்சனை வயிற்றில் வந்தேன்; நாமமும் அனுமன் என்பேன் என்று சுருக்கமாகக் கூறிவிட்டு அடுத்த பாடலில், தான் இப்பொழுது இருக்கும் நிலை, வந்த காரணம் பற்றிக் கூறுகிறார்.

இம் மலை இருந்து வாழும் எரி கதிர்ப் பரிதிச் செல்வன்
செம்மலுக்கு ஏவல் செய்வேன்; தேவ! நும் வரவு நோக்கி
விம்மல் உற்று அனையான் ஏவ, வினவிய வந்தேன்’ என்றான்-
எம் மலைக் குலமும் தாழ, இசை சுமந்து, எழுந்த தோளான்.

யாரிடம் வேலை பார்த்து வருகின்றேன். அவருடைய நிலை என்ன, எதற்காக என்னை அனுப்பி வைத்தார், இத்தனை செய்திகளையும் சொல்லி விடுகின்றார்.

அனுமனை எப்படி ராமன் எடைபோட்டார்?

சொற்களை முறையாகக் கையாளத் தெரிந்தவர்கள், முறையாகப் பேசத் தெரிந்தவர்களை யாராலும் வெற்றி கொள்ள முடியாது. நன்கு பேசத் தெரிந்தவர்களை, சொல்லின் செல்வர் என்று நாம் விருது கொடுத்துப் பாராட்டுகின்றோம். இந்த விருதுகளெல்லாம் மனிதர்கள் கொடுத்த விருதுகள். ஆனால், பரமாத்மாவான ஸ்ரீராமனே அனுமனின் அறிமுகத்தில் மயங்கி, அனுமனைப் பற்றி துல்லியமாக எடை போட்டு, கொடுத்த விருது சொல்லின் செல்வன். அப்படி எடை போடுவதற்கு அவன் எப்படி ஆராய்ந்தார் என்பதும் பாட்டில் இருக்கிறது.

1. பேசுகின்ற வார்த்தையைப் பார்த்தால், இவன் மிகச் சிறந்த கல்விமான். நான்கு வேதமும் ஆறங்கங்களோடு கசடறக் கற்ற பண்டிதன்.
2. சொற்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது தெரிகிறது.
3. மங்கலகரமான, நேர்மறைச் சொற்களைப் பயன்படுத்துகின்றான்.
4. எதைச் சொல்ல வேண்டும், எதைச் சொல்லக்கூடாது என்பது தெரிந்திருக்கிறது.
5. வார்த்தைச் சிக்கனத்தோடு குழப்பமில்லாமல் தெளிவாகப் பேசுகின்றான்.
6. பொய்மையில்லாது பேசுகின்றான்.

அனுமன் காண்டம்

ராமாயணத்தின் சப்த காண்டங்களில் பஞ்சம (ஐந்தாவது) கண்டத்திற்கு சுந்தரகாண்டம் என்று பெயர். கதையின் மிகப் பெரிய திருப்பத்திற்கு காரணமான அனுமனின் பிரபாவத்தை வெளிப்படுத்துவது சுந்தரகாண்டம். இதற்கு அனுமன் காண்டம் என்றுதான் முதலில் வால்மீகி பெயர் சூட்டினாராம். தன்னுடைய பெயரைச் சூட்டுவதற்கு அனுமன் அனுமதி தரல்லை. அனுமன் கோபித்துக் கொண்டு பெயரை மாற்ற சொன்னதாகவும், அதேநேரத்தில் அனுமனின் மேன்மையைக் குறிப்பிடும் அந்த காண்டத்திற்கு வேறு பெயர் வைக்க விருப்பமில்லாத வால்மீகி சுந்தரகாண்டம் என்று பெயர் சூட்டியதாகவும் ஒரு செவிவழிச் செய்தி உண்டு.

சுந்தரன் யார் தெரியுமா?

ராமாயண அரங்கேற்றத்தை முடித்துக் கொண்டு தன்னுடைய தாய் அஞ்சனாதேவியைப் பார்க்க திருமலைக்கு அனுமன் சென்றார். திருமலையின் ஏழு மலைகளில் அஞ்சன தேவி தவம் செய்த மலை `அஞ்சனாத்ரி’ என்று வழங்கப்படுகிறது. அனுமனை வரவேற்ற தாய் அஞ்சனாதேவி, ‘‘வா, சுந்தரா, நலம்தானே?’’ என்று அழைத்தபோதுதான், தனக்கு சுந்தரன் என்றும் ஒரு பெயர் உண்டு என்பதை அறிந்துகொண்டார்.

வான்மீகி முனிவர் சாதுரியமாக எப்படியோ தன் பெயரை ஐந்தாவது காண்டத்திற்கு சூட்டி விட்டாரே என்று நினைத்தாராம். சுந்தரகாண்டப் பகுதியை நஷ்ட ஜாதகம் என்று சொல்வார்கள். எடுத்த செயல் முடிக்கவும், விருப்பங்கள் நிறைவேறவும் தடைகள் விலகவும், இழந்த பொருள் திரும்பக் கிடைக்கவும், சுந்தரகாண்ட பாராயணத்தை பல பெரியவர்கள் பரிந்துரைக்கிறார்கள் என்பதிலிருந்து இதன் பெருமையை நாம் தெரிந்து கொள்ளலாம்.

ராமநாமம்

“நன்மையும் செல்வமும் நாளும்
நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்”
(கம்பராமாயணம்: சிறப்புப் பாயிரம் 14)

ராமாயணத்தின் மொத்த பெருமையும் இந்த இரண்டு எழுத்து நாமத்தில் அடங்கியிருக்கிறது. இந்த ராமநாமத்தின் பெருமை முதல் முதலில் செயல் படுத்தி வெளிஉலகிற்குத் தெரிவித்தவர் அனுமன். இலங்கைக்கு கடல் வழியே சென்றபொழுது பல்வேறு தடைகள் வந்தன. அந்தத் தடைகளை எல்லாம் தகர்த்தெறிய அனுமன் பயன்படுத்தியது ராமநாமத்தை என்பதை கம்பன் குறிப்பிடுகின்றார்.

“ஊறு, கடிது ஊறுவன; ஊறு இல் அறம் உன்னா,
தேறல் இல் அரக்கர் புரி தீமை அவை தீர,
ஏறும் வகை எங்கு உள்ளது? “இராம!’’ என எல்லாம்
மாறும்; அதின் மாறு பிறிது இல்’’

– என வலித்தான்.

சீதையைக் காப்பாற்றிய ராமநாமம்

அதுமட்டுமில்லை. சீதையின் உயிரைக் காப்பாற்றியது ராமநாமம்தான். பல்வேறு தடைகளுக்குப் பிறகு அசோகவனத்தில் சீதையை அனுமன் கண்டபோது, அவளுடைய நிலையைக் கண்டு துடிதுடித்துப் போகின்றார். 10 மாதங்களாக உணவு கொள்ளவில்லை. உறக்கம் கொள்ளவில்லை. வேறு உடை உடுத்திக் கொள்ளவில்லை. அவள் இராமனை எண்ணி அழுகின்ற பொழுது அந்த கண்ணீரால் உடை நனைவதும், சற்று நேரம் கழித்து அவளுடைய உடம்பின் வெப்பப் பெருமூச்சு வெளிப்பட்டு, அந்த சூட்டினால் உடை காய்வதுமாக இருக்கின்ற கொடுமையான நிலையைப் பார்த்து துடித்தான் அனுமன்.

சற்று நேரத்தில் ராவணன் வந்து அச்சுறுத்தி விட்டுச் சென்றபின், துன்பத்தைப் பொறுக்க முடியாத சீதை, இனி வேறு வழியில்லை; உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து, அங்கிருந்த ஒரு மரத்தின் கிளையில், கழுத்தில் சுருக்கிட்டு கொண்டு சாகத் துணியும் போது, அவளை காப்பாற்றியது அனுமன் மெல்ல ஓதிய ராம நாமம்தான். அதனால்தான் தியாகராஜர், `ராமநாமம் ஜன்ம ரட்சக மந்திரம்’ என்றார்.

ராமநாமம் ஓதுபவர் முன் அனுமன்

அனுமன், சீதைக்கு அறிமுகம் ஆவதற்கு முன்னால் ராமனின் நாமம்தான் சீதைக்கு அறிமுகமாகியது. அதனால் அவள் சாகத் துணிந்ததன் முடிவை மாற்றிக் கொண்டு வாழத் துணிந்தாள். ராமநாமத்தின் மகிமை என்பது இதுதான். அதனால்தான் ராம நாமம் ஓதினால் ராமன் வருவதற்கு முன்னால் அனுமன் வந்து, ராம நாமம் ஓதி யவரை துன்பத்திலிருந்து காப்பாற்றிவிடுவார். இந்த உதவியை தன் விஷயத்தில் செய்ததாக சீதை சொல்லும் அருமையான பாடல் இது.

`அரக்கனே ஆக; வேறு ஓர் அமரனே ஆக; அன்றிக்
குரக்கு இனத்து ஒருவனேதான் ஆகுக; கொடுமை ஆக;
இரக்கமே ஆக; வந்து, இங்கு, எம்பிரான் நாமம் சொல்லி,
உருக்கினன் உணர்வை; தந்தான் உயிர்; இதின் உதவி உண்டோ?’

ராவணனை ஏன் கொல்லவில்லை?

அதே நேரத்தில் கொடுஞ்செயலைச் செய்த ராவணனை அந்த இடத்திலேயே அழித்துவிட வேண்டும் என்று நினைக்கின்றான். ஆனால், “தனக்கு இடப்பட்ட பணி அது அன்று; தான் இன்னும் சீதையைக் காணாதபோது, இராவணனை அழிப்பதால் ஒரு பயனும் இல்லை” என்று முடிவை மாற்றிக் கொள்கின்றான். இந்த இடத்தில் முதலில் வெளிப்பட்டது உணர்ச்சியால் விளைந்த அனுமனின் கோபம். அடுத்து அந்த கோபத்தை உடனடியாக செயல்படுத்தாமல் ஆராய்கின்ற அறிவு.

அறிவு கோபத்தை அழித்தது. இதனை கம்பன் சொல்லுகின்ற பொழுது அனுமனின் கோபம் என்கின்ற தீயை, அறிவு என்னும் தண்ணீர் கொண்டு அணைத்தான் என்று காட்டுகின்றார். கோபம் வரத்தான் செய்யும். அப்பொழுது அறிவு விழிப்பு நிலை அடைய வேண்டும். அப்பொழுதுதான் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியும்; இல்லை விபரீதம் நடக்கும் என்பதைக் காட்டும் இடம் இந்த இடம்.

பேராற்றல் பெற்றவன்

அனுமனைப் பேராற்றல் பெற்றவன் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். அனுமனை வணங்குபவர்களுக்கு அத்தகைய அறிவாற்றல் கிடைக்கும். (அதாவது அறிவும் ஆற்றலும் கிடைக்கும்.) காரணம் இவை இரண்டும் இருந்தால்தான் செயல் வெற்றி பெறும்.

“அசாத்ய சாதக ஸ்வாமிந்
அசாத்யம் தவகிம்வத
ராம தூத க்ருபாசிந்தோ
மத் கார்யம் சாதய ப்ரபோ’

எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பாக, அனுமனை மனதில் நினைத்து இந்த மந்திரத்தை 27 முறை ஜெபிப்பதன் பலனாக நாம் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். செவ்வாய்க் கிழமைகளில் அனுமன் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து மேலே உள்ள மந்திரத்தை 27 முறை கூறுவதன் பயனாக தடைப்பட்ட காரியம் விரைவில் முடியும்.

மருந்துமலை

அனுமனுக்கு `சஞ்சீவிராயர்’ என்று ஒரு பெயர். மாய அஸ்திரப் பிரயோகங்களால் சற்றுநேரம் ராம – லஷ்மணர் உட்பட வானரர்கள் அடிபட்டு மயக்கமுற்று இருந்த வேளையில், “எல்லாம் போயிற்று” என்று வீடணன் போன்றோர் புலம்பிக் கொண்டிருக்கும் பொழுது, ஜாம்பவான், ‘‘அனுமன் இருக்கிறாரா?’’ என்று கேட்கிறார். அப்போது அனுமன் அவர் அருகில் வருகின்றார்.

அவரை ஆசிர்வதித்து ‘‘அப்பா, நீ ஒருவன் இருக்கின்றாய் என்று சொன்னால் நாம் அத்தனைபேரும் இருக்கின்றோம் என்று பொருள்’’ என்று சொல்லி, உடனே சில மூலிகைகளின் பெயர்களைச் சொல்லி அனுப்புகின்றார். குறிப்பிட்ட நேரத்தில் அந்த மூலிகையைத் தேட அவகாசம் இல்லாத அனுமன், மலையைத் தூக்கிக் கொண்டு வருகின்றார்.

1. மூலிகைகளைத் தேடுவதில் நேரம் கழிக்காமல் இருந்தது அவருடைய அறிவு.
2. அதே நேரத்தில் மலையையே சுமந்துகொண்டு வந்தது அவருடைய ஆற்றல். அறிவும் ஆற்றலும் வெளிப்பட்ட இடம் இந்த இடம்.

பரதனைக் காத்தது

1. ராமன் பகவான்.
2. பரதன் பாகவதன்.
இருவர் உயிரையும் காப்பாற்றியவன் அனுமன். அதனால்தான் ராமனே அனுமனை, தன்னுடைய தந்தை என்று சொல்லுகின்றார். முதலில் வாலியிடம் இருந்து சுக்ரீவனைக் காப்பாற்றினார். அடுத்து சீதையை, ராமநாமம் சொல்லி அசோகவனத்தில் காப்பாற்றினார். ராம லட்சுமணர்கள் மாயாஸ்திரத்தால் சற்று நேரம் அடிபட்டு கிடந்தபொழுது சஞ்சீவி மலையைச் சுமந்து கொண்டு வந்து காப்பாற்றினார். நிறைவாக ராமன் வரவில்லை என்று பரதன் தீயில் மூழ்கி உயிரைத் துறக்கத் துணிந்தபொழுது, மிக விரைவாகச் சென்று, ராமருடைய வெற்றியைச் சொல்லி பரதனையும் காப்பாற்றினார்.

ஏன் வடை மாலை?

சூரியபகவான், வினாடிக்கு 9 லட்சத்து 76 ஆயிரம் யோஜனை தூரம் சஞ்சரிப்பவன். அவரோடு கூடவே அதே வேகத்தில் சஞ்சரித்து சகலவேத சாஸ்திர புராண இதிகாசங்களையும் ஒரே நாளில் கிரகித்தவர் அனுமான் வால்மீகி ராமாயணம் உத்தர காண்டம் தெரிவிக்கிறது. ஒரு கிரகண நேரத்தில் சூரியனுக்கு அருகில் சஞ்சரித்து அவரிடம் பாடம் கேட்ட அனுமனின் ஆற்றலை அறிந்த ராகு, அனுமனுக்கு ஓர் உறுதி மொழி கொடுத்தாராம்.

ராகுவின் தானியமான உளுந்தால் வடை செய்து, அதனை மாலையாக எவர் ஒருவர் அனுமனுக்கு சாத்தி வழிபடுகிறார்களோ, அவரை எந்த காலத்திலும் தான் பிடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் யாவும் நிவர்த்தியாகி விடும் எனவும் உறுதி கொடுத்தாராம். இந்த நம்பிக்கையில் உளுந்தால் வடை செய்து அவற்றை 54, 108 அல்லது 1008 என்ற எண்ணிக்கையில் மாலையாக கோர்த்து ஆஞ்சநேயருக்கு செலுத்துகிறார்கள். வட நாட்டில் உளுந்தால் செய்யப்பட்ட ஜாங்கிரி மாலை போடுகிறார்கள்.

ஏன் வெற்றிலை மாலை?

வெற்றிலை என்பது வெற்றி தரும் இலை. அதனால்தான் மிகச்சிறந்த உபச்சாரமாக தாம்பூலத்தை அளிப்பதை நாம் பழக்கத்தில் கொண்டிருக்கிறோம். அனுமனுக்கு வெற்றிலை மாலை மற்றும் ராம நாமம் எழுதிய மாலை முதலியவற்றைச் சாற்றி வழிபடுகின்றனர். காரிய சித்திக்கு வெற்றிலை மாலை அணிவிப்பதை பலரும் நம்பிக்கையோடு செய்து வருகின்றனர். ஆகமங்களிலும் சாத்திரங்களிலும் இதற்கு எந்த சான்றுகளும் இல்லை என்றாலும்கூட நம்பிக்கையின் அடிப்படையில் இதனை மக்கள் பின்பற்றி வருகின்றனர். அனுமனுக்கு வெற்றிலை மாலை சமர்ப்பிக்கும் போது வெற்றி லையின் எண்ணிக்கை 2,4,6,8 என்பதாக இரட்டைப்படை எண்ணிக்கையில் இருக்க வேண்டும். வெற்றிலையுடன் வைக்கப்படும் பாக்கின் எண்ணிக்கையும் 1,3,5,7 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் அமைய வேண்டும்.

பிள்ளையார் பிடிக்க

திவ்ய நாம சங்கீதத்தில் அனுமனுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. அவரே தம்புரா வைத்துக் கொண்டு ராமநாம பஜனை செய்து கொண்டிருக்கிறார். மூன்று சம்பிரதாயஸ்தர்களும் (விசிஷ்டாத்வைத சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களும், அத்வைதசம் பிரதாயத்தைச் சேர்ந்தவர்களும், மத்வ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களும்) அனுமன் வழிபாட்டிற்கு மிக முக்கியத்துவம் தருகின்றனர். பஜனை சம்பிரதாயத்தில் தோடய மங்களம், விநாயகர் துதி என்று ஆரம்பித்து, அனுமனைப் பாடி முடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

பெரும்பாலான உற்சவங்கள் அல்லது பூஜைகள் குறிப்பாக ஸ்மார்த்த சம்பிரதாயத்தில் கணபதி பூஜையில் ஆரம்பித்து அனுமார் பூஜையில் முடிப்பதால், பிள்ளையார் பிடிக்க குரங்கில் முடிந்தது என்ற சொலவடை பிரசித்தம் ஆயிற்று. இப்படி அனுமனின் பிரபாவத்தை விவரித்துக்கொண்டே போகலாம். அவர் மூல நட்சத்திரத்தில் அவதாரம் செய்ததால், அவரை வழிபடுபவர்களுக்கு சர்ப்ப தோஷங்கள் வேலை செய்வதில்லை. மூல நட்சத்திரம் கேதுவுக்கு உரிய நட்சத்திரம்.

கேது ஞானகாரகன் என்று பெயர் பெற்றவர். கேது ஒரு ஜாதகத்தில் வலிமையாக இருந்தால், வைராக்கியத்தையும் ஞானத்னையும், உலக விஷயங்களில் விரக்தியையும் தந்து, `நைஷ்டிக பிரம்மச்சாரி’ தன்மையைக் கடைப்பிடிக்கச் செய்வார் என்று ஜோதிட கிரந்தங்கள் கூறுகின்றன. அந்த அடிப்படையில், ஆற்றல் மிகுந்த நைஷ்டிக பிரம்மச்சாரி அனுமன். இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி (11.1.2024) அமைகிறது. அனுமனின் பிரபாவத்தைச் சிந்தித்து, அவரை வழிபட்டு அவருடைய திருவருளைப் பெறுவோம்.

தொகுப்பு: நாகலட்சுமி

The post ஆற்றல் தருவார் அஞ்சனையின் மைந்தன் appeared first on Dinakaran.

Tags : Anjana ,Hanuman Jayanti ,Shiva ,Vishnu ,Parashakti ,Murugan ,Ganesha ,
× RELATED பெண்ணிடம் சங்கிலி பறிப்பு