×

“பில்கிஸ் பானு வழக்கு தீர்ப்பு; இருள் சூழ்ந்த வேளையில் நம்பிக்கை தரும் ஒளிக்கீற்று”: முரசொலி நாளேடு சாடல்

சென்னை: பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இன்று காணப்படும் ஒளிக்கீற்றை மீண்டும் இருள் கவ்வும் ஆபத்து இருப்பதால் ராஜதர்மத்தை கடைபிடிக்க தவறியவர்கள் உயர் பதவிகளில் இருந்து அகற்றப்பட வேண்டும் என முரசொலி நாளேடு கூறியுள்ளது. பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது தொடர்பாக திமுக நாளேடான முரசொலி கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2018ல் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாகவும், நிலைமைகள் சரியாக இல்லை எனவும் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் 4 பேர் எச்சரித்த பின்னரும், நிலைமைகளை சரிசெய்யும் போக்கு தென்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை இருள் சூழ்ந்த வேளையில் நம்பிக்கை தரும் ஒளிக்கீற்று என்று முதலமைச்சர் வரவேற்றத்தை முரசொலி சுட்டிக்காட்டியுள்ளது. அதேவேளையில் கடந்த காலங்களில் பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் சிறை வெளியே இருக்க மாநில அரசு உதவியது போன்ற நிகழ்வுகளை பார்க்கும் போது இந்த ஒளி நீடிக்குமா? என்ற சந்தேகம் எழுவதாக முரசொலி கூறியுள்ளது.

2022ல் குஜராத் கலவரப் பகுதியை பார்வையிட்ட அன்றைய பிரதமர் வாஜ்பாய் குறிப்பிட்டபடி, ராஜதர்மத்தை கடைபிடிக்க தவறிய படுபாதகர்கள், குற்றவாளிகளுக்கு ஆதரவாக உள்ளதாகவும், அவர்களில் இன்னும் சிலர் உயர் பதவிகளில் அமர்ந்து இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் ஏமாற்றுவதாகவும் முரசொலி விமர்சித்துள்ளது. இவர்கள் அகற்றப்படும் வரை பில்கிஸ் பானு போன்றோருக்கு முழு விடிவு இல்லை என்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் காணப்படும் ஒளிக்கீற்றை மீண்டும் இருள் கவ்வக்கூடும் என்றும் முரசொலி நாளேடு குறிப்பிட்டுள்ளது.

The post “பில்கிஸ் பானு வழக்கு தீர்ப்பு; இருள் சூழ்ந்த வேளையில் நம்பிக்கை தரும் ஒளிக்கீற்று”: முரசொலி நாளேடு சாடல் appeared first on Dinakaran.

Tags : Murasoli Naledu Sadal ,CHENNAI ,Murasoli Daily ,Rajadharma ,Supreme Court ,Bilgis ,Banu ,Murasoli ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...