×

தஞ்சை ஆணவக்கொலை: பெற்றோர் கைது ; இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்

பட்டுக்கோட்டை: கலப்பு திருமணம் செய்த மகளை கொன்று எரித்த வழக்கில் கைதான தந்தை, தாய் நேற்று திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். வழக்கை முறையாக விசாரிக்காத இன்ஸ்பெக்டர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே நெய்வவிடுதியை சேர்ந்த பெருமாள் மகள் ஐஸ்வர்யா (19). பூவாளூரை சேர்ந்த பாஸ்கர் மகன் நவீன் (19). இன்ஜினியரிங் டிப்ளேமோ படித்தவர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும், பள்ளி பருவத்திலிருந்தே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இருவரும் திருப்பூர் மாவட்டம், அரவப்பாளையத்தில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இருவரும் கடந்த டிசம்பர் 31ம்தேதி நண்பர்கள் முன்னிலையில் கலப்பு திருமணம் செய்து கொண்டு, பல்லடம் அருகே வீரபாண்டியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். இவர்கள் திருமணம் புகைப்படங்கள் வெளியான நிலையில், ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், பல்லடம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். கடந்த 2ம்தேதி போலீசார், ஐஸ்வர்யாவை அவரது தந்தையுடன் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் கடந்த 3ம்தேதி ஐஸ்வர்யாவை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொன்று உடலை எரித்து விட்டதாக நவீன் நண்பர்கள் அவருக்கு போனில் தகவல் அளித்தனர். இதுதொடர்பாக நவீன், வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் ஐஸ்வர்யா குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து போலீசார் ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் (46), அவரது மனைவி ரோஜா (43) ஆகியோர் மீது (302) கொலை, (201) கொலை செய்து தடயங்களை அழித்தல், (120B) கூட்டுச்சதி ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விசாரணைக்கு பின்னர் இருவரும் பட்டுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா, 2 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து பெருமாள் திருச்சி மத்திய சிறையிலும், அவரது மனைவி ரோஜா காந்திமார்க்கெட்டில் உள்ள மகளிர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மேஜரான இருவரின் செய்த திருமணத்தை முறையாக விசாரிக்காமலும், ஐஸ்வர்யாவுக்கு ஆபத்து உள்ளது என தெரிந்ததும் புகார் அளித்த தந்தையுடன் அனுப்பி வைத்து ஆவணக்கொலைக்கு காரணமாக இருந்த பல்லடம் இன்ஸ்பெக்டர் முருகையாவை சஸ்பெண்ட் செய்து டிஐஜி சரவணசுந்தர் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

The post தஞ்சை ஆணவக்கொலை: பெற்றோர் கைது ; இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Tanjore ,Pattukottai ,Trichy ,Thanjavur District, ,Thanjavur district ,Perumal ,Orathanadu ,Thanjavur ,Dinakaran ,
× RELATED தஞ்சை பெருவுடையார் கோயிலை சிதைக்கும்...