×

அதிக குழந்தைகளை பெற்றுகொள்ளுங்கள் மோடி உங்களுக்கு வீடு கட்டித் தருவார்: ராஜஸ்தான் அமைச்சர் பேச்சால் சலசலப்பு

ஜெய்ப்பூர்: ‘‘நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். பிரதமர் மோடி உங்களுக்கு வீடுகளை கட்டித் தருவார்” என ராஜஸ்தான் மாநிலத்தின் அமைச்சர் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் சட்ட பேரவைக்கு கடந்த நவம்பரில் தேர்தல் நடந்தது. டிசம்பர் 3ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில், பாஜ வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அந்த மாநிலத்தில் முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்றார். இந்நிலையில், வளர்ச்சியடைந்த பாரதத்துக்கான லட்சிய யாத்திரை நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் உதய்ப்பூரில் நடந்தது. இதில், முதல்வர் பஜன்லால் சர்மா, பழங்குடியின வளர்ச்சித்துறை அமைச்சர் பாபுலால் கராடி கலந்து கொண்டனர்.

அமைச்சர் பாபுலால் கராடி பேசுகையில், “பாஜ தலைமையிலான அரசு பல்வேறு மக்கள் நல திட்டங்களை தொடங்கி உள்ளது. ஒன்றிய அரசு எல்பிஜி சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்துள்ளது.ராஜஸ்தான் அரசு இப்போது உஜ்வாலா திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரூ.450-க்கு சிலிண்டர்கள் கிடைக்கச் செய்கிறது. பசியுடனும் வீடு இல்லாமலும் யாரும் உறங்கக்கூடாது என்பது பிரதமர் மோடியின் கனவாகும். நீங்கள் நிறைய பிள்ளைகளை பெற்றுக்கொள்ளுங்கள், உங்களுக்கு பிரதமர் மோடி வீடு கட்டிக்கொடுப்பார்.வேறு என்ன பிரச்னை உங்களுக்கு இருக்கு?” என்றார். இவர் இவ்வாறு பேசிய போது அங்கிருந்த மக்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தனர்.

The post அதிக குழந்தைகளை பெற்றுகொள்ளுங்கள் மோடி உங்களுக்கு வீடு கட்டித் தருவார்: ராஜஸ்தான் அமைச்சர் பேச்சால் சலசலப்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,Rajasthan minister ,Jaipur ,Minister of Rajasthan ,Rajasthan Legislative Assembly ,
× RELATED மோடியின் உத்தரவாதம் குறித்து நாடு...