×

முதல் டி20 போட்டியில் இன்று இந்தியா – ஆப்கானிஸ்தான் மோதல்

மொஹாலி: இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி, மொஹாலியில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. மொஹாலி, பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று முதல் போட்டி நடைபெறுகிறது. 2வது போட்டி ஜன.14ம் தேதி இந்தூரிலும், 3வது போட்டி ஜன.17ம் தேதி பெங்களூருவிலும் நடைபெற உள்ளன. ஓராண்டுக்கும் மேலாக சர்வதேச டி20ல் விளையாடாமல் இருந்த அனுபவ வீரர்கள் ரோகித், கோஹ்லி இருவரும் மீண்டும் களமிறங்குகின்றனர். சஞ்சு சாம்சன், அக்சர் படேல், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருடன் இளம் வீரர்கள் அர்ஷ்தீப், திலக் வர்மா, கில், ஜெய்ஸ்வால், பிஷ்னோய், ஜிதேஷ் சர்மா ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இப்ராகிம் ஸத்ரன் தலைமையிலான ஆப்கான் அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. முகமது நபி, ரஹ்மானுல்லா குர்பாஸ், இக்ரம் அலிகில், நவீன் உல் ஹக், பசல்லாக்பரூக்கி என அதிரடிக்கு பஞ்சமில்லை. காயம் காரணமாக ஆல் ரவுண்டர் ரஷித் கான் இந்த தொடரில் இருந்து விலகியிருப்பது, ஆப்கான் அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. இந்த நிலையில், ஐசிசி டி20 தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது ஆப்கானுக்கு இமாலய சவாலாகவே இருக்கும். இந்த ஆண்டு டி20 உலக கோப்பை போட்டி நடைபெற இருப்பதால், இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் வரிந்துகட்டுகின்றன.

* கோஹ்லி இல்லை
ஆப்கானிஸ்தான் அணியுடன் மொஹாலியில் இன்று நடக்க உள்ள முதல் டி20 போட்டியில் விராத் கோஹ்லி விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சொந்த காரணங்களுக்காக விலகியுள்ள அவர், இந்தூர் மற்றும் பெங்களூருவில் நடைபெற உள்ள 2வது, 3வது டி20ல் விளையாடுவார் என தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஆதிக்கம்
* இரு அணிகளும் 5 டி20யில் மோதியுள்ள நிலையில், இந்தியா 4-0 ஆதிக்கம் செலுத்தியுள்ளது. ஒரு ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது.
* இந்த 2 அணிகளுக்கும் இடையே நடைபெறும் முதல் டி20 தொடர் இது.
* முன்னதாக மோதிய 5 ஆட்டங்களும் இந்தியாவிலோ, ஆப்கானிஸ்தானிலோ நடந்ததில்லை. மேலும் இந்த 5 ஆட்டங்களில் 4 உலக கோப்பைக்காகவும், ஒன்று ஆசிய கோப்பைக்காகவும் நடந்தவை. 2023 ஆசிய கோப்பை ஆட்டம்தான் மழை காரணமாக ரத்தானது.
* இரு அணிகளும் மற்ற அணிகளுடன் கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில்… தலா 3 ஆட்டங்களில் வென்றுள்ளன.

இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்கள்), விராத் கோஹ்லி, சுப்மன் கில், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, அக்சர் படேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், முகேஷ் குமார்.

ஆப்கானிஸ்தான்: இப்ராகிம் ஸத்ரன் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், இக்ரம் அலிகில் (விக்கெட் கீப்பர்கள்), ஹஸ்ரதுல்லா ஸஸாய், ரஹமத் ஷா, நஜிபுல்லா ஸத்ரன், ஷராபுதின் அஷ்ரப், கரீம் ஜனத், முகமது நபி, அஸ்மதுல்லா ஒமர்சாய், குல்பாதின் நயீப், நூர் அகமது, குவாயிஸ் அகமது, நவீன் உல் ஹக், ஃபரீத் அகமது மாலிக், பசல்லாக் பரூக்கி, முஜீப் உர் ரகுமான், முகமது சலீம்.

The post முதல் டி20 போட்டியில் இன்று இந்தியா – ஆப்கானிஸ்தான் மோதல் appeared first on Dinakaran.

Tags : India ,Afghanistan ,T20 ,Mohali ,Punjab Cricket Association Stadium ,Dinakaran ,
× RELATED டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்...