×

சபரிமலையில் தை மாத பூஜைக்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் ஜனவரி 15ம் தேதி நடைபெறும் மகரவிளக்கு பூஜைக்குப் பின்னர் தை மாத பூஜைகளுக்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மகரவிளக்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவரும் நிலையில் நேற்றும் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து தரிசனம் செய்தனர். இந்த நிலையில் வரும் 15ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது. இதனால் நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக நேற்று முதல் தரிசனத்திற்கான உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. வரும் 14ம் தேதி 50 ஆயிரம் பக்தர்களுக்கும், 15ம் தேதி 40 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும்.

மகரவிளக்கு பூஜை முடிந்த மறுநாள் (16ம் தேதி) முதல் தை மாத பூஜைகள் தொடங்குகின்றன. இதற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியது. 20ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். 16ம் தேதி 50 ஆயிரம் பேருக்கும், 17 முதல் 20ம் தேதி வரை 60 ஆயிரம் பேருக்கும் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யலாம். 19ம் தேதி வரை மட்டுமே நெய்யபிஷேகம் செய்ய முடியும். 16ம் தேதி முதல் உடனடி முன்பதிவு வசதியும் தொடங்கப்படுகிறது. பம்பை, நிலக்கல் மற்றும் வண்டிப்பெரியார் ஆகிய இடங்களில் மட்டுமே உடனடி முன்பதிவு கவுண்டர்கள் செயல்படும். இந்தத் தகவலை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

The post சபரிமலையில் தை மாத பூஜைக்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Thiruvananthapuram ,Makaravilakku ,Sabarimala Ayyappan temple ,Tai month ,
× RELATED சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ்...