×

ஏக்நாத் ஷிண்டே தரப்பு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தை ஏற்க முடியாது: மகாராஷ்டிரா சபாநாயகர் தீர்ப்பு

 

மஹாராஷ்டிரா: ஏக்நாத் ஷிண்டே தரப்பு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தை ஏற்க முடியாது என்று மகாராஷ்டிரா சபாநாயகர் கூறியுள்ளார். சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான விவகாரத்தில் மகாராஷ்டிரா சபாநாயகர் தீர்ப்பு அளித்துள்ளார். “ஏக்நாத் ஷிண்டேவை சட்டமன்றக் கட்சித்தலைவர் பதவியிலிருந்து நீக்க உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரம் இல்லை. சிவசேனா கட்சியை உடைத்து தனி அணியை உருவாக்கி, பாஜகவுடன் இணைந்து ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார். சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான விவகாரத்தில் மகாராஷ்டிரா சபாநாயகர் தீர்ப்பு அளித்துள்ளார்.

மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனாவின் 53 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் விவகாரத்தில் சபாநாயகர் ராகுல் நார்வேகர் இன்று தீர்ப்பு அளித்துள்ளார். சிவசேனாவின் தலைமை விவகாரத்தில் இரு தரப்பும் வெவ்வேறு கருத்துகளை முன்வைத்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் 2019-ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இணைந்து உத்தவ் தாக்கரேவை முதல்வராக கொண்ட கூட்டணி ஆட்சி அமைத்தது. இந்த கூட்டணி அரசு இரண்டரை ஆண்டுகள் தொடர்ந்தது.

ஆபரேசன் தாமரையால் சிவசேனா கட்சி 2 ஆக உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனாவின் 40க்கும் அதிகமான எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் கை கோர்த்தனர். இதனால் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்தது. பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார். மகாராஷ்டிராவில் பாஜக- ஷிண்டே சிவசேனா கூட்டணி ஆட்சி அமைந்தது. சிவசேனா யாருக்கு சொந்தமானது என்ற வழக்கில் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சாதகமான முடிவை தந்தது தேர்தல் ஆணையம்.

அதற்கு முன்னதாக ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய உத்தவ் தாக்கரே அணி கோரிக்கை விடுத்தது. ஏக்நாத் ஷிண்டே தரப்பும் உத்தவ் தாக்கரே அணியின் எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து 53 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சிக்கியுள்ளனர். மகாராஷ்டிரா சட்டசபை சபாநாயகர் ராகுல் நார்வேகர் எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தார். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தரப்பு சார்பாக வழக்கு தொடரப்பட்டது.

உச்சநீதிமன்றமும் சபாநாயகருக்கு கடுமையாக பல முறை எச்சரிக்கை விடுத்து இறுதி முடிவெடுக்க உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தின் கெடு இன்றைய தினம் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தரப்பு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தை ஏற்க முடியாது என்று மகாராஷ்டிரா சபாநாயகர் தீர்ப்பு அளித்துள்ளது.

ஏக்நாத் ஷிண்டேவை சட்டமன்றக் கட்சித்தலைவர் பதவியிலிருந்து நீக்க உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரம் இல்லை என்றும் சபாநாயகர் ராகுல் நர்வேகர் தீர்மானம் நிறைவேற்றினார். உண்மையான சிவசேனா என வர்ணிக்கப்படும் ஷிண்டே பிரிவு. பெரும்பான்மையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு ஆகும். 2018-ம் ஆண்டைய சிவசேனா அமைப்பு சட்டத்தை முன்வைத்த உத்தவ் தாக்கரே வாதம் நிராகரித்துள்ளனர்.

The post ஏக்நாத் ஷிண்டே தரப்பு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தை ஏற்க முடியாது: மகாராஷ்டிரா சபாநாயகர் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Eknath Shinde ,Maharashtra ,Speaker ,Shiv Sena ,Party ,Dinakaran ,
× RELATED ஏக்நாத் தலைமையில் செயல்படுவது...