×

எண்களின் ரகசியங்கள்: ஆபத்துக்கு உதவும் “108”

நன்றி குங்குமம் ஆன்மிகம்

எண் 74

74 என்கிற எண் மிகச் சிறப்பு வாய்ந்தது. அதிலும் குறிப்பாக வைணவ சமயத்தில் 74 என்கிற எண் மிகப் பிரபல்யமானது. ராமானுஜர் வைணவ சமயத்தை பரப்புவதற்காக 74 மடாதிபதிகளை (சிம்மாசனாதிபதிகள்) என்று நியமித்தார். இதை அற்புதமான உவமையோடு சொல்லும் ஸ்லோகம் ஒன்று உண்டு. பகவான் பெரும் கடல். அந்த பெருங்கடலிலே நம்மாழ்வார் என்கின்ற மேகம் கருணை என்கிற நீரைப் பருகி நாதமுனி என்கின்ற மலையிலே பொழிந்தது.

மலையிலிருந்து அந்த நீர், உய்யக் கொண்டார், மணக்கால் நம்பி என்ற இரண்டு அருவிகளாக ஆளவந்தார் என்னும் பெரிய ஆற்றினை அடைந்தது. அந்த ஆற்றில் இருந்து பெரிய நம்பிகள், திருக்கோட்டியூர் நம்பிகள், திருமாலை ஆண்டான், பெரிய திருமலை நம்பிகள், திருவரங்கப் பெருமாள் அரையர் எனும் ஐந்து ஆச்சாரியார்கள் (கால்வாய்கள்) மூலம் ராமானுஜர் என்கின்ற பெரிய ஏரியை அடைந்தது. ராமானுஜர் என்கின்ற ஏரியில் இருந்து 74 மதகுகள் வழியாகப் பாய்ந்து நாடெங்கிலும் பக்திப் பயிரை செழிக்க வைத்தது என்று அந்த ஸ்லோகம் விளக்கும்.

இந்த 74 மதகுகள் உள்ள ஏரி வீராணம் ஏரி. அந்த வீராணம் ஏரிக் கரையில் உள்ள தலம்தான் வீரநாராயணபுரம் என்று சொல்லப்படுகின்ற காட்டு மன்னார்குடி. அங்கே அவதரித்த நாதமுனிகள்தான், ஆழ்வார்கள் அருளிய பாசுரங்களை எல்லாம் தொகுத்து, நாடெங்கும் பரப்பினார். வைணவத்தில் ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் மற்றும் அவர்கள் எழுதிய நூல்கள், ஆச்சாரியார் பண்புகள், சீடனுக்குரிய பண்புகள் என்று பல விஷயத்தை சொல்லுகின்ற நூல் உபதேசரத்தின மாலை. இதை இயற்றியவர் சுவாமி மணவாள மாமுனிவர். இந்த நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை 74.

எண் 75

பொதுவாக 75 என்பது முக்கால் நூற்றாண்டு காலத்தைக் குறிக்கும். இதற்காக ஒரு விழா கொண்டாடும் மரபுண்டு. மனிதர்களுக்கு 75 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டால், `பவள விழா’ கொண்டாடுவார்கள். ஒரு நிறுவனத்துக்கும் 75 ஆண்டுகள் நிரம்பிவிட்டால் பவளவிழா கொண்டாடுவதுண்டு.

எண் 80

ஒருவருடைய வாழ்க்கையில் எண்பது ஆண்டுகள் நிறைந்துவிட்டால் `அமுதவிழா’ என்று கொண்டாடுவார்கள். வைதீகமாகச் சொல்லுகின்ற பொழுது, `சதாபிஷேகம்’ என்று சொல்லுவார்கள். பதினாறு பேறுகளிலே முக்கியமான மூன்று என கருதப்படுபவை: ஆயுள், ஆரோக்கியம் மற்றும் ஐஸ்வர்யம் ஆகும். அதிலும் முதன்மையாக ஆயுளையே குறிப்பிடுகிறோம். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 80 வயதை கடக்கிறான் எனில் 1000 நிலவை கண்டவனாகிறான். சதாபிஷேகம் செய்யும் போது நமது முன்னோர்களும் தேவர்களும் வாழ்த்துவதாக ஒரு நம்பிக்கை. மனிதனின் 80-ஆம் ஆண்டு முடிந்து, எட்டாவது மாதம் ஜன்ம நட்சத்திரத்தன்று ‘‘சகஸ்ர சந்திர தர்சன சாந்தி’’ செய்யப்படுகிறது.

இந்த சாந்தியானது, உடல் ஆரோக்கியத்திற்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் செய்யப்படுகிறது. இவ்விழாவில், பிரம்மனை வேண்டி பூஜை செய்யப்படுகிறது. சதாபிஷேகம், நோய் இல்லாமலும் நல்ல உடல் மற்றும் மன நலத்துடன் இருப்பதற்காகவும், சிரஞ்சீவி போல் வாழவும் செய்விக்கப்படுகிறது. சதாபிஷேக முதல் நாளன்று ஏகாதச ருத்ரகூயம் மற்றும் ருத்ராபிஷேகம் ஆகியவை செய்யப்படுகிறது. இந்த நிகழ்வானது (விழா) மூன்று தலைமுறை பிள்ளைகள் செய்து வைக்கின்றனர் (மகன் – மகள்), (பேரன் – பேத்தி), (கொள்ளுப்பேரன் – கொள்ளுப்பேத்தி).

எண் 100-ன் பெருமை

நூறு என்பதை சதம் என்று வடமொழியில் சொல்வார்கள். ஒருவரை வாழ்த்தும்போது நூறாண்டு காலம் வாழ்க (ஸதமானம் பவதி) என்று வாழ்த்துகின்ற மரபுண்டு. காரணம், பூரண ஆயுள் என்பது நூறாண்டுக் காலம். வரலாற்றினை சொல்லுகின்ற பொழுது, 16-ஆம் நூற்றாண்டு, 18-ஆம் நூற்றாண்டு என்று நூற்றாண்டின் கணக்கில்தான் சொல்லுவார்கள். பெரும்பாலான நூல்களில், பாடல்கள் 100 என்ற எண்ணிக்கையில் இருக்கும். ஆழ்வார் பாசுரம் இடுகின்ற பொழுது, ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை நூறு ஆண்டு என்கிற கணக்கிலேயே சொல்லுகின்றார். அந்தப் பாடல் இது.

`வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவ ரேலும்,
பாதியும் உறங்கிப் போகும் நின்றதில்
பதினையாண்டு,
பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்புத் துன்பம்,
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகர் உளானே’

வேதசாஸ்திரத்தில், “தாயுர்வை புரு” (மனிதன் நூறு பிராயம் வாழ்பவன்) என்று உள்ளது. மனிதனின் வாழ்க்கையில், 100 ஆண்டு முடிந்து 101 ஆரம்பமாகும் போது, செய்யப்படும் சாந்தி ‘‘சதாபிஷேக (அ) கனகாபிஷேகம்’’ என்று அழைக்கப்படுகிறது. இலக்கியத்திலும் சதம் (நூறு) என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது.

“சாணிலும் உளன்; ஓர் தன்மை,அணுவினைச்
சத கூறு இட்ட கோணிலும் உளன்……”

இறைவன் சாணிலும் இருக்கிறான். அணுவினை நூறு கூறுகளாகப் பிளந்தால், அதற்குள்ளும் கடவுள் இருக்கிறான். பிரிக்கப்பட்ட அணுவுக்கு `கோண்’ என்று பெயர். அணுவைப் பிளக்க முடியும் என்பதை இருபதாம் நூற்றாண்டில்தான் Earnest Rutherford கண்டுபிடித்தார். ஆனால், அவருக்கு முன்பே கம்பர் அதைச் சொல்லி இருக்கிறார்.

108 எண்ணின் பெருமை

இது மிகமிக முக்கியமான ஆன்மிக எண்ணாகும். ஆபத்துக்கு உதவும் எண் 108. அதனால், ஆம்புலன்சுக்கு 108 எண் கொடுத்திருக்கிறார்கள். சூரியனுடைய குறுக்களவு பூமியின் குறுக்களவு போல 108 மடங்கு அதிகம் உள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி ஒன்பது கிரகங்களும் 12 ராசிகளினூடே சஞ்சரிக்கிறது. பன்னிரெண்டை ஒன்பதால் பெருக்கினால் வருவது 108. ஆகவே, இவற்றால் பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பு 108 என்ற எண்ணால் தெளிவாகத் தெரிகிறது.

ஆகவே, பூரணத்துவத்தைக் குறிக்கும் எண்ணிக்கையாக இந்து மதம் 108ஐக் குறிப்பிடுகிறது. நட்சத்திரங்கள் 27. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் பாதங்கள் 4. ஆக மொத்த நட்சத்திர பாதங்கள் (4×27=108) வைணவத்தில் ஆழ்வார்கள் பாசுரங்கள் பாடப்பட்ட திருத்தலங்களின் எண்ணிக்கை 108. பகவானுக்கு அர்ச்சனை செய்கின்ற பொழுது 108 என்ற எண்ணிக்கையில் நாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்வார்கள். அதற்கு `அஷ்டோத்திரசத நாமாவளி’ என்று பெயர்.

இதை அஷ்டம் + ஸ்தோத்திரம் + சதம் + நாமம் + ஆவளி என்று பிரிக்க வேண்டும். அஷ்டம் என்றால் எட்டு. சதம் என்றால் நூறு. ஆக இரண்டும் சேர்ந்து 108. ஸ்தோத்திரம் என்பது நாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்வது. நாம ஆவளி என்பது நாமங்களின் வரிசை. அநேகமாக எல்லா தேவதைகளுக்கும் இந்த 108 என்ற எண்ணிக்கையில் இருக்கும்.

பெரும்பாலான நூல்கள், நூறு என்கிற எண்ணிக்கையில் முடிவதில்லை. 108 என்ற எண்ணிக்கையில்தான் முடியும். உதாரணமாக; “ராமானுஜ நூற்றந்தாதி’’ என்கிற நூலில் உள்ள பாசுரங்களின் எண்ணிக்கை 108. நாட்டிய சாஸ்திரத்தில் உள்ள நாட்டிய அமைப்புகள் 108. சிவதாண்டவத்தின் சிவனின் தாண்டவபேதங்கள், கரணங்கள் 108தான்! நந்திகேஸ்வரர் அமைத்த ‘பரதார்ணவ’ என்ற தாளசாஸ்திரம் 112 தாளங்களைத் தருகிறது என்றாலும், இதை 108 தாள சாஸ்திரம் என்றே குறிப்பிடுகின்றனர். ‘வஸ்து ரத்ன கோஸத்தின்’ படி மங்கலப் பொருள்கள் 108தான்! சக்தி பீடங்களாக இமயம் முதல் குமரி வரை 108 தலங்கள் உள்ளன.

எண் 120

ஜோதிட சாஸ்திரத்தில், 120 எண் பெருமை பெற்றது. ஒன்பது கோள்களும் சுழற்சி முறையில் ஒருவரை ஆளுகின்றன இதனை “தசாகாலங்கள்” என்று சொல்வார்கள். சூரியனுக்கு ஆறு வருடம், சந்திரனுக்கு 10 வருடம், செவ்வாய்க்கு ஏழு வருடம், ராகுவுக்கு 18 வருடம், குருவுக்கு 16 வருடம், சனிக்கு 19 வருடம், புதனுக்கு 17 வருடம், கேதுவுக்கு ஏழு வருடம். சுக்கிரனுக்கு 20 வருடம், ஆக இவற்றையெல்லாம் கூட்டினால் 120 வருடங்கள் வரும். 100 என்பது பூரண ஆயுள் என்று சொன்னாலும்கூட, 120 ஆண்டுகள்தான் பூரணமான ஆயுள் என்கிற கணக்கு உண்டு. அப்படி வாழ்ந்தவர்கள் எல்லா கிரகங்களுடைய தசா காலங்களையும் பார்த்துவிடுவார்கள். அப்படி வாழ்ந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று சொன்னால், சுவாமி ராமானுஜர் இந்த நிலவுலகில் 120 ஆண்டு காலம் வாழ்ந்தார்.

எண் 133

இது மிக முக்கியமான ஒரு எண். காரணம், உலகப் பொதுமறை என்று வழங்கப் படுகின்ற திருக்குறளில் உள்ள அதிகாரங் களின் எண்ணிக்கை 133.

எண் 400

நானூறு என்கின்ற எண் ஒரு குறிப்பிட்ட பெருமையை உடையது. சங்க இலக்கியத்தின் மிக முக்கியமான நூல்கள் பெரும்பாலும், 400 எண்ணிக்கையில் பாடல்களைக் கொண்டதாகவே இருப்பதைப் பார்க்கின்றோம். உதாரணமாக, அகத்துறை நூலான அகநானூறு 400 பாடல்களைக் கொண்டது. புறம் பற்றிப் பேசும் பாடல்களைக் கொண்ட புறநானூறு 400 பாடல்களைக் கொண்டது. சங்கம் மருவிய கால தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று பழமொழி நானூறு.

எண் 1000

ஆயிரம் என்பதை “சகஸ்ரம்” என்று வடமொழியில் சொல்லுவார்கள். ஆயிரம் கலசங்களை வைத்து அபிஷேகம் செய்வது (சகஸ்ர கலசாபிஷேகம்) ஆயிரம் தீபங்களை (சகஸ்ர தீபம்) ஏற்றுவது ஆகும்.

ஆன்மிகத்தின் சில முக்கியமான சடங்குகள்

ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இருக்கின்றன விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், பாதுகா சகஸ்ரம் போன்ற சகஸ்ரநாம நூல்களில் உள்ள சகஸ்ரம் என்கிற சொல், அதிலுள்ள ஆயிரம் நாமங்கள் அல்லது சுலோகங்களைக் குறிப்பிடுகின்றது.

எண் லட்சம்

இனி 1000 என்ற எண்ணிக்கையின் மடங்கில் சொல்லிக்கொண்டேபோகலாம். லட்சம் என்பது சிறப்பானது. லட்சம் நாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்வதை “லட்ஷார்சனை’’ என்றும், 100 லட்ஷங்கள் நாமங்களை சொல்லி அர்ச்சனை செய்வதை “கோடி அர்சனை’’ என்று சொல்வார்கள். பெரியாழ்வார் எண்களின் எண்ணிக்கையின் பிரம்மாண்டத்தை இப்படி பல்லாண்டு பாடுகிறார்.

“பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு’’

இதில், எல்லையற்ற எண்ணிக்கை சொல்லப்படுகிறது. பல்லாண்டு என்கிறார். அதுவே, பெரிய எண்ணிக்கை. பிறகு பல ஆயிரம் ஆண்டுகள் என்கிறார். பிறகு, பல கோடி நூறு ஆயிரம் என சொல்லிக் கொண்டே போகிறார். கோடி என்கிற எண்ணிக்கையை பல ஆசிரியர்கள் நூல்களில் சொல்லியிருக்கிறார்கள்.இனி பொதுவாக எண்களைப் பற்றிய சில சுவையான செய்திகளைப் பார்ப்போம்.தமிழில் எண்களின் எண்ணிக்கையை இப்படிக் குறிப்பிடுகிறார்கள்.

1. 100 நூறு – Hundred.
2. 1000 – ஆயிரம் – Thousand.
3. 10000 – பத்தாயிரம் – Ten thousand.
4. 100000 – நூறாயிரம் – Hundred thousand.
5. பத்துநூறாயிரம் – Million.
6. கோடி – Ten million.
7. அற்புதம் – Hundred million.
8. நிகற்புதம் – Billion.
9. கும்பம் – Ten billion.
10. கணம் – Hundred billion.
11. கற்பம் – Trillion.
12. நிகற்பம் – Ten trillion.
13. பதுமம் – Hundred trillion.
14. சங்கம் – Quadrillion.
15. வெள்ளம் – Ten quadrillion.
16. ஆம்பல் – Hundred quadrillion.
17. மத்தியம் – Quintillion.
18. பரார்த்தம் – Ten Quintillion.
19. பூரியம் – Hundred Quintillion.

நிறுத்தல் அளவுகள்

4 நெல் எடை – 1 குன்றிமணி.
2 குன்றிமணி – 1 மஞ்சாடி.
2 மஞ்சாடி – 1 பணவெடை.
5 பணவெடை – 1 கழஞ்சு.
8 பணவெடை – 1 வராகனெடை.
10 வராகனெடை – 1 பலம்.
40 பலம் – 1 வீசை.
6 வீசை – 1 தூலாம்.
8 வீசை – 1 மணங்கு.
20 மணங்கு – 1 பாரம்.
நீள அளவுகள்
10 கோன் – 1 நுண்ணணு.
10 நுண்ணணு – 1 அணு.
8 அணு – 1 கதிர்த்துகள்.
8 கதிர்த்துகள் – 1 துசும்பு.
8 துசும்பு – 1 மயிர்நுணி.
8 மயிர்நுணி – 1 நுண்மணல்.
8 நுண்மணல் – 1 சிறுகடுகு.
8 சிறுகடுகு – 1 எள்.
8 எள் – 1 நெல்.
8 நெல் – 1 விரல்.
12 விரல் – 1 சாண்.
2 சாண் – 1 முழம்.
4 முழம் – 1 பாகம்.
6000 பாகம் – 1 காதம்.
4 காதம் – 1 யோசனை.

காதமும் யோசனையுமே இலக்கியங் களில் பல இடங்களில் வருகின்றன. ஒரு காத தூரம் என்பது 8 முதல் 16 கிலோ மீட்டர் வரையான ஒரு நீளமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இப்படி எண்களின் சிறப்பை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். இப்போதைக்கு இதோடு நிறுத்திக் கொள்வோம்.

முனைவர் ஸ்ரீராம்

The post எண்களின் ரகசியங்கள்: ஆபத்துக்கு உதவும் “108” appeared first on Dinakaran.

Tags : Vaishnava ,Ramanuja ,Vaishnavaism ,Dinakaran ,
× RELATED தாளம் வழங்கி தமிழ் மறை தந்த வள்ளல்