×

சில தொழிற்சங்கத்தினரின் போராட்டத்தால் பாதிப்பில்லை மாவட்டத்தில் அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கின

*தடையில்லா தொலைதூர போக்குவரத்து

*பயணிகள் மகிழ்ச்சி

திருமங்கலம் : போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவித்திருந்த போதும் மதுரை மாவட்டத்தில் நேற்று வழக்கம் போல் அரசுபஸ்கள் இயக்கப்பட்டன.அகவிலைப்படி நிலுவை தொகைகளை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முன்தினம் மாலை முதல் மாநில அளவிலான வேலை நிறுத்தம் செய்யப்படும் என சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சில போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

இதையடுத்து, மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் பஸ்களை வழக்கம்போல் இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளில் போக்குவரத்து அலுவலர்கள் ஈடுபட்டனர். நேற்று அதிகாலையில் இயக்கப்பட வேண்டிய பஸ்கள் அனைத்தையும் இயக்க, ஊழியர்கள் வருகை குறித்து பணிமனைகளில் அலுவலர்கள் கண்காணித்தனர். இதன்படி குறிப்பிட்ட தொழிற்சங்கத்தினர் தவிர மற்ற அனைத்து ஊழியர்களும் நேற்று பணிக்கு வந்தனர். இதனால் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பேருந்து போக்குவரத்து எவ்வித இடையூறும் இல்லாமல் வழக்கம்போல் நடைபெற்றது.

மதுரை நகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தின் சில பிரிவினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதே தெரியாதவகையில் அரசு பேருந்துகள் எவ்வித இடையூறும் இன்றி அனைத்து பகுதிகளுக்கும் வழக்கம்போல் இயக்கப்பட்டன. இதன்படி திருமங்கலம் அரசு போக்குவரத்து பணிமனையில் மொத்தம் 95 பஸ்கள் உள்ளன. இவற்றில் 6 வெளியூர் செல்லும் பஸ்கள். மீதமுள்ள டவுன் பஸ்களில் பெருவாரியான பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. காலை 5.30 மணிக்கு பஸ்கள் இயக்கம் துவங்கிய போது குறிப்பிட்ட பஸ்களே ஓடின.

பின்னர் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் எடுத்த துரித நடவடிக்கை காரணமாக திருமங்கலத்திலிருந்து பெருவாரியான பஸ்கள் இயக்கப்பட்டன. மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் சென்றுவந்தன. இதே போல் கிராமபுற பகுதிகளுக்கும் விருதுநகர், உசிலம்பட்டி, சோழவந்தான் உள்ளிட்ட பகுதிக்கும் டவுன்பஸ்கள் இயக்கப்பட்டன. மொத்தமுள்ள 95 பஸ்களில் 90 பஸ்கள் வரையில் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் வழக்கம் போல் பஸ்களில் பயணம் செய்தனர்.

தே நேரத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் காலையில் சிறிது நேரம் திருமங்கலம் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். திருமங்கலம் டவுன் பஸ்ஸ்டாண்ட்டில் வழக்கம் போல் அனைத்து டிப்போ பஸ்களும் வந்து சென்றன. இதே போல் நெல்லை. நாகர்கோவில், சங்கரன்கோவில், ராஜபாளையம், பாபநாசம், தென்காசி, சிவகாசி உள்ளிட்ட பகுதிகளுக்கு மதுரையிலிருந்து செல்லும் வெளியூர் பஸ்களும் வழக்கம் போலவே திருமங்கலம் வெளியூர் பஸ்ஸ்டாண்ட் வந்து பயணிகளை ஏற்றி சென்றன. இதேபோல் மேலூர் பணிமனையில் இருந்தும் பஸ்கள் வழக்கம்போல் இயங்கின. இந்த பணிமனையில் உள்ள 56 பேருந்துகளில், 46 பேருந்துகள் வழக்கமான ரூட்களில் பயணிகளுடன் இயக்கப்பட்டன.

சோழவந்தான் பணிமனையில் உள்ள 53 பேருந்துகளில் 46 பேருந்துகள் உசிலம்பட்டி, மதுரை பெரியார் பஸ் நிலையம், வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் எப்போதும்போல் இயக்கப்பட்டன. உசிலம்பட்டி பணிமனையில் உள்ள 94 பேருந்துகளில், வழக்கமான ரூட்களில் எவ்வித தடங்கலும் இன்றி 86 பேருந்துகள் இயக்கப்பட்டன. செக்கானூரணி பணிமனையில் வழக்கமாக தினந்தோறும் 48 டவுன் பஸ்கள் திருமங்கலம், வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுவது வழக்கம். இவற்றில் நேற்று 42 பஸ்கள் இயக்கப்பட்டன. இதன்படி மதுரை மாவட்டத்தில் நேற்று வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின்எண்ணிக்கையில் சுமார் 96.5 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டன என்று அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, சில போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை பைபாஸ் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக மதுரை மண்டல தலைமை பணிமனை முன்பாக, போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் ஓய்வூதியர்கள் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, மதுரை மாவட்ட கோர்ட் அருகேயுள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஊழியர்கள் திடீர் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதித்தது. அவர்களை போலீசார் கைது செய்து, விடுவித்தனர்.

தொழிற்சங்கத்தினர் வாக்குவாதம்

உசிலம்பட்டி பணிமனையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க நிர்வாகிகள் பேருந்தை எடுத்து செல்ல வந்த ஓட்டுநர்கள் மற்றும் மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்துகளை எடுத்துச்செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கிடையே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினர் டெப்பேரில் இருந்து பேருந்துகள் எடுப்பதை தடுக்கலாம் என கருதிய சில டிரைவர்கள், உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். அவர்களுக்கான பேருந்துகளை, தொமுச டிரைவர்கள் எடுத்துச்சென்று கொடுத்ததாக பணிமனை மேலாளர் முகமது ராவுத்தர் தெரிவித்தார்.

அனைத்து பேருந்துகளும்…

மதுரை நகர் மற்றும் மாவட்டத்தின் மேலூர், சோழவந்தான், உசிலம்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் இருந்து வழக்கம்போல் நேற்று காலை முதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. இருப்பினும், குறிப்பிட்ட சில தொழிற்சங்கத்தினரின் போராட்டம் காரணமாக ஒவ்வொரு பணிமனைகளிலும் இருந்து சொற்ப எண்ணிக்கையிலான பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தன. ஆனால் திருப்பரங்குன்றம் பணிமனையில் இருக்கும் 69 டவுன் பஸ்களும் எவ்வித தடையும் இன்றி வழக்கம்போல் இயங்கப்பட்டன. ,இதன் வாயிலாக, மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் அனைத்து பகுதிகளுக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் சென்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சில தொழிற்சங்கத்தினரின் போராட்டத்தால் பாதிப்பில்லை மாவட்டத்தில் அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கின appeared first on Dinakaran.

Tags : Thirumangalam ,Madurai district ,Dinakaran ,
× RELATED தண்ணீர் தொட்டியில் விழுந்த மயில் மீட்பு