×

பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க 614 ரேஷன் கடைகளுக்கு கரும்புகள் அனுப்பி வைப்பு

*கலெக்டர் ஆய்வு

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க 614 ரேஷன் கடைகளுக்கு கரும்புகள் அனுப்புவதை கலெக்டர் வளர்மதி நேற்று ஆய்வு செய்தார்.தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கம் ₹1,000 ஆகியவற்றுடன் ஒரு முழு நீள செங்கரும்பு வழங்க ஆணையிட்டுள்ளார்.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 3 லட்சத்து 5 ஆயிரத்து 876 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள செங்கரும்பு மற்றும் வேட்டி, சேலைகள் இவற்றுடன் ரூ.1,000 ரொக்கம் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது.

அதன் அடிப்படையில் கூட்டுறவு துறையின் மூலம் கடலூர் மாவட்டத்தில் இருந்து செங்கரும்புகள் கொள்முதல் செய்யப்பட்டு லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு சிப்காட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் வளர்மதி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், கரும்புகளை அனைத்து நியாய விலை கடைகளுக்கு சிறிய லாரிகள் மூலம் அனுப்பி வைத்தார்.

பின்னர், கலெக்டர் வளர்மதி கூறுகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 614 ரேஷன் கடைகளிலும் நாளை(இன்று) முதல் பொங்கல் பரிசு தொகுப்பு ரொக்கம், வேட்டி, சேலைகள் மற்றும் முழு நீள கரும்பு வழங்க அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடும்ப அட்டைதாரர்களுக்கு தேவையான முழு எண்ணிக்கையிலான கரும்புகளும் மாவட்டத்திற்கு கொண்டு வரப்படும்.

அவைகள் உடனுக்குடன் அனைத்து நியாய விலை கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்றார்.அப்போது, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் சிவக்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் சத்யபிரசாத், கூட்டுறவு துணைப் பதிவாளர்கள் சிவமணி, சந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

The post பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க 614 ரேஷன் கடைகளுக்கு கரும்புகள் அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Ranipettai ,Collector ,Varamati ,Chief Minister ,M.K. Stalin ,Tamil Thirunalam Pongal festival ,
× RELATED ராணிப்பேட்டை அருகே துக்க நிகழ்வின்போது பட்டாசு வெடித்து 12 பேர் காயம்