×

எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தில் மாவட்டத்தில் 1379 பள்ளிகளில் தூய்மை பணிகள் தொடக்கம்

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தில், 1379 பள்ளிகளில் சிறப்பு பள்ளி தூய்மை பணிகள் நேற்று முதல் தொடங்கியது. தமிழகத்தில் தூய்மையான பள்ளி வளாகங்களை கட்டமைக்கும் வகையில் ‘எங்கள் பள்ளி -மிளிரும் பள்ளி’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த, பள்ளி அளவில் மாணவர் குழுக்களை அமைக்க, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அனைத்து அரசு பள்ளிகளிலும் தூய்மையான மற்றும் சுகாதாரமான பள்ளி வளாகங்களை கட்டமைக்க ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ என்ற திட்டத்தை, கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் மாவட்ட கலெக்டர் தலைமையில் செயல்படுத்த அரசு அறிவுறுத்தியது. இந்த திட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையுடன், சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனம், மாசு கட்டுப்பாடு, ஊரக வளர்ச்சி, பொதுப்பணி, மாநகராட்சி அலுவலர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் இணைந்து செயல்படும். இந்த திட்டத்தை செயல்படுத்த, பள்ளி அளவில் அமைக்கப்படும் குழுக்கள், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, இத்திட்டத்துக்காக அமைக்கப்படும் குழுவினர் பள்ளிகளில் உள்ள இளைஞர் சுற்றுச்சூழல் அமைப்பை, மேலும் வலுப்படுத்த வேண்டும். பள்ளி வளாகத்தை சிறப்பாக தூய்மைப்படுத்துவதற்கான திட்டத்தை வகுக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டம் தொடங்கியது. தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவின்பேரில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோதிசந்திரா, பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் அதிகாரப்பட்டி அரசு பள்ளியில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டத்தின்கீழ் சிறப்பு தூய்மைப் பணிகளில் பங்கேற்றார். இத்திட்டம் தர்மபுரி மாவட்டத்தில், பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ‘எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி’ – சிறப்பு பள்ளித் தூய்மை செயல்பாடுகள், அனைத்துவகை பள்ளிகளிலும் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடக்கிறது.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெகட்ர் சாந்தி கூறியதாவது: பள்ளிக் கல்வி துறையின் சார்பாக, ‘எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி’ என்ற திட்டத்தின்கீழ் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் கருத்தாளர்களின் பங்கேற்புடன், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்துவகைப் பள்ளிகளிலும் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை சிறப்பு பள்ளித் தூய்மை செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது. தர்மபுரி மாவட்ட அளவில் 832 தொடக்க பள்ளிகளிலும், 322 நடுநிலைப் பள்ளிகளிலும், 118 அரசு உயர்நிலை பள்ளிகளிலும், 107 அரசு மேல்நிலை பள்ளிகள் என மொத்தம் 1379 பள்ளிகளில் சிறப்பு பள்ளித் தூய்மைப் பணிகள் நடைபெறுகிறது. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளியில் தூய்மை செய்ய வேண்டியவற்றை ஒருங்கிணைத்து, அந்தந்த உள்ளாட்சியின் பங்கேற்புடன் மேற்கொள்கின்றனர். பள்ளி அமைந்துள்ள சுற்றுப்புற பகுதிகளில் உள்ள முன்னாள் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களும் இப்பணியில் ஈடுபடுகின்றனர்.

கருத்தாளர்கள் வாட்ஸ் ஆப் குழு மற்றும் தொலைபேசி வாயிலாக பள்ளி தூய்மை செயல்பாடு நடைபெற இருப்பது குறித்தும், அதில் உறுப்பினர்களின் பங்களிப்பு குறித்தும் எடுத்து கூறுகின்றனர். பள்ளி நலன் சார்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு தூய்மை பணிகளில், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் கருத்தாளர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோர்களை ஒருங்கிணைத்து, சிறந்த நடவடிக்கைகளுக்கு ஊக்கமளித்து அனைத்து அரசு பள்ளிகளையும் தூய்மையான மிளிரும் பள்ளிகளாக உருவாக்கிட, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் ‘எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி’ என்ற திட்டத்தின்கீழ் நேற்று அனைத்து பள்ளிகளின் தூய்மை பணிகளில், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், கருத்தாளர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தில் மாவட்டத்தில் 1379 பள்ளிகளில் தூய்மை பணிகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Tamil Nadu ,Shining School ,
× RELATED சிறப்பு மையத்தில் தபால் வாக்களித்த அலுவலர்கள்