×

மாவட்டத்தில் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கின

*பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் 80 சதவீத அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. 15வது ஊதிய பேச்சு வார்த்தையை துவக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வாரிசு வேலை வழங்க வேண்டும். டிஏ., வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 98 மாத அகவிலைப்படி வழங்க வேண்டும். போக்குவரத்து கழக ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று சில போக்குவரத்து கழக சங்கங்களை சேர்ந்தவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய போக்குவரத்து கழக கிளைகளில் 300க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயங்கி வருகின்றன.
நேற்று காலை முதல் வழக்கம் போல், இந்த பஸ்கள் வெளியூர்கள் மற்றும் கிராமப்புறங்களுக்கு இயக்கப்பட்டன. பிற்பகலுக்கு மேல், போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் இயக்கிய பஸ்கள் மட்டும் நிறுத்தப்பட்டன.

எனினும், மற்ற தொழிற்சங்கங்களை சேர்ந்த ஓட்டுநர்கள் மற்றும் கண்டக்டர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்த நிலையில், வெளியூர் மற்றும் கிராமப்புறங்களுக்கு வழக்கம் போல் அரசு பஸ்கள் இயங்கின. இருந்த போதிலும், அதனை ஈடு செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், ஊட்டி மண்டலம் சார்பில் எல்பிஎப்., தொழிற்சங்கம் மற்றும் இதர தொழிற்சங்கத்தை சார்ந்த ஓட்டுநர், நடத்துனர் வைத்து முழுமையாக பஸ்கள் இயக்கப்பட்டன.

வேலை நிறுத்தம் தொடரும் பட்சத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து பயிற்சி பெற்ற வெளி ஓட்டுனர்களின் பட்டியல் பெறப்பெற்று அனைத்து பஸ்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து கழகம் தெரிவித்திருந்தது. இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில்,“நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. ஓட்டுநர்கள் தேவைப்படும் பட்சத்தில் முறையாக பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ ஓட்டுநர்களை வைத்து இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், காவல்துறையினரின் சார்பாக உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவை கோட்டம், ஊட்டி மண்டலம் சார்பாக பொது மக்களுக்கு இடையூறு இன்றி அனைத்து பஸ்களையும் முழுமையாக இயக்க அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.
மேலும், பாதுகாப்பு கருதி ஊட்டியில் உள்ள அரசு போக்குவரத்து கழகம், கூடலூர் அரசு போக்குவரத்து கழகம், குன்னூர் அரசு போக்குவரத்து கழகம் மற்றும் கோத்தகிரி அரசு போக்குவரத்து கழக கிளைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தற்காலிக ஓட்டுனர் மூலம் பேருந்துகள் இயக்கம்

கூடலூர் அரசு போக்குவரத்து கழக கிளையில் பணிபுரியும் அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்க ஓட்டுநர், நடத்துனர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு பதிலாக தற்காலிக ஓட்டுனர்கள் 25 பேர் நியமிக்கப்பட்டு கூடலூர் கிளையில் இருந்து பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்க செயலாளர் கருப்பசாமி தலைமையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வேலை நிறுத்த போராட்டம் குறித்து விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஓய்வு பெற்றோர் நல சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் யோகசசி சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மாவட்டத்தில் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கின appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiri district ,15th Wage ,Dinakaran ,
× RELATED கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்