×

பொங்கல் பண்டிகை: அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கான முன்பதிவு தொடக்கம்!!

மதுரை: அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடிவீரர்கள், காளைகளுக்கான முன்பதிவு தொடங்கியது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் பொங்கல் திருநாளையொட்டி தென் மாவட்டங்களில் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக அளவில் புகழ் பெற்றவை ஆகும்.

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துகொள்வதற்கான முன்பதிவு ஆன்லைனில் நடைபெறும் எனவும், போட்டிகள் வழக்கமாக நடைபெறும் இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜனவரி 15ல் அவனியாபுரம், ஜனவரி 16ல் பாலமேடு, ஜனவரி 17ல் அலங்காநல்லூரிலும் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி தரப்பட்டுள்ளது.

இந்நிலையில், அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடிவீரர்கள், காளைகளுக்கான முன்பதிவு தொடங்கியது. madurai.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. அதில், காளையின் இனம், பூர்வீகம், வயது, பல்வரிசைகள், நிறம், கொம்பின் நீளம் காளைகளுக்கான பதிவில் பதிவு செய்ய வேண்டும்.

மேலும், மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவில் கைப்பேசி எண், ஆதார் எண், பெயர், வயது, முகவரி, உயரம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். காளையை அடக்குபவர் மருத்துவச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து ஆன்லைன் மூலமே டோக்கன் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முறைகேடுகளை தடுக்க க்யூ ஆர் கோடு இணைப்புடன் டோக்கன் வழங்கப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பொங்கல் பண்டிகை: அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கான முன்பதிவு தொடக்கம்!! appeared first on Dinakaran.

Tags : Pongal Festival ,Alanganallur ,Avaniyapuram ,Balamedu ,Jallikattu ,Madurai ,Alankanallur ,Palamedu ,Tamils ,Pongal ,
× RELATED லக்கேஜ்களை மதுரையிலேயே விட்டு விட்டு...