×

கோபி நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதிகள் 2 பேர் கைது

*தனிப்படை போலீசார் அதிரடி

கோபி : கோபியில் நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய விசாரணை கைதிகள் இருவரையும் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சிங்கிரிபாளையத்தில் கடந்த 2023 டிசம்பர் 30ம் தேதி கரியகாளியம்மன் மற்றும் மாரியம்மன் கோயில்களில் 2 உண்டியலை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், திருப்பூர் மாவட்டம் மேற்குபதியை சேர்ந்த சேது (24), அஜித் (22), பாண்டியன் நகரை சேர்ந்த பரணி (19) ஆகிய 3 பேரை கடத்தூர் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து இவர்களை கோபியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதைத்தொடர்ந்து கடந்த 6-ம் தேதி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சேது, அஜித் மற்றும் பரணியை சிறுவலூர் காவல் நிலைய பகுதியில் நடைபெற்ற கோயில் உண்டியல் கொள்ளை வழக்கில் சிறுவலூர் போலீசார், காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர், இவர்களை கோபி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்2-ல் ஆஜர்படுத்தினர். பின்னர், மீண்டும் கோபியில் உள்ள மாவட்ட சிறைக்கு கொண்டு செல்ல முயன்ற போது, நீதிமன்ற வளாகத்தில் இருந்து சேதுவும், அஜித்தும் சிறுவலூர் போலீசார் பிடியில் இருந்து தப்பியோடினர்.

இதைத்தொடர்ந்து சிறுவலூர் போலீஸ் எஸ்ஐ ஜான் கென்னடி, பெண் காவலர் கீதாமணி, முதல்நிலை காவலர்கள் அருண்ராஜ் மற்றும் பழனிச்சாமி ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட எஸ்பி ஜவஹர் உத்தரவிட்டார். இந்நிலையில் தப்பி ஓடிய விசாரணை கைதிகளை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், திருப்பூர், குன்னத்தூர், தொரவலூர், பெருமா நல்லூர், அவினாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனர்.

இதற்கிடையே, நேற்று அதிகாலை பெருமாநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மேற்குப்பகுதியில் உள்ள வீட்டின் அருகே மறைந்திருந்த இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து கோபி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பிடிபட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பிய சேது, கோபியில் இரவு வரை மறைந்திருந்து விட்டு இரவில் அவிநாசி சென்றதாகவும், அஜித் நடந்தே தனது சொந்த ஊரான மேற்குபதிக்கு சென்றதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரும் கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post கோபி நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடிய விசாரணை கைதிகள் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Gobi Court ,Kobe ,Kariyakaliamman ,Mariyamman ,Singripalaya ,Gobi, Erode District ,
× RELATED கோபி, சுதாகரின் அடுத்த அதிரடி; “கோடியில் இருவர்” வெப் சீரிஸ்