×

மயிலாடும்பாறை கிராமத்தில் குடியிருப்புக்குள் வெள்ளநீர் புகுந்தது: பொதுமக்கள் வெளியேற்றம்

 

வருசநாடு, ஜன. 10: தேனி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் பரவலாக பலத்த மழை பெய்தது. நேற்றுமுன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று மதியம் 5 மணி வரை நீடித்தது. இடைவிடாது பெய்த மழையின் காரணமாக மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து வந்தது. வைகை ஆற்றின் கிளை ஓடைகளிலும் வெள்ளம் ஏற்பட்டது. மயிலாடும்பாறை அருகே உள்ள சுக்கான் ஓடையில் ஏற்பட்ட வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது.

அந்த ஓடைத்தண்ணீர் அதே பகுதியில் உள்ள பெரியகுளம் ஓடையில் திருப்பி விடப்பட்டு இருந்தது. அதிகமான தண்ணீர் வந்த காரணத்தினால் பெரியகுளம் கண்மாய் நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்ந்தது. கண்மாயிலிருந்து மறுகால் பாய்ந்த தண்ணீர் மயிலாடும்பாறை கிராமத்தின் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதனை அடுத்து அந்தப் பகுதியில் வாசித்து வந்த மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த வெள்ளத்தினால் அந்தப் பகுதியில் இருந்த ஒரு மண் வீடு இடிந்து விழுந்தது.

இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் வெள்ளநீர் புகுந்த பகுதியில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பொதுமக்களை அப்புறப்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மூல வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் வைகை அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக வைகை அணையில் இருந்து இன்று இரவு கூடுதல் உபரி நீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post மயிலாடும்பாறை கிராமத்தில் குடியிருப்புக்குள் வெள்ளநீர் புகுந்தது: பொதுமக்கள் வெளியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Mayiladumparai ,Varusanadu ,Theni district ,Moola Vaigai ,Mayiladumparai village ,Dinakaran ,
× RELATED தரைப்பாலத்தை பராமரிக்க கோரிக்கை