×

பேரையூர் அருகே மலைக்கோயில் செல்வதற்கு சாலை ஏற்படுத்த வேண்டும்: தாசில்தாரிடம் பொதுமக்கள் மனு

 

பேரையூர், ஜன. 10: பேரையூர் அருகேயுள்ள மலைக்கோயில் செல்வதற்கு, சாலை வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும் என்று தாசில்தாரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். பேரையூர் அருகே கோபால்சாமி மலைக்கோவில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க பழங்கால இந்த கோவிலுக்கு தார்ச்சாலை செல்கிறது. இதன் அருகிலுள்ள தனிநபர் இந்த சாலை அவரது பட்டா இடத்தில் இருப்பதாகக்கூறி பொதுமக்கள் செல்ல எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் நேற்று பேரையூர் தாலுகா அலுவலகத்தில் தலைமையிடத்து துணைத் தாசில்தார் மயிலேறிநாதனிடம் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில், அப்பகுதியில் உள்ள நிலத்தை அளவீடு செய்து பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி கோபால்சாமி மலைக் கோவில் செல்வதற்கு சாலை அமைத்துக்கொடுக்க வேண்டும். சாலையின் அளவுகளை வருவாய் ஆவணத்தில் பதிவிட வேண்டும் என கூறி இருந்தனர்.

இது குறித்து நரசிங்காபுரத்தைச் சேர்ந்த மற்றொரு நபர் கொடுத்த மனுவில், அவரது இடத்தையும் மேற்கண்ட தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி இருந்தார். இந்த மனுகள் குறித்து விசாரித்த தலைமையிடத்து துணைத்தாசில்தார் மயிலேறிநாதன், பிரச்னைக்குரிய இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தி , பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி கோயிலுக்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்திக்கொடுக்க தாசில்தார் செல்லப்பாண்டி ஆலோசனையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

The post பேரையூர் அருகே மலைக்கோயில் செல்வதற்கு சாலை ஏற்படுத்த வேண்டும்: தாசில்தாரிடம் பொதுமக்கள் மனு appeared first on Dinakaran.

Tags : Beraiyur ,Tahsildar ,Gopalswamy ,Dharchala ,Dinakaran ,
× RELATED பேரையூர் அருகே திறந்தவெளி கிணற்றால் ஆபத்து