×

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான கட்டிட உரிமையாளர்களுக்கு ரூ.2.29 லட்சம் அபராதம்

 

கோவை, ஜன.10: டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த கட்டிட உரிமையாளர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.2.29 லட்சம் அபராதம் விதித்தனர். கோவை மாவட்டத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதைத்தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து கொசு ஒழிப்பு பணியை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், வீடு மற்றும் கடை சுற்றுப்புறப்பகுதியில் தண்ணீர் தேங்காமல் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும், காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவுரையின் பேரில், மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி கமிஷனர் கவிதா தலைமையில், சுகாதார ஆய்வாளர் சந்திரன் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் நேற்று கிழக்கு மண்டல பகுதிக்குட்பட்ட திருமுருகன் நகர், விளாங் குறிச்சி, நேதாஜி நகர், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கட்டுமான பணி நடைபெறும் பகுதிகள், வீடுகளில் ஆய்வு செய்ததில், டிரம் மற்றும் பூந்தொட்டிகளில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகி டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய் பரவ காரணமாக இருந்த உரிமையாளர்களுக்கு ரூ.2.29 லட்சம் அபராதம் விதித்தனர். மேலும், சுற்றுப்புற பகுதிகளில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகாமல் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினர்.

The post டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான கட்டிட உரிமையாளர்களுக்கு ரூ.2.29 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Coimbatore district ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்