×

வியாபாரிகள் வருகை குறைவு ஈரோடு ஜவுளி சந்தையில் பொங்கல் வியாபாரம் மந்தம்

 

ஈரோடு, ஜன.10:ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் அப்துல்கனி ஜவுளி மார்க்கெட் செயல்பட்டு வருகின்றது. இந்த ஜவுளி மார்க்கெட்டில் நிரந்தர கடைகள், வாராந்திர கடைகள் என 700க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. வாரந்தோறும் செவ்வாய்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கமாகும். இந்த சந்தையில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கா்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மொத்த வியாபாரிகள் ஜவுளிகளை கொள்முதல் செய்வார்கள். இதே போல உள்ளூர் சிறுவியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு ஜவுளிகளை வாங்கி செல்வது உண்டு.

இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கான சீசன் விற்பனை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கி நடைபெற்று வந்தது. அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்தாண்டு எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை நடைபெறவில்லை என்று ஜவுளிச்சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் சங்க நிர்வாகி செல்வராஜ் கூறியதாவது: பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சட்டை, துண்டு, சேலை, சுடிதார், நைட்டி மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள் அதிக அளவில் விற்பனையாகும் என்பதால் அதிக அளவில் ஜவுளிகளை விற்பனைக்கு வைத்திருந்தோம்.

ஆனால் இந்தாண்டு எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் நடக்கவில்லை. காரணம் வெளிமாநிலங்களில் இருந்து வர வேண்டிய மொத்த வியாபாரிகள் மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து வர வேண்டிய வியாபாரிகள் வரவில்லை. மழை பாதிப்பு காரணமாக வியாபாரிகள் வரவில்லை. பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த வாரம் நடைபெற்ற ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தநிலையே காணப்பட்டது. இந்தாண்டு பொங்கல் பண்டிகை விற்பனையானது, வியாபாரிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இவ்வாறு கூறினார்.

The post வியாபாரிகள் வருகை குறைவு ஈரோடு ஜவுளி சந்தையில் பொங்கல் வியாபாரம் மந்தம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Abdulkani Textile Market ,Panneerselvam Park ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...