×

முக்கிய எதிர்க்கட்சி போட்டியிடவில்லை வங்கதேசத்தில் நியாயமான தேர்தல் நடத்தப்படவில்லை: ஐநா, அமெரிக்கா குற்றச்சாட்டு

டாக்கா: வங்கதேசத்தில் நடந்த பொதுத் தேர்தல் சுதந்திரமாகவோ அல்லது நியாயமாகவோ நடைபெறவில்லை என்று ஐநா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து குற்றம் சாட்டியுள்ளன. வங்கதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசிய கட்சி (பிஎன்பி) போட்டியிடவில்லை. தேர்தலின் போது ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்தன. முடிவுகள் அறிவிக்கப்பட்ட 298 தொகுதிகளில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் அவாமி லீக் கட்சி 223 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இக்கட்சியின் எம்பி.க்கள் ஜதியா சங்சாத் பாபனில் இன்று காலை 10 மணியளவில் நடைபெறும் பதவிப் பிரமாண நிகழ்ச்சியில் பதவியேற்க உள்ளனர். இவர்களுக்கு சபாநாயகர் ஷிரின் ஷர்மின் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். கோபால்கன்ஜ்-3 தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றதன் மூலம் பிரதமர் ஷேக் ஹசீனா தொடர்ந்து 8வது முறையாக எம்பி.யாக தொடர்கிறார். நான்காவது முறை பிரதமராகும் ஹசீனாவுக்கு இந்தியா, இலங்கை, ஜப்பான், பூட்டான், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வங்கதேசத்தில் நடந்த பொதுத் தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடைபெறவில்லை. அனைத்து கட்சிகளும் பங்கு பெறாதது வருத்தமளிக்கிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

ஐநா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க், ‘’புதிய அரசு ஜனநாயகம், மனித உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு கடந்த அக்டோபர் முதல் எதிர்க்கட்சி வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என 25,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வன்முறை கட்டவிழ்க்கப்பட்டு 10 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையால் தேர்தல் சிதைக்கப்பட்டது,’’ என்று கூறியுள்ளார். ‘’வங்கதேசத்தில் நடந்த 12வது நாடாளுமன்ற தேர்தலில் நம்பகமான, நியாயமான போட்டி நடக்கவில்லை. அனைத்து கட்சிகளும் போட்டியிடாததால், மக்களுக்கு வேறு வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை,’’ என்று இங்கிலாந்து குற்றம் சாட்டியுள்ளது.

The post முக்கிய எதிர்க்கட்சி போட்டியிடவில்லை வங்கதேசத்தில் நியாயமான தேர்தல் நடத்தப்படவில்லை: ஐநா, அமெரிக்கா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,UN ,US ,Dhaka ,United Nations ,United States ,United Kingdom ,Bangladesh National Party ,BNP ,USA ,Dinakaran ,
× RELATED வன்முறைகளால் பற்றி எரியும் வங்கதேசம்..மாணவர்கள் மீது தாக்குதல்