×

சபரிமலையில் நெரிசலை தவிர்க்க தரிசனத்திற்கான உடனடி முன்பதிவு இன்று முதல் நிறுத்தம்: 13ம் தேதி திருவாபரண ஊர்வலம் தொடங்குகிறது

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த டிசம்பர் 31ம் தேதி முதல் மகரவிளக்கு கால பூஜைகள் நடந்து வருகின்றன. மண்டல காலத்தை போலவே மகரவிளக்கு காலத்திலும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தினமும் சராசரியாக 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்கின்றனர். போலீசார் தேவையில்லாத கட்டுப்பாடுகளை விதிப்பதால் தரிசனம் செய்வதற்கு தினமும் 10 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. இதற்கிடையே சபரிமலையில் வரும் 15ம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் சபரிமலையில் தொடங்கி உள்ளன. நேற்று முன்தினம் முதல் 18ம் படி அருகே நடைப்பந்தலில் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.இன்று (10ம் தேதி) முதல் தரிசனத்திற்கான உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. 13ம் தேதி வரை மட்டுமே தினசரி 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். 14ம் தேதி 50 ஆயிரம் பேரும், 15ம் தேதி 40 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவிக்கப்படுவது வழக்கம். இந்த திருவாபரணம் பந்தளம் வலியகோயிக்கல் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ளது. 13ம் தேதி அதிகாலை இந்த திருவாபரணம் பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் தரிசனத்திற்காக வைக்கப்படும்.

அன்று அங்கிருந்து சபரிமலைக்கு ஊர்வலமாக கொண்டு வரப்படும்.15ம் தேதி மாலை 6.30 மணியளவில் இந்த திருவாபரணம் சன்னிதானத்தை அடையும். பின்னர் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடத்தப்படும். இந்த சமயத்தில் தான் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தெரியும். பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல் வரும் 12ம் தேதி நடைபெறுகிறது. 18ம் தேதி வரை பக்தர்கள் திருவாபரணம் அணிந்த ஐயப்பனை தரிசிக்கலாம். 19ம் தேதி வரை மட்டுமே பக்தர்கள் நெய்யபிஷேகம் நடத்த முடியும். 20ம் தேதி வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி உண்டு. மறுநாள் (21ம் தேதி) காலை 7 மணியளவில் சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் இந்த வருட மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவடையும்.

* நடை பாலத்தின் கைப்பிடி உடைந்தது
சபரிமலையில் பக்தர்கள் 18ம் படி ஏறியவுடன் இடது புறமாக சென்று அங்குள்ள ஒரு நடை பாலத்தில் ஏறி தரிசனத்திற்கு செல்ல வேண்டும். இங்கும் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டும். நேற்று மாலையில் இங்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கிருந்த கைப்பிடி உடைந்தது. இதில் பக்தர்கள் தடுமாறி கீழே விழுந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

The post சபரிமலையில் நெரிசலை தவிர்க்க தரிசனத்திற்கான உடனடி முன்பதிவு இன்று முதல் நிறுத்தம்: 13ம் தேதி திருவாபரண ஊர்வலம் தொடங்குகிறது appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Thiruvaparana ,Thiruvananthapuram ,Makaravilakku ,Sabarimala Ayyappan temple ,
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு