×

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவை திரும்ப பெற்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி: உச்சநீதிமன்ற உத்தரவு

*முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனைக்கு பின் நடவடிக்கை

சென்னை: உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினுடனான ஆலோசனைக்குப் பின், 3 பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திரும்ப பெற்று உத்தரவிட்டுள்ளார். சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலை., கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் பணியிடம் தற்போதுவரை காலியாக உள்ளது. அவற்றுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்வது தொடர்பான கோப்புகளை ஆளுநரின் பார்வைக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது.

துணை வேந்தர் நியமனத்தில் யுஜிசி பிரதிநிதிகளை நியமனம் செய்ய வேண்டும் என ஆளுநர் தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டது. ஆனால், துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெறுவதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து அனுப்பிய கடிதத்தில், பல்கலைக்கழக மானிய குழுவின் விதிகளைத்தான் துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர் பின்பற்ற வேண்டும். அந்த குழுவில் யுஜிசி பிரதிநிதி ஒருவர் இடம் பெற வேண்டும் என்பதெல்லாம் கட்டாயம் இல்லை என சுட்டிக்காட்டி இருந்தார்.

ஆனாலும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாமல், 3 பல்கலைக் கழகங்களுக்கும் துணைவேந்தர்களை தேர்வு செய்ய யுஜிசி பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய தேடுதல் குழுக்களை அறிவித்தார். இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது, உயர்கல்வித்துறையின்கீழ் இயங்கும் பல்கலைக்கழக சட்டவிதிகளில் துணைவேந்தரைத் தேர்வுசெய்யும் தேர்வுக்குழுவை ஆளுநர் அமைக்க வழிமுறை இல்லை. எந்த ஓர் ஆளுநரும், தன்னிச்சையாகத் தேடுதல் குழுவை அமைத்ததில்லை. ஆளுநரால் அமைக்கப்பட்டிருக்கும் இந்தத் தேடுதல் குழு, முழுக்க முழுக்க பல்கலைக்கழக சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு மாறானது என தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

ஆளுநரின் இந்த செயலுக்கு பல்கலைக் கழக பேராசிரியர் சங்கங்களும், மாணவர் அமைப்பினரும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில், ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிலும் இந்த தேடுதல் குழு விவகாரம் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு முதல்வருடன் ஆலோசனை நடத்த ஆளுநர் ரவிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனடிப்படையில் அண்மையில் ஆளுநர் ரவி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதனை ஏற்று அவரை முதல்வர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சந்திப்பைத் தொடர்ந்து நேற்று 3 பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய தாம் நியமித்த தேடுதல் குழுக்களை திரும்பப் பெறுவதாக ஆளுநர் ரவி அறிவித்து உத்தரவிட்டுள்ளார். கடந்த சில மாதங்களாகவே ஆளுநர் எடுக்கும் முடிவுகள், தவறானவையாக இருப்பதும், பின்னர் அவற்றை அவர் மாற்றிக் கொள்வதுமாக உள்ளார். அதேபோல்தான் பல்கலைக்கழக நியமனக் குழு விவகாரத்திலும் அவரது செயல்பாடுகள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழுவை திரும்ப பெற்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி: உச்சநீதிமன்ற உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Governor ,RN ,Ravi ,Supreme Court ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Governor RN ,M.K.Stalin. ,Chennai University ,Coimbatore Bharatiyar… ,Dinakaran ,
× RELATED ஒரு காலத்தில் ஏழ்மையின் தாயகமாக...