×

வலம்புரிவிளை குப்பை கிடங்கில் டிசம்பருக்குள் குப்பைகள் முழுமையாக அகற்ற திட்டம்

நாகர்கோவில்: நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் டிசம்பர் மாதத்துக்குள் குப்பைகள் அகற்றப்படும் என ஆணையர் ஆனந்தமோகன் தெரிவித்தார். நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் 52 வார்டுகள் உள்ளன. நாள் ஒன்றுக்கு சுமார் 110 டன்னுக்கும் அதிகமாக குப்பைகள் குவிந்து வந்தது. இந்த குப்பைகள் வலம்புரிவிளை உரக்கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. அங்கு குப்பைகள் மலைபோல் குவிந்தது. மேலும் அடிக்கடி தீ விபத்தும் ஏற்பட்டு வந்ததுடன், துர்நாற்றமும் வீசியது. மேலும் வலம்புரிவிளையை சுற்றி உள்ள குடியிருப்புகளில் இருக்கும் மக்களுக்கு தொற்று நோய்களும் ஏற்பட்டு வந்தன. இந்த உரக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் தரப்பிலும், அரசியல் கட்சியினர் சார்பிலும் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. தொடர் போராட்டங்களும் நடந்தன. குப்பை கிடங்கை இடம் மாற்றம் செய்வதில் பெரும் சிக்கல்கள் எழுந்தன. இதன் அடிப்படையில் மாநகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை பயன்படுத்தி அந்தந்த பகுதிலேயே உரம் தயாரிக்க மாநகராட்சி முடிவு செய்தது.

இதற்காக மாநகர பகுதியில் வடசேரி பஸ் நிலையம் அருகே, அனாதைமடம் மைதானம், வலம்புரிவிளை உரகிடங்கு உள்பட 11 இடங்களில் நுண்ணுயிர் உரக்கிடங்கு அமைக்கப்பட்டது. மாநகரில் சேரும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் அனைத்தும் உரமாக்கப்பட்டன. மக்காத குப்பைகள் வலம்புரிவிளைக்கு கொண்டு வரப்பட்டு சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நுண்ணுயிர் உரக்கிடங்கு செயலாக்கத்துக்கு வந்த பின், வலம்புரி விளையில் குப்பை கொட்டுவது தடை செய்யப்பட்டது. அடுத்த கட்டமாக வலம்புரிவிளையில் மலைபோல் குவிந்த குப்பைகளை, பயோ மைனிங் முறையில் மாற்றிட சுமார் ₹10 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக குப்பைகளை தரம் பிரிக்க தனியார் நிறுவனத்திடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டன. முதலில் இந்த பணிகள் மந்த கதியில் நடந்தன.

பின்னர் மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையர் ஆனந்தமோகன் ஆகியோர் இந்த பணிகளை வேகப்படுத்தும் வகையில், முதலில் இருந்த நிறுவனத்தை மாற்றி விட்டு வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைத்தனர். மேலும் குப்பைகளை தரம் பிரிக்கும் வகையில் கூடுதல் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. அதன் மூலம் தற்போது குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகள் நடக்கின்றன. வலம்புரிவிளை உரக்கிடங்கில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 300 மெட்ரிக் டன், குப்பைகள் கிடந்தன. இவற்றில் தற்போது வரை 18 ஆயிரத்து 170 மெட்ரிக் டன் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. இன்னும் 98 ஆயிரத்து 130 மெட்ரிக் டன் குப்பைகள் தரம் பிரிக்கப்பட வேண்டும்.

இந்த பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த வருட இறுதிக்குள் இந்த பணிகள் முடிவடையும் என எதிர்பார்ப்பதாக ஆணையர் ஆனந்தமோகன் கூறினார். தற்போது தினசரி குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகள் நடக்கின்றன. மேலும் குப்பையில் அடிக்கடி தீ விபத்துக்கள் நடந்தன. இதை கட்டுப்படுத்தும் வகையில், தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வசதிகளும் செய்யப்பட உள்ளன. தினமும் 1200 டன் குப்பைகளை பிரிக்கும் வகையில் திட்டமிடப்பட்டு பணிகள் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வலம்புரிவிளை குப்பை கிடங்கில் டிசம்பருக்குள் குப்பைகள் முழுமையாக அகற்ற திட்டம் appeared first on Dinakaran.

Tags : VALAMBURIVILA ,GARBAGE WAREHOUSE ,NAGARGO ,VALAMBURIVILI ,GARBAGE ,WAREHOUSE ,COMMISSIONER ,ANANDAMOGAN SAID ,Nagarko ,Valampurivila Garbage Warehouse ,Dinakaran ,
× RELATED 4 ஆண்டுகளுக்கு பின் கைதான நாகர்கோவில்...