×

கடலூரில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம்: 3 மாநில பெண்கள் பங்கேற்பு

கடலூர்: கடலூரில் நடைபெற்று வரும் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாமில் 3 மாநில இளம்பெண்கள் கலந்து கொண்டனர். அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு 2024ம் ஆண்டிற்கான ஆட்கள் சேர்ப்பு முகாம் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் கடந்த 4 ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெறுகிறது.இதற்கான எழுத்துத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு,கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. ஆட்சேர்ப்பு முகாமையொட்டி விளையாட்டரங்கம் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆட்சேர்ப்பு முகாம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி காலை 7 மணி வரை நடைபெறுகிறது.

கடந்த 4ம் தேதி முதல் நடைபெற்ற முகாமில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இன்று பெண்களுக்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட 3 மாநிலங்களை சேர்ந்த ஏராளமான இளம்பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இவர்களுக்கு தேர்வு நுழைவுச்சீட்டு, கல்விச் சான்றிதழ்கள், காவல்துறை நடத்தை சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்பட 18 வகையான சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது. இதன் பின்னர் உடல் தகுதி தேர்வு நடைபெற்றது. கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழை காரணமாக, கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால், உடல் தகுதி தேர்வு மட்டும் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் சாலையில் நடத்தப்பட்டது.

The post கடலூரில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம்: 3 மாநில பெண்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Indian Army ,Cuddalore Anna Stadium ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை