×

ஆன்மிகம் பிட்ஸ்: காம்பீலி அம்மன்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

தூண் சிற்பங்களாகக் கயிலாயநாதர்

பெருந்தூண்களைக் கொண்டு ஆலயங்களில் மண்டபங்கள் அமைக்கப்பட்டன. இத்தகு பெருந்தூண்களில் பெரிய பெரிய சிலைகளை அமைத்து மகிழ்ந்தனர். சில தலங்களில் தூண் சிற்பமாக கயிலாயநாதர் அமைக்கப் பட்டிருப்பதையும் காண்கிறோம். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மீனாட்சி சந்நதிக்கு நேராக வெளியில் அமைந்துள்ள பெரிய தூணில் கண்ணைக் கவரும் வகையில் நுணுக்கமான வேலைப் பாடுகளுடன் கூடிய கயிலாயநாதரைக் காண்கிறோம். இது சிற்ப உலகில் தனிச் சிறப்புப் பெற்றதாகும்.

கீழ்வேளூர் அட்சய தாண்டவம்

நாகப்பட்டினம் திருவாரூர் வழியில் உள்ள கீழ்வேளூர் பாடல் பெற்ற பதியாகும். இங்கு பெருமான் பத்து கரங்களுடன் அட்சய தாண்டவத்தை ஆடுகிறார். இது பெருமான் ஆடும் காப்புத் தாண்டவமாகும் வலது காலின் குதிகாலை மட்டும் சற்று உயர்த்தி ஸ்வஸ்திக நிலையில் வைத்துள்ளார். பிரம்மனும் லட்சுமியும் கர தரளமிட நந்தி மத்தளம் முழக்க, இந்திரன் வேணுகானம் இசைக்க திருமால் மிருதங்கம் வாசிக்க பெருமான் ஆடும் கூத்தை அகத்தியரும் லோபா முத்திரையும் கண்டுகளிக்கின்றனர். இதனை சந்தியா தாண்டவம் எனவும் அழைக்கின்றனர்.

காம்பீலி அம்மன்

வடாற்காடு மாவட்டத்தில் உள்ள சில ஊர்களில் காம்பீலி அம்மன் எனும் பெயரில் எழுந்தருளியிருக்கும் கிராமிய தெய்வத்தைக் காண்கிறோம். இவள் காம்பீலியில் இருந்து கொண்டாடி அழைத்து வரப்பெற்ற குலதெய்வம் ஆவாள். காம்பீலி அந்த நாளில் புகழ் பெற்ற நகரமாக விளங்கியிருக்க வேண்டும். அங்கிருந்து இடம் பெயர்ந்தவர் தங்களுடன் தம் குலத்தைக் காத்து அருள்பாலிக்க மடிமண் கோயிலாக இவருடைய ஆலயத்தை அமைத்திருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

வீரட்டகாசர் விரும்பும் சபைகள்

சிவபெருமான் உயிர்களைக் காப்பதற்கும், பகைவர்களை வெல்வதற்கும் கொண்ட கோலங்கள் வீரட்டகாசக் கோலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இக்கோலத்துடன் பெருமான் எழுந்தருளியுள்ள இடங்களும், சபைகள் என்றே அழைக்கப்படுகின்றன. எடுத்துக் காட்டாக காமனை வென்றழித்த இடமான கொருக்கை வீரட்டத்திலுள்ள சபை காமாங்கினி நாசசபை என்றும், திருக்கடையூரிலுள்ள காலசம்ஹார சந்நதி காலாந்தக சபை என்றும், வழுவூரில் கஜசம்ஹாரர் எழுந்தருளியுள்ள சபை ஞானசபை என்றும் அழைக்கப்படுகின்றன. வழுவூரில் ரகசிய யந்திரம்
உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடையபலம் சகஸ்ரலிங்கேஸ்வரர்

வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்திற்கு அருகில் அடையபலம் உள்ளது. அடையபலம் சைவ சமய வரலாற்றில் சிறந்த இடத்தைப் பெற்ற ஊராகும். அப்பைய தீக்ஷிதர் அவரது சீடர் நீலகண்ட தீக்ஷிதர், இரத்தின கேடக தீக்ஷிதர் முதலான மகா வித்வான்கள் வாழ்ந்த தலம். இங்கு சகஸ்ரலிங்கேஸ்வரர் ஆலயம் தனியாக உள்ளது. மகா சிவபக்தர்களாகவும், வடமொழியில் பேரறிஞர்களாகவும் வாழ்ந்த இந்த வம்சத்தினர் ஆயிரம் லிங்கம் அமைத்து வழிபாடு செய்துள்ளனர்.

தொகுப்பு: நாகலட்சுமி

The post ஆன்மிகம் பிட்ஸ்: காம்பீலி அம்மன் appeared first on Dinakaran.

Tags : Campili ,Mandapams ,Kailayanath ,Kungumum Anmigam ,Meenakshi ,Madurai Meenakshiamman Temple… ,Kambeeli Amman ,
× RELATED ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் கோயில்...