×

பொள்ளாச்சி -உடுமலை ரோட்டில் பாதை அடைக்கப்பட்டதால் மக்கள் சாலை மறியல்

*போக்குவரத்து பாதிப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி உடுமலை ரோடு மரபேட்டையில் இருந்து, ஊஞ்சவே லம்பட்டி வரை சுமார் மூன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அகலப்படுத்தப்பட்டு, ஆறுவழிச் சாலையாக மாற்றப்பட்டது. ரோடு செல்லும் வழியில் இருபுறமும் பல்வேறு கிராமங்கள் இருப்பதால், இந்த ரோட்டின் தடுப்புகளில் ஆங்காங்கே வாகனங்கள் திரும்பிச் செல்லும் வகையில் இடம் விட்டு பாதை ஏற்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால், சில மாதங்களுக்கு முன்பு தொழில் பேட்டை பகுதியில் உள்ள தடுப்பு சுவர் நடுவே வாகனங்கள் சென்று வர ஏற்படுத்தப்பட்ட பகுதி அடைக்கப்பட்டது. அதேபோல், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அதிகம் வந்து செல்லும் இடமான சின்னம்பாளையம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரி முன்பாக செல்லும் தடுப்பு பகுதியில் ஏற்படுத்தப்பட்ட இடைவெளி, நேற்று நள்ளிரவு திடீரென தடுப்புக்கல்லால் அடைக்கப்பட்டது.

இதனால், அவசர தேவைக்கு மாக்கினாம்பட்டி, சின்னம்பாளையம் உள்ளிட்ட கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் விரைந்து செல்ல முடியாமல், சுமார் இரண்டு கிலோமீட்டர் வரை சுத்தி செல்லும் வகையில் இருந்தது.இதையடுத்து நேற்று காலை திடீரென சின்னாம்பாளையம் ஊராட்சி தலைவர் ஆனந்த், மாக்கினாம்பட்டி, ஊஞ்சலம்பட்டி ஊராட்சி தலைவர் மாரியம்மாள், துணைத்தலைவர் அழகிரி ராஜ் முன்னிலையில் பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து மிகுந்த அப்பகுதியில், மக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அவர்கள் நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த கிழக்கு ஸ்டேஷன் போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது பொதுமக்கள், வாகனங்கள் சென்று வருவதற்கும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் ஏற்படுத்தப்பட்ட பாதை அடைப்பை அப்புறப்படுத்தினால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என கோஷம் எழுப்பினர். இதனால், மேலும் பரபரப்பு உண்டானது.

சிறிது நேரத்தில் அதிகாரிகள் உங்கள் கோரிக்கை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். மேலும் ஏற்கனவே இருந்த போக்குவரத்து பாதையில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருந்த கான்கிரீட் தடுப்புகளை கிரேன் மூலம் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. இதை எடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.இதையடுத்து, பொள்ளாச்சி வருவாய் கோட்ட உதவி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், பொள்ளாச்சி- உடுமலை நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சிரமமின்றி பாதுகாப்பாக பயணிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலையின் சென்டர் மீடியனில் மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். மரப்பேட்டை முதல் ஊஞ்சவேலாம்பட்டி வரை பொருத்தமான இடத்தை தேர்வு செய்து, அங்கு சாலை விதிகளுக்கு உட்பட்டு ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையின் இருபுறத்திலும் உள்ள ஆக்கிரமிப்புகளையும், பக்கவாட்டு சுவற்றையும் அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.

The post பொள்ளாச்சி -உடுமலை ரோட்டில் பாதை அடைக்கப்பட்டதால் மக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Pollachi-Udumalai road ,Pollachi ,Pollachi Udumalai ,Marapet ,Oonjwe Lambatti ,Pollachi-Udumalai ,Dinakaran ,
× RELATED பைக் மோதி நீதிபதி பரிதாப பலி