×

‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டத்தில் மாவட்டத்தில் 1713 பள்ளிகளில் தூய்மை பணி தொடக்கம்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1713 பள்ளிகளில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டத்தின் கீழ் பள்ளிகளை தூய்மை செய்யும் பணி தொடங்கியது. தமிழக பள்ளிக்கல்வி துறையின் வழிகாட்டுதலின்படி, ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டம், கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் நோக்கில், மாவட்ட அளவிலான குழுக்கள் (துணைக் குழுக்கள்) அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தூய்மை, வகுப்பறை தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மாணவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்தல், பள்ளி வளாகத்தில் மரம் நடுதல் மற்றும் பராமரித்தல், சுகாதாரமான கழிப்பறை வசதி இருப்பதை உறுதி செய்தல், பள்ளிகளில் காய்கறித்தோட்டம் அமைத்தல், பயிரிட்ட காய்கறிகளை சத்துணவு திட்டத்திற்கு பயன்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மேலும், மாணவ, மாணவிகள் தங்களால் உருவாக்கப்படும் காகித குப்பைகளை, அதற்கென வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும். சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கழிப்பறைகளை முறையாக பயன்படுத்தி, சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும். இத்திட்டத்தை ஊராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை, வனத்துறை, மாநகராட்சி நிர்வாகி, விவசாயத்துறை, மருத்துவத்துறை, பேரூராட்சிகள் துறை போன்ற துறைகளின் ஒத்துழைப்புடன், சுற்றுச்சூழல் தொடர்பான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன், பள்ளிகளில் உள்ள மாணவர் அமைப்புகளான என்எஸ்எஸ், என்சிசி, ஜேஆர்சி சாரண, சாரணியர் மற்றும் சுற்றுச்சூழல் மன்றங்கள் மூலம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் செயல் முறைகளின்படி, “எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி” சிறப்பு பள்ளி தூய்மை செயல்பாடுகள் நேற்று துவங்கப்பட்டு, நாளை (10ம் தேதி) வரை, 3 நாட்கள் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 1441 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் மற்றும் 272 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 1713 பள்ளிகளில், நேற்று பள்ளிகளை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி தொடங்கியது. நாளை (10ம் தேதி) வரை 3 நாட்கள் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் நிகழ்வு நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி கூறியதாவது: எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி சிறப்பு பள்ளி தூய்மை செயல்பாடுகள் துவங்கப்பட்டுள்ளது. இதில் பெற்றோர்களை பெருமளவில் பங்கேற்க செய்ய, தலைமை ஆசிரியர் வழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்பது மிகவும் முக்கியமானதாகும். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இந்த நிகழ்வின் அவசியத்தை எடுத்துக்கூறி, அவர்களையும் இணைத்து கொள்ள வேண்டும். பள்ளியின் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரை இந்த செயல்பாட்டில் ஈடுபடுத்த வேண்டும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் எடுத்துரைத்து, இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு தூய்மை பணிகளில், மேலாண்மை குழுவிற்கு ஊக்கமளித்து, அனைத்து பள்ளிகளையும் தூய்மையான மிளிரும் பள்ளிகளாக உருவாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் நடைபெறுவதை, இடைநிலை மற்றும் தொடக்க கல்வி மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டத்தில் மாவட்டத்தில் 1713 பள்ளிகளில் தூய்மை பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Tamil Nadu School Education Department ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்