×

“பொங்கல் பண்டிகை வருவதால், மக்கள் பாதிக்கப்படுவார்கள்”… போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்ததிற்கு எதிராக 2 மனுக்கள் இன்று விசாரணை!!

சென்னை : போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு
எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பழைய ஓய்வுதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஜன.9ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து தொழிலாளர் நல இணை ஆணையர் தலைமையில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை 3 கட்டங்களாக நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு எட்டப்படாததால் போக்குவரத்து ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் போக்குவரத்து ஊழியர் வேலை நிறுத்தம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வு முன்பு வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் முறையீடு செய்தார். அதில், “பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும்,” என்று முறையிடப்பட்டது. இதையடுத்து முறையீடு மனுவாக தாக்கல் செய்யும் பட்சத்தில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா அமர்வு தெரிவித்துள்ளது.

The post “பொங்கல் பண்டிகை வருவதால், மக்கள் பாதிக்கப்படுவார்கள்”… போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்ததிற்கு எதிராக 2 மனுக்கள் இன்று விசாரணை!! appeared first on Dinakaran.

Tags : Pongal festival ,Chennai ,Transport Corporation ,Dinakaran ,
× RELATED சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு...