×

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதிய காவல் நிலையம் அமைப்பு: இன்ஸ்பெக்டர் உள்பட 55 போலீசார் நியமனம்

கூடுவாஞ்சேரி, ஜன.9: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதிதாக காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இதில், ஒரு இன்ஸ்பெக்டர், 11 எஸ்ஐ உட்பட 55 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் கடந்த 30ம் தேதி கலைஞர் நூற்றாண்டு முனையம் பேருந்து நிலையத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போலீஸ் பூத் அமைக்கப்பட்டு இயங்கி வந்தது. இந்நிலையில், ஒட்டேரி மற்றும் கூடுவாஞ்சேரி ஆகிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள சில கிராமங்களை பிரித்து புதிதாக கிளாம்பாக்கம் காவல் நிலையமாக மாற்றப்பட்டு நேற்று முன்தினம் மாலை முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. இதனை அடுத்து கிளாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு ஒரு இன்ஸ்பெக்டர், 11 சிறப்பு எஸ்ஐக்கள் மற்றும் பெண் போலீசார் உட்பட 55 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இது நேற்று முன்தினம் முதல் செயல்பாட்டிற்கு வந்தது. கிளாம்பாக்கம் புதிய காவல் நிலையம் கட்டுப்பாட்டில் வரும் கிராமங்கள் விவரம் வருமாறு, கிளாம்பாக்கம் மற்றும் அதில் உள்ள 8 தெருக்கள், அய்யஞ்சேரி கிராமத்தில் உள்ள ரேவதிபுரம், கங்கை நகர், யமுனை நகர் உட்பட 13 தெருக்கள், காரணைப்புதுச்சேரி, அய்யஞ்சேரி கூட்ரோடு, ஜிஎஸ்டி. சாலையை ஒட்டி உள்ள பிள்ளையார் கோவில் தெரு, ஈஸ்வரன் கோவில் தெரு, கந்தன் தெரு, வாமணன் தெரு, வள்ளி தெரு மற்றும் அதற்குள் அடங்கிய 4 குறுக்கு தெருக்கள் மேலும் காரணைப்புதுச்சேரி, காட்டுர், பெரியார் நகர், மகாலட்சுமி நகர் விரிவு பகுதி, கொளப்பாக்கம், ஊனமாஞ்சேரி கிராமங்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள புதிய குடியிருப்பு பகுதிகள், வண்டலூர் ரணியம்மன் நகர், மலையடி நகர், வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் உயிரியல் பூங்கா ஊழியர்கள் குடியிருப்பு பகுதி ஆகியவை கிளாம்பாக்கம் காவல் நிலைய கட்டுப்பாட்டில் இணைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இனிவரும் காலங்களில் கிளாம்பாக்கம் காவல் நிலையத்தில் சென்று புகார் அளிக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

The post கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதிய காவல் நிலையம் அமைப்பு: இன்ஸ்பெக்டர் உள்பட 55 போலீசார் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Clambakkam bus station ,Guduvanchery ,Clambakkam ,SI ,Artist ,Centenary ,Terminus ,Klambakkam ,Vandalur, Chengalpattu district ,Klambakkam bus station ,Dinakaran ,
× RELATED அரசு, தனியார் பேருந்துகளில்...