×

நத்தம் அருகே குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்: 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

 

நத்தம், ஜன. 9: நத்தம் அருகே குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நத்தம் அருகே செந்துறை பாறைப்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக கல் குவாரி அமைப்பதற்கு அரசு டெண்டர் விடுவதை தொடர்ந்து முன்னேற்பாடு பணிகளாக அப்பகுதியை மாவட்ட கனிமவளத்துறையினர் சென்று பார்வையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த அப்பகுதிகளான பாறைப்பட்டி, சரளைப் பட்டி, சீலமநாயக்கன்பட்டி, மாதவ நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் நேற்று சரளைபட்டி அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் சதீஸ்குமார், சப் – இன்ஸ்பெக்டர் பூபதி உள்ளிட்டோர் அவர்களிடம் சமரசம் பேசினர்.

அப்போது ஏற்கனவே பிள்ளையார்நத்தத்தில் குவாரி இருப்பதே சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதுடன், நிலத்தடி நீர்மட்டம் குறைய வாய்ப்பாக அமைவதுடன் விவசாய உற்பத்தியும் பாதிக்கும் என்ற நிலையில் மேலும் இப்பகுதியில் புதிதாக கல்குவாரிகளுக்கு டெண்டர் விடுவதால் விவசாயத்தில் உற்பத்தி பாதிப்பால் தொழில் நசிந்து விடும் என்று கூறினர்.

அதற்கு அதிகாரிகள் இது குறித்து நத்தம் தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு அதில் கிராம மக்கள் தங்கள் கருத்தை எடுத்துக் கூறுவதன் மூலம் தக்க நடவடிக்கை எடுக்க வாய்ப்பாக அமையும் என்று கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் 1 மணி நேரம் போக்குவத்து பாதிக்கப்பட்டது.

The post நத்தம் அருகே குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்: 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Natham ,Sentura Bhikhapatti ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை...