×

டெல்லி, பஞ்சாப் தொகுதி பங்கீடு காங்கிரஸ், ஆம்ஆத்மி முதற்கட்ட பேச்சுவார்த்தை: மீண்டும் சந்திக்க முடிவு

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ அரசை வீழ்த்த 28 எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன. இந்த கூட்டணி சார்பில் ஒவ்வொரு மாநிலங்களிலும் தொகுதி பங்கீட்டை இந்த மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக டெல்லி, பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி இடையே நேற்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது.

டெல்லியில் 7 மக்களவை தொகுதிகளும், பஞ்சாப் மாநிலத்தில் 13 தொகுதிகளும் உள்ளன. காங்கிரஸ் கட்சி சார்பில் தொகுதி பகிர்வு குழு தலைவர் முகுல் வாஸ்னிக் தலைமையில் அசோக் கெலாட்,டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி, மூத்த தலைவர்கள் சல்மான் குர்ஷித், மோகன் பிரகாஷ் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை எம்பி சந்தீப் பதக், டெல்லி அமைச்சர்கள் அடிஷி, சவுரப் பரத்வாஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தை முடிவு வெளியிடப்படவில்லை. ஆனால் விரைவில் மீண்டும் சந்தித்து பேச அவர்கள் முடிவு செய்துள்ளனர். இதுபற்றி காங்கிரஸ் தலைவர் முகுல் வாஸ்னிக் கூறுகையில், ‘ தொகுதி பங்கீடு குறித்து விவாதித்துள்ளோம். சில நாட்களுக்குப் பிறகு, மீண்டும் சந்தித்து, இறுதி முடிவு எடுப்போம். அதன்பின் தீவிர தயாரிப்புடன் தேர்தலில் போட்டியிட்டு பாஜவை தோற்கடிப்போம். காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மியும் இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம்’ என்றார்.

* டெல்லியில் ஆம்ஆத்மி 4; காங்.க்கு 3 தொகுதி
டெல்லியில் ஆம்ஆத்மி 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று தெரிகிறது. குறிப்பாக காங்கிரசுக்கு புதுடெல்லி, சாந்தினிசவுக், வடகிழக்கு டெல்லி தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. மேலும் குஜராத், அரியானா, கோவாவிலும் தொகுதி ஒதுக்க ஆம்ஆத்மி கோரிக்கை விடுத்துள்ளது. குஜராத் ஆம்ஆத்மி எம்எல்ஏ சைத்தார் வசவா என்பவரை பரூச் எம்பி தொகுதி வேட்பாளராக ஆம்ஆத்மி ஏற்கனவே அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று அவரை சிறைக்கு சென்று கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.

The post டெல்லி, பஞ்சாப் தொகுதி பங்கீடு காங்கிரஸ், ஆம்ஆத்மி முதற்கட்ட பேச்சுவார்த்தை: மீண்டும் சந்திக்க முடிவு appeared first on Dinakaran.

Tags : Delhi, Punjab ,Congress ,AAP ,New Delhi ,Aam Aadmi Party ,Delhi ,Punjab ,Lok Sabha elections ,India ,BJP government ,Punjab seat ,
× RELATED குஜராத்தில் இன்று சுனிதா கெஜ்ரிவால் பிரசாரம்