×

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் பா.ஜ அமைச்சர் படுதோல்வி: காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ அமைச்சர் சுரேந்திரபால்சிங் படுதோல்வி அடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத்சிங் அபார வெற்றி பெற்றார். 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் மபி, ராஜஸ்தான், சட்டீஸ்கரில் பா.ஜவும், தெலங்கானாவில் காங்கிரசும், மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணியும் ஆட்சியை கைப்பற்றின. ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதியில் கடந்த நவம்பர் 25ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் 115 இடங்களில் பா.ஜ வெற்றி பெற்று காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.

பஜன்லால் சர்மா கடந்த டிச.15ம் தேதி புதிய முதல்வராக பதவி ஏற்றார். கரண்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனார் மரணம் அடைந்ததால், அங்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த தொகுதியில் பாஜ சார்பில் சுரேந்திர பால் சிங் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இவரை எதிர்த்து குர்மீத் சிங் கூனாரின் மகன் ரூபிந்தர் சிங் கூனார் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களம் இறங்கினார். இந்த நிலையில் டிச.30ம் தேதி விரிவாக்கம் செய்யப்பட்ட ராஜஸ்தான் அமைச்சரவையில் சுரேந்திரபால் சிங் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தநிலையில் ஜன.5ம் தேதி கரண்பூர் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 81.38 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. முதல் இரண்டு சுற்றுகள் எண்ணும் போது முன்னிலை பெற்ற அமைச்சர் சுரேந்திரபால்சிங் அதன்பின் காங்கிரஸ் வேட்பாளர் ரூபிந்தர் சிங் கூனாரிடம் பின்தங்க தொடங்கினார்.

தொடர்ந்து முன்னிலை பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ரூபிந்தர்சிங் இறுதியில் 11,283 ஓட்டு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். அமைச்சராக நியமிக்கப்பட்ட சுரேந்திரபால் சிங் படுதோல்வி அடைந்தார். காங்கிரஸ் வேட்பாளர் ரூபிந்தர்சிங் கூனார் 94,950 ஓட்டுகள் பெற்றார். பா.ஜ வேட்பாளர் சுரேந்திரபால்சிங் 83,667 ஓட்டுகள் பெற்றார். இந்த வெற்றி மூலம் ராஜஸ்தான் சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 70ஆக உயர்ந்தது. ஆட்சி அமைத்த ஒரே மாதத்திற்குள் ராஜஸ்தானில் பாஜ பின்னடைவை சந்தித் துள்ளது.

* பா.ஜ ஆணவம் உடைந்துவிட்டது
காங்கிரஸ் வேட்பாளர் ரூபிந்தர்சிங் கூறுகையில்,’எனக்கு வாக்களித்த கரண்பூர் மக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். ஒன்றிய அமைச்சர்கள் கூட பிரசாரத்திற்கு வந்திருந்தனர். ஆனால் மக்கள் அவர்களை நிராகரித்து ஜனநாயகத்தை வெற்றிபெறச் செய்தார்கள்’ என்றார். வெற்றி பெற்ற ரூபிந்தர்சிங்கிற்கு காங்கிரஸ் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட் உள்ளிட்டோர் அவரது வெற்றியை புகழ்ந்தனர்.

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், ‘கரண்பூர் மக்கள் பாஜவின் ஆணவத்தை உடைத்துள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் ரூபிந்தர் சிங் கூனார் அங்கு வெற்றி பெற்றார். ஒருவரை அமைச்சர் ஆக்கினாலும், மக்கள் பிரதிநிதி ஆக்குவது மக்கள் தான் என்பதை, பா.ஜ.,வின் திமிர் பிடித்த தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்’ என்றார்.

* அமைச்சர் பதவி விலகுவாரா?
ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு எம்எல்ஏவாக தேர்வு செய்யப்படும் முன்பே அமைச்சரவை விரிவாக்கத்தில் சுரேந்திரபால் சிங் அமைச்சராக்கப்பட்டார். தற்போது தேர்தலில் தோல்வி அடைந்து விட்டதால் அவர் எப்போது பதவி விலகுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அமைச்சராக நியமிக்கப்பட்ட ஒருவர் அடுத்த 6 மாதத்தில் மாநில சட்டப்பேரவைக்கு எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட வேண்டும். இல்லை என்றால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த விஷயத்தில் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது விரைவில் தெரிய வரும்.

The post ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் பா.ஜ அமைச்சர் படுதோல்வி: காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Rajasthan Legislative Assembly Elections ,BJP ,Congress ,Jaipur ,Minister ,Surendra Balsingh ,Rajasthan ,Gurmeet Singh ,Mabi ,Chhattisgarh ,Telangana ,Mizo ,National ,Mizoram ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...