×

மாணவ, மாணவிகளுக்கு எம்டிஎம்ஏ, கஞ்சா சப்ளை: பெண் யூடியூபர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு எம்டிஎம்ஏ, கஞ்சா சப்ளை செய்து வந்த பெண் யூடியூபரை கலால் துறையினர் கைது செய்தனர். கேரளாவில் எம்டிஎம்ஏ, எல்எஸ்டி ஸ்டாம்ப் உள்பட சிந்தடிக் போதைப்பொருள் விற்பனை மிகவும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவ, மாணவிகள் தான் இதை பெருமளவு பயன்படுத்துகின்றனர். பெங்களூருவில் இருந்து தான் இந்த சிந்தடிக் போதைப்பொருள் கேரளா, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு வருகிறது.

இதை தடுப்பதற்காக போலீசார், போதைப்பொருள் தடுப்புத் துறையினர், கலால் துறையினர் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் எர்ணாகுளம் குன்னத்துநாடு பகுதியை சேர்ந்த சுவாதி கிருஷ்ணா (28) என்ற பெண் யூடியூபர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாக கலால்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களாக அவரை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இதற்கிடையே நேற்று எர்ணாகுளம் காலடி பகுதியில் வைத்து சுவாதி கிருஷ்ணாவை கலால் துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவரிடம் 3 கிராம் எம்டிஎம்ஏ மற்றும் 20 கிராம் கஞ்சா ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போதைப்பொருளை கைப்பற்றிய கலால்துறையினர் சுவாதி கிருஷ்ணாவை கைது செய்து எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post மாணவ, மாணவிகளுக்கு எம்டிஎம்ஏ, கஞ்சா சப்ளை: பெண் யூடியூபர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Ernakulam, Kerala ,Kerala ,MDMA ,
× RELATED கேரளாவில் ஓடும் ரயிலில் குமரி மாடல் அழகியிடம் அத்துமீறிய வாலிபர் கைது