×

சபரிமலையில் போலீஸ் அராஜகம் தொடர்கிறது; 18ம் படியில் பக்தர் மீது போலீஸ் சரமாரி தாக்குதல்: காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்களை போலீசார் தாக்குவது தொடர்கிறது. நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ஒரு பக்தரை 18ம் படியில் வைத்து தாக்கியதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சபரிமலையில் இந்த மண்டல, மகர விளக்கு சீசனில் போலீசார் தேவையில்லாத கட்டுப்பாடுகளை விதிப்பதால் பக்தர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

நீண்ட நேரம் வரிசையில் நிற்பதால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் உள்பட பலரும் மயக்கமடைந்து விழுகின்றனர். பம்பையிலும், சன்னிதானம் செல்லும் வழியிலும் பக்தர்களை போலீசார் பல இடங்களில் தடுத்து நிறுத்துகின்றனர். தரிசனம் செய்வதற்கு நீண்ட நேரம் ஆவதால் இந்த சீசனில் பல நாட்களில் சன்னிதானத்திற்கு செல்ல முடியாமல் பல பக்தர்கள் பாதி வழியிலேயே தங்களது ஊர்களுக்கு திரும்பிய சம்பவங்களும் நடந்து வருகின்றன.

எருமேலி, பந்தளம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ஐயப்பன் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்து ஊர்களுக்கு திரும்புகின்றனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த 32 பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர். ஆனால் பம்பையில் இருந்து இவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. சுமார் 10 மணி நேரம் காத்திருந்தும் சன்னிதானத்திற்கு செல்ல முடியாததால் அங்கிருந்து ஊருக்கு திரும்பினர். செங்கணூர் ரயில் நிலையத்திற்கு வந்தபோது அருகில் புண்ணக்காடு என்ற இடத்தில் 18 படிகளுடன் ஒரு ஐயப்பன் கோயில் இருப்பது குறித்து அவர்களுக்கு தெரியவந்தது. தொடர்ந்து நெய் தேங்காய் உடைத்து அந்த கோயிலில் தரிசனம் செய்து அனைவரும் சென்னைக்கு திரும்பினர்.

சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூரை சேர்ந்த சில பக்தர்களை 18ம் படியில் வைத்து போலீசார் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் காயமடைந்த ஒரு பக்தர் சன்னிதானம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று பெங்களூருவை சேர்ந்த ராஜேஷ் என்ற பக்தர் உள்பட 22 பேர் சபரிமலைக்கு வந்தனர். ராஜேஷ் தனது நண்பரின் 6 வயது மகனுடன் 18ம் படி ஏறிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அங்கிருந்த ஒரு போலீஸ்காரர் சீக்கிரமாக ஏறும்படி கூறி அவரை சரமாரியாக தாக்கினார். இதில் அவரது முதுகில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சன்னிதானம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அறிந்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு உறுப்பினர், அதிகாரிகள் ஆகியோர் சன்னிதானம் எஸ்பி ஆனந்திடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

பக்தரை தாக்கிய போலீஸ்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர். இது குறித்து விசாரணை நடத்த கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டு உள்ளார்.

The post சபரிமலையில் போலீஸ் அராஜகம் தொடர்கிறது; 18ம் படியில் பக்தர் மீது போலீஸ் சரமாரி தாக்குதல்: காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Thiruvananthapuram ,Bangalore ,Karnataka ,
× RELATED ஆனி மாத பூஜை சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு