×

கும்மிடிப்பூண்டி அருகே சென்னை-கொல்கத்தா சாலையில் ராட்சத பள்ளத்தால் கடும் போக்குவரத்து நெரிசல்: ஒரு கிமீ தூரத்துக்கு வாகனங்கள் நிற்பதால் பொதுமக்கள் அவதி

சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டை சாலையில் ஏற்பட்டுள்ள ராட்சத பள்ளம் காரணமாக சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்தபடி செல்வதால் மாணவர்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.

சென்னையில் இருந்து ஆந்திரா வழியாக வடமாநிலங்களுக்கும், அங்கிருந்து சென்னைக்கும் தினமும் ஏராளமான வாகனங்கள், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று வருகின்றன. இந்நிலையில், கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டையில் சாலையில் திடீரென ராட்சத பள்ளம் உருவானது. அதில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் சிக்கி தத்தளித்தபடி செல்கின்றன. இதனால் இருவழி சாலையில் சாலையின் ஓரத்தில் மட்டுமே வாகனங்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். வாகனங்களை பாதுகாப்பான முறையில் போலீசார் அனுப்பி வருகின்றனர். சாலையின் எதிர் திசையில் வாகனங்கள் செல்வதால் ஆந்திரா செல்லும் திசையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இரு புறங்களிலும் சுமார் 1 கிமீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்லும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகனங்களிடம் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனம் சாலையை முறையாக பராமரிப்பதில்லை. மழை ஓய்ந்து ஒரு மாதமாகியும் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்கவில்லை. இதனால் சாலை மேலும் சேதமாகி போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க வேண்டும்’ என்றனர்.

The post கும்மிடிப்பூண்டி அருகே சென்னை-கொல்கத்தா சாலையில் ராட்சத பள்ளத்தால் கடும் போக்குவரத்து நெரிசல்: ஒரு கிமீ தூரத்துக்கு வாகனங்கள் நிற்பதால் பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Chennai-Kolkata ,Kummidipoondi ,CHENNAI ,Kavarappettai road ,Chennai-Kolkata National Highway ,Andhra Pradesh ,Chennai-Kolkata road ,Dinakaran ,
× RELATED நடைபாதை வியாபாரிகளுக்கு தனி இடம்: வட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு