×

வறுமையை வீசி எறிந்த த்ரோ பால் திருப்பூரில் நட்சத்திரங்களாக ஜொலிக்கும் ஒடிசா வீராங்கனைகள்

திருப்பூர் : திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் வெளி மாவட்டம் மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த பலரும் வேலை செய்து வருகிறார்கள். தினமும் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்கு வந்து கொண்டிருப்பதை காண முடியும்.இவ்வாறு திருப்பூருக்கு பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்கு வந்த இளம்பெண்கள் 3 பேர் தமிழகத்தின் த்ரோபால் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து வருவது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இதில் 2 பெண்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது பலரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது. இளம்பெண்களில் திறமையை கண்டறிந்து கே.பி.ஆர். மில் என்ற நிறுவனம் அவர்களை ஊக்குவித்து தமிழக அணியில் இடம் பிடிக்கும் அளவுக்கு உயர்த்தியுள்ளது.ஒடிசா மாநிலம் பாலேஸ்வர் மாவட்டத்தை சேர்ந்தவர் சாகர் இலன்சடா. இவரது மனைவி சல்மா. இவர்களது மகள் ஷிபானி. 10-ம் வகுப்பு வரை படித்த ஷிபானி குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு திருப்பூர் மாவட்டத்திற்கு வேலை தேடி வந்தார். இங்கு வந்த அவர் திருப்பூர் மாவட்டம் தெக்கலூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பிரிண்டிங் வேலை செய்ய தொடங்கினார். ஒன்றுமே தெரியாமல் வந்த ஷிவானி பிரிண்டிங் வேலையை கற்று செய்ய தொடங்கியுள்ளார்.

இதன் பின்னர் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வந்துள்ளார். இதே நிறுவனத்தில் ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தை சேர்ந்த குருஷிகா சனாம்ஜி, ரூபாதேவி தம்பதியின் மகள் நீலுவும், தமிழ்நாடு திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த காமராஜ், கோவிந்தம்மாள் ஆகிய தம்பதியின் மகள் வைஷ்ணவி ஆகியோரும் பனியன் நிறுவன தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்தனர். கே.பி.ஆர். நிறுவனம் தனது நிறுவனங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு இடையே விளையாட்டு போட்டிகளை நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளது. இந்த போட்டிகளில் பனியன் நிறுவனங்களை சேர்ந்த பலரும் பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ளனர்.

தெக்கலூர் த்ரோபால், கோ கோ, கபாடி அணிக்கு கார்த்திக் என்பவர் 200 பேருக்கு பயிற்சி அளித்து வருகிறார். ஆண்களுக்கு கிரிக்கெட் போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.இந்நிலையில் த்ரோபால் போட்டிகளில் பெருந்துறை, ஈரோடு, சேலம், கரூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த மாநில அளவிலான போட்டிகளில் கே.பி.ஆர்.மில் அணி வெற்றி பெற்று வந்தது. இந்த அணியில் வைஷ்ணவி, நீலு, ஷிபானி இந்த 3 பேரும் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் கோவையில் தமிழ்நாடு த்ரோபால் அணிக்கான தேர்வு நடந்தது. இதில் ஒரு கிளப் அணிக்காக வைஷ்ணவி, நீலு, ஷிபானி ஆகியோர் விளையாடி, அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இதனைத்தொடர்ந்து அங்கிருந்த தமிழ்நாடு த்ரோபால் சங்கத்தினர் தமிழக அணிக்கு 3 பேரையும் தேர்வு செய்தனர். இதுபோல் புதுச்சேரி அணிக்கு மில்லில் வேலை செய்த தீபிகா, பிங்கி, ரீமா, ஆஷா, பாரதி, ரஜினி ஆகிய 6 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் தீபிகாவை தவிர மற்ற 5 பேரும் ஒடிசா, ஜார்கண்ட், சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.இந்நிலையில் தமிழக அணிக்காக தேர்வு செய்யப்பட்ட வைஷ்ணவி, நீலு, ஷிபானி ஆகியோர் கொண்ட தமிழக அணியினர் பங்கேற்ற முதல் போட்டியாக கடந்த மாதம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான த்ரோபால் சாம்பியன்ஷிப் சீனியர் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.வெற்றி பெற்று சாதனை படைத்து திருப்பூருக்கு திரும்பிய வீராங்கனைகளுக்கு திருப்பூர் ரெயில் நிலையத்தில் மேள தாளங்கள் முழங்க நிறுவனர் கே.பி.ராமசாமி, துணைத்தலைவர் சோமசுந்தரம், மனிதவள மேம்பாட்டு தலைமை அதிகாரி வீரகுமார், மனிதவள மேம்பாட்டு அதிகாரி தங்கவேல் மற்றும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில் சத்தமில்லாமல் சாதித்து வரும் வீராங்கனைகளுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழக அணியில் ஒடிசாவை சேர்ந்த 2 வீராங்கனைகள் பலரையும் வியப்படைய செய்துள்ளது.வைஷ்ணவி கூறியதாவது: சிறு வயது முதலே விளையாட்டு போட்டிகளில் அதிக ஆர்வம் இருந்தது. குடும்ப சூழ்நிலை காரணமாக திருப்பூருக்கு பனியன் நிறுவனத்திற்கு வேலை தேடி வந்தேன். இந்நிலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே நிறுவனத்தின் சார்பில் கிடைத்த போட்டிகளில் பங்கேற்றேன். இதில் த்ரோபால் எனக்கு நன்றாக வந்தது. இதனை கவனித்த பயிற்சியாளர் கார்த்திக், தொடர்ந்து பயிற்சி அளித்து வந்தார்.

இதன் காரணமாக சிறப்பாக செயல்பட்டேன். இந்நிலையில் தமிழக அணியில் இடம் கிடைத்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்னர் முதல் போட்டியில் வெற்றி பெற்றதும் உத்வேகம் கிடைத்தது. விளையாட்டில் சிறப்பாக செயல்பட்டு அரசு வேலை பெறுவதே எனது லட்சியம் ஆகும். என்றார்.

ஷிபானி கூறியதாவது: திருப்பூருக்கு எனது பகுதியை சேர்ந்த பலரும் வேலை தேடி வந்தனர். இங்கு வந்தால் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வேலைக்கு வந்தோம். முதலில் வேலையை கற்றுக்கொண்டேன். அதன் பின்னர் விளையாட்டில் விருப்பம் உள்ளவர்கள் தெரிவிக்கும்படி நிறுவனம் சார்பில் கேட்டனர். இதில் த்ரோபால் போட்டியில் பங்கேற்று விளையாடினேன்.
தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டதால் தமிழக அணிக்கு தேர்வானோம். இதனை எனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்த போது மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. தேசிய அளவிலான அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. சிறப்பாக செயல்பட்டு எனது குடும்ப கஷ்டத்தை போக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. என்றார்.

நீலு கூறியதாவது: எனக்கு விளையாடுவதற்கு மிகவும் பிடிக்கும். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக சிறு வயதிலேயே விளையாட முடியாத நிலை இருந்தது. வறுமையை போக்க இங்கு வேலைக்கு வந்தேன். வந்த இடத்தில் வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திக்கொண்டேன். வேலையிலும் சரி, விளையாட்டிலும் சரி சிறப்பாக செயல்படுகிறேன் என பெயர் பெற்றுள்ளேன். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

எங்களது நிறுவனம் சார்பிலும் தொடர்ந்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த உத்வேகத்தின் காரணமாக தமிழக அணியில் இடம் பிடித்திருக்கிறோம். எங்களது 3 பேர் மட்டுமின்றி விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் அனைவருக்கும் சிறந்த ஆதரவு மற்றும் பயிற்சியும் அளித்து வருகிறார்கள். தேசிய அளவிலான அணியில் விளையாடுவதே எனது லட்சியம் என்றார்.

The post வறுமையை வீசி எறிந்த த்ரோ பால் திருப்பூரில் நட்சத்திரங்களாக ஜொலிக்கும் ஒடிசா வீராங்கனைகள் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...