×

கூடலூரில் மயக்க ஊசி செலுத்தி பிடிபட்ட சிறுத்தை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டது!

நீலகிரி: கூடலூரில் பிடிபட்ட சிறுத்தை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டது. கூண்டில் தனிமையில் அடைக்கப்பட்டுள்ள சிறுத்தையை வனத்துறை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

பந்தலூர் பகுதியில் 2 பேரை கொன்ற சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள பகுதியில் கடந்த 5 நாட்களில் சிறுத்தை தாக்கியதில் பழங்குடியின இளம்பெண் மற்றும் ஜார்க்கண்ட் மாநில தம்பதியின் 3 வயது குழந்தை பலியாகினர். 3 பேர் படுகாயமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பந்தலூர் பஜாரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

அதேபோல் பந்தலூர் தாலுகாவிற்குட்பட்ட எருமாடு, சேரம்பாடி, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, உப்பட்டி, தேவாலா, உள்ளிட்ட பகுதிகளிலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் 6 இடங்களில் கூண்டு வைத்தும் 15 இடங்களில் கண்காணிப்பு கேமரா வைத்தும் கண்காணிக்கப்பட்டது. 80க்கும் மேற்பட்ட வனப்பணியாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் கும்கி யானை உதவியுடன் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மதியம் 2 மணி அளவில் ஏலமன்னா பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. இதையடுத்து சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முதுமலை புலிகள் காப்பக வன உயிரின கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் கும்கி யானையில் இருந்து துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினார். சிறிது தூரம் ஓடிய சிறுத்தை புதரில் விழுந்தது. இதையடுத்து வனத்துறையினர் சிறுத்தையை மீட்க முயன்றனர்.

அப்போது வன ஊழியர் ஒருவரின் முகத்தில் சிறுத்தை காயம் ஏற்படுத்தியது. தொடர்ந்து வனத்துறையினர் வலையை போட்டு சிறுத்தையை மடக்கிப்பிடித்து கூண்டில் ஏற்றி வாகனத்தில் கொண்டு சென்றனர். இந்நிலையில் கூடலூரில் பிடிபட்ட சிறுத்தை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டது. கூண்டில் தனிமையில் அடைக்கப்பட்டுள்ள சிறுத்தையை வனத்துறை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

The post கூடலூரில் மயக்க ஊசி செலுத்தி பிடிபட்ட சிறுத்தை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டது! appeared first on Dinakaran.

Tags : Cheetah ,Cuddalore ,Vandalur Zoo ,Kudalur ,Vandalur ,Bandalur ,Nilgiri district ,Pandalur… ,Gudalur ,
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும்